பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 2)
பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 2)
ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தோம். நண்பகல் மணி 12ஐ தொட்டிருந்தது. பத்துமலை படியேறியது போல நாங்கள் அசந்து போயிருந்தோம். அப்படித்தான் பேசிக்கொண்டோம். சின்ன கோவிலாக இருந்தாலும் ஏன் இப்படியொரு அசதி என தெரியவில்லை
சரி; அதுதான் காலையிலேயே குடும்பமாக இந்தக் கோவிலில் பால் ஊற்றிவிட்டோம். தரிசனமும் கிடைத்தது. மீண்டும் பத்துமலை படியேறி பால் ஊற்ற வேண்டுமா. பத்துமலைக்குச் சென்று கீழிருந்தே முருகனைக் கூம்பிட்டுவிட்டு வந்துவிடலாமா என்றேன். வரலாற்றில் முதன் முறையாக நான் சொல்லிய உடனே இல்லாள் எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்றார். அதோடு என்னையும் பொம்மியையும் முதலில் உறங்கி ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்.
ஹப்பாடா… என்றபடி பொம்மியுடன் உறங்கிவிட்டேன். பிற்பகல் மணி 3க்கு; பொம்மி என்னை எழுப்பினாள். பின்னர் என் கையைப் பிடித்து இழுத்து கொண்டு பூஜையறைக்குச் சென்றாள். அங்கு மூன்று குடங்கள் தயார் நிலையில் இருந்தன.
என்னடா இது!. இந்தக் குடும்பத் தலைவன் வார்த்தைக்கு மரியாதை இல்லையா என்று கொஞ்சம் சத்தமாக கேட்டுவிட்டேன். இல்லாள் எந்த பதிலும் இல்லாமல் என்னைப் பார்த்தார். கொட்டாவி வந்தது போல பாவணை செய்துவிட்டு “என்னம்மா இதெல்லாம்..?” என்று நானே என்னை மன்னித்துவிட்டேன்.
“நீங்கதானே… தூங்கு எழுந்திருப்பதற்குள் எல்லாவற்றையும் செய்ய சொன்னீங்க .. அதான் ” என்றவர் அப்பாவியாய் என்னைப் பார்க்கலானார். அடிப்பாவி!
“ஓ அப்போ பத்துமலை முருகனுக்கும் பால்குடம் எடுக்கறோமா?”
“நீங்க என்ன இஷ்டத்துக்கு பேசறிங்க.. சொல்லியிருந்தா நானும் கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேன் தான..”
“சரி இப்ப என்னதான் முடிவு”
“இருங்க.. என்கிட்ட ஒரு யோசனை இருக்கு…”
என்றபடி என்னுடைய குறிப்பு புத்தககத்தில் இருந்து என்னுடைய அனுமதியைக் கேட்காமலேயே கடைசி பக்கங்களை கிழித்தார். அதனை இரண்டாக்கினார். ஒன்றில் ‘பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டும்’ என்றும் இன்னொரு துண்டில் ‘பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டாம்’ என்றும் இருந்தது.
இரண்டையும் குலுக்கி போட்டு; பொம்மியை எடுக்கச்சொல்வோம் என்றார். எனக்கும் அது சரி என்றே பட்டது.
பூஜையறையில் சீட்டுகளை வைத்தோம். பொம்மியை எடுக்கச் சொன்னோம். ஏதோ புதுவித விளையாட்டு போல கைகளைத் தட்டிக்கொண்டே ஒரு சீட்டை எடுத்து அம்மாவிடம் கொடுத்தாள். அதில் ‘பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டும்’ என இருந்தது. எனக்கு இப்போதே கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது.
“என்ன முருகா என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா.. நீதான் எல்லா இடத்துலயும் இருக்கயே… இங்க பால் ஊத்தனா அங்க உனக்கு வராதா…” என்று கேட்டபடி பொம்மியை இன்னொரு முறை சீட்டெடுக்க சொன்னேன்.
“இவ என்ன குழந்தையா இல்ல கிளியா…? இஷ்டத்துக்கு சீட்டு எடுக்க சொல்றீங்க..” என்றபடி இல்லாளும் சீட்டுகளை மீண்டும் சுருட்டி போட்டு பொம்மியை எடுக்கச் சொன்னார். அதற்கு ஏன் என்னை திட்டவேண்டும் எனவும் எனக்கு தோன்றாமல் இல்லை.
இரண்டாவது சீட்டும் பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டும் என இருந்தது. பொம்மி சிரித்தாள். இல்லாளும் இணைந்து கொண்டாள். இல்லாள் குழந்தையொடு சிரிப்பதைப் பார்ப்பதற்கு எனக்கு சிரிப்பு வந்தது.
“சரி எதையும் இரட்டைப்டையாய் விடக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லிருக்காங்க.. மூணாவதா ஒரு முறை சீட்டை எடுப்போம் அதில் இருப்பது போல செய்வோம்” என்றேன்.
தாமதிக்காது இரண்டு சீட்டுகளையும் மீண்டும் தட்டில் வைத்து பொம்மியை எடுக்கச் சொன்னோம்.
பொம்மி சீட்டை எடுக்கும் போது ஒரு சீட்டு தவறி கீழே விழுந்தது. அவள் இன்னொரு சீட்டை கையில் எடுத்தபடி, கீழே விழுந்த சீட்டை என்னை எடுக்கும்படி சொல்லி, இதுவும் விளையாட்டு என எண்ணி கைத்தட்டி சிரிக்கலானாள். அதற்குள் பொம்மியிடம் இருந்த சீட்டை வாங்கி இல்லாள் பிரித்தாள். அதில் ‘பத்துமலையில் பால்குடம் எடுக்க வேண்டாம்’ என இருந்தது.
“நீங்க ஆசைப்பட்டது மாதிரியே முருகன் உங்களை பத்துமலையில் படியேறி பால் ஊத்த வேண்டாம்னு சொல்லிட்டாரு.. சந்தோசமா?” என்றார்.
என் கையில் இருந்த சீட்டை எடுத்து பிரித்தேன். அதில் ‘பத்துமலையில் பால் குடம் எடுக்க வேண்டும்’ என இருக்கிறது. பொம்மியும் சிரித்தபடி இருந்தாள்.
இம்முறை முருகனே என்னை இந்தச் சீட்டை எடுக்க வைத்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும் என தோன்றியது. இனியும் தாமதிக்க வேண்டாம் என்று உடனே பத்துமலைக்கு கிளம்ப தயாரானோம்.
இம்முறை எனக்கு அரிசி மாவும், பொம்மிக்கு விபூதியும், இல்லாளுக்கு பன்னீரும் பால்குடத்திற்கு தயாரானது.
மாலை மணி நான்கிற்கு காரில் ஏறினோம். வழி முழுக்க நெரிசலாக இருக்கும். எப்படியும் கோவிலுக்கு சென்று சேர இரண்டு மணி நேரம் வரைகூட ஆகலாம் என்று பேசிக்கொண்டு பயணமானோம்.
காரில் பொம்மிக்கு பிடித்த ‘சின்னச் சின்ன முருகையா…’ பாடல் ஒலியேறிக்கொண்டிருந்தது. அவளும் அதற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டே தலையாட்டிக்கொண்டே வந்தாள்.
நாங்கள் செல்லும் வழி எங்குமே நெரிசல் இல்லை. சரியாக அரைமணி நேரத்தில் கோவிலை நெருங்கிவிட்டோம். எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
இன்றைய நாளில் இங்கு வாகனத்தை ‘பார்க்’ செய்வது என்ன எளிதா சொல்லுங்கள். வாகனத்தை எங்கோ நிறுத்தி எங்கோ நடந்து கோவிலுக்கு வர வேண்டும்,. அல்லது அதிகப்படியான பணம் கொடுத்து வாகனத்தை நிறுத்த வேண்டும். எந்த சிக்கலும் இல்லாத பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வாகனத்தை வைத்த இடத்திற்கு சரியாக வந்து நல்லபடியாக வாகனத்தை எடுத்து இந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும். இப்படி பல குழப்பங்கள் அந்த நேரத்தில் வருது இயல்புதானே.
ஆனால் நம்மை தன் வீட்டிற்கு அழைத்தது முருகனாயிற்றே; அப்படியா நம்மை சிக்கலுக்கு ஆளாக்கிவிடுவான். இல்லை. இல்லவே இல்லை. இதுவரை நான் சந்திக்காக ஓர் அதிசயத்தை பத்துமலையான் அங்கு எங்களுக்காய் நடத்தினான்.
பத்துமலையான் நடத்திய அந்த திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா…?
தொடரும்..
0 comments:
கருத்துரையிடுக