பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 09, 2021

வாசிப்பும் வாழ்த்தும்

வாசிப்பும் வாழ்த்தும்



  பாராட்டுகளும் பரிசுகளும் வெளியில் இருந்து மட்டும் கிடைப்பது அல்ல. நமக்கு நாமே கூட கொடுத்துக் கொள்ளலாம். நமது சிறு சிறு அடைவுகளுக்கும் நமக்கு நாம் கொடுக்கும் பாராட்டுகளும் பரிசுகளும் ஆழ்மனதில் இருந்து நமக்கான ஆற்றலை அதிகப்படுத்துகின்றன. தன்னை அறியாதவனால் எதனையும் சுலபத்தில் அறிய முடியாது என்பது போல தன்னை மதிக்காதவன் பிறரின் மதிப்புகளையும் புரிந்துக் கொள்ள முடியாதவன் ஆகிறான். 

   எனக்கு நானே பாராட்டி பரிசளிப்பது என் சிறுவயது பழக்கமாக இருந்தது. விளையாட யாரும் உடன் இல்லாத சமயங்களில் கூட நான்கு ஐந்து பொம்மைகளை வைத்து நான்கு பேராக நான் ஒருவனே பேசி , சண்டையிட்டு சமாதானம் செய்து விளையாடிக் கொள்வேன். அதிலிருந்து மிமிக்ரி எனப்படும் பலகுரலில் பேசவும் பழகிக்கொண்டேன். அப்பழக்கம் என் தனிமைக்கு ஒரு தீர்வாக அமைந்தது. அதிலிருந்து அடுத்த கட்டமாகத்தான் என் வாசிப்பை வளர்க்க ஆரம்பித்தேன். நண்பர்களுக்கு புத்தகங்களைப் பரிசளிக்கவும் எனக்கு நானே புத்தகங்களைப் பரிசளிக்கவும் செய்யத்தொடங்கினேன். எனது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை மூலமாகவும் வாசகர்களுக்கு புத்தகங்களைத் தொடர்ந்து பரிசுகளாகவும் கொடுத்து வருகின்றேன்.

   வாசித்த புத்தகங்கள் பற்றி முடிந்தவரை சிறு குறிப்பாவது எழுதிப்பகிரவும் செய்கிறேன். அப்படி சிறு குறிப்புகளாகத் தொடங்கி ஐந்து ஆறு பக்கங்கள் வரை எழுதும் படியும், வாசித்தது குறித்து மணி கணக்காக பேசும் படியும் வளர்ந்து  வந்திருக்கிறது.

   என் உடல் சார்ந்த மனம் சார்ந்த பல உபாதைகளுக்கு புத்தகங்கள் பெரும் துணையாக இருந்து வருகின்றது. ஒரு முறை மருத்துவமனை படுக்கையில் தூக்கம் வரமால் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மருத்துவர் அப்புத்தகம் பற்றி நேரம் எடுத்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். 

   இவ்வாண்டு தொடக்கம் வாசித்து முடித்த புத்தகங்கள் கலைந்தும் அடுக்கியும் என் மேஜையில் இருக்கின்றன. கொஞ்சம் பிரமிப்பு கொடுக்கவே செய்தது. இவ்வாண்டில் பாதியில் இருக்கின்றோம். ஆறாம் மாதம் வரைக்கும் வாசித்த புத்தகங்களை ஒரு பட்டியல் போட்டுப்பார்க்கலாம் என தோன்றுகிறது. 

ஜூன் 2021 வரை வாசித்து முடித்த புத்தகங்கள் :

நாவல்கள் 

1. ரசவாதி – பாலோ கொயலோ (மொழிபெயர்ப்பு)
2. வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி - நக்கீரன்
3. இடைவெளி – எஸ். சம்பத்
4. ரூஹ் – லஷ்மி சரவணகுமார்
5. ரப்பர் - ஜெயமோகன்
6. கானகன் – லஷ்மி சரவணகுமார்

சிறுகதைகள் 

7. இரண்டாம் லெப்ரினன்ட் – அகரமுதல்வன்
8. போக புத்தகம் – போகன் சங்கர்
9. கண்ணாடி – ஜி. முருகன்
10.  கறுப்பு நாய்க்குட்டி – ஜி. முருகன்
11. பெர்னுய்லியின் பேய்கள் – சித்துராஜ் பொன்ராஜ்
12.  தாஸ்தயொவ்ஸ்கி கதைகள் – எம்.ஏ.சுசீலா (மொழிபெயர்ப்பு)
13.  ஜார் ஒழிக – சாம்ராஜ்
14.  மாறிலிகள் – சித்துராஜ் பொன் ராஜ்

கவிதைகள்

15. வேட்டுவம் நூறு – மௌனன் யாத்ரிகா
16.  ஆரண்யம் – கயல்
17.  எழிலிக்கு வேரின் சாயல் – நெய்தல்
18.  பேனாவுக்குள் அலையாடும் கடல் – கலாப்ரியா
19.  தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி – கலாப்ரியா

கட்டுரைகள் 

20.  கதை சொல்லியின் 1001 இரவுகள் – சித்துராஜ் பொன்ராஜ்
21.  தன் மீட்சி – ஜெயமோகன்
22.  மலேசிய நாவல்கள் – ம.நவீன்
23.  தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி – சு.வேணுகோபால்
24.  சொற்களின் புதிர்பாதை – எஸ்.ராமகிருஷ்ணன்
25.  எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
26.  மேற்கின் குரல் - எஸ்.ராமகிருஷ்ணன்
27.  எழுத்தே வாழ்க்கை - எஸ்.ராமகிருஷ்ணன்
28.  வாசக பர்வம் - எஸ்.ராமகிருஷ்ணன்
29.  நாவலெனும் சிம்பொனி - எஸ்.ராமகிருஷ்ணன்
30.  இலைகளை வியக்கும் மரம் - எஸ்.ராமகிருஷ்ணன்
31.  கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

  வாசித்து முடிந்த முப்பத்தியொரு புத்தகங்களில் இதுவரை 21 புத்தகங்கள் பற்றிய என் வாசிப்பு அனுபவத்தை எழுதிப் பகிர்ந்துள்ளேன். இன்னும் பத்து புத்தகங்கள் பற்றி இவ்வாண்டு எழுதவேண்டும் என முயல்வேன். அதற்கிடையில் அடுத்தடுத்த வாசிப்பிற்கு என்னை ஆயுத்தப்படுத்திக் கொண்டே செல்கிறேன்.

  மனம் விரும்பும் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்வதன் வழி கிடைக்கும் அனுகூலம் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். என் அனுகூலமாக நான் கருதுவது என் கசப்பான கடந்த காலத்தை மறக்கவும் எதிர்காலத்தை எதிர்க்கொள்ளவும் நிகழ்காலத்தில் வன்மம் இல்லாமலும் வாழவும் செய்கிறேன். 

  இதற்கிடையில் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன் அவ்வபோது கவிதைகளும் சிறுகதைகளையும் எழுதுகின்றேன். இவ்வாண்டு புத்தகம் வெளியிடும் எண்ணமும் உண்டு. 

   எழுதுவதும் வாசிப்பதும் என்னை இயக்கும் கச்சா பொருளாக பாவிப்பதால் அதைத் தவிர்த்து தேவையற்ற அரட்டைகளிலும் வன்மங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்த்தே வருகிறேன். உடன் பழகுகின்றவர்களுக்கும் வாசிப்பு குறித்து உரையாடவும் செய்கிறேன்.
வாசிப்பு கொண்டாட்டத்தை இரட்டிப்பாக மேலும் சில புத்தகங்களை எனக்கு நானே பரிசளித்துக் கொள்கிறேன்.

  இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். முகநூலில் இருக்கும் சில வாசிப்பு குறித்தான குழுக்கள் வாசிப்பின் வேகத்திற்கும் வாசிப்பிற்கு பிறகான  கருத்து பரிமாற்றங்களுக்கும் உதவுகின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் 'வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்', 'வாசிப்பை நேசிப்போம்', 'புக்ஸ் ரீடர்ஸ் தமிழ்' , 'புத்தகச்சிறகுகள் வாசிப்பாளர் குழு' போன்ற  குழுக்களை சொல்லலாம். குழு நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் அன்பும் நன்றியும்.


அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

2 comments:

Anuradha Chelliah சொன்னது…

Very interesting. Keep reading and keep inspiring others through your writing.

தயாஜி சொன்னது…

அன்பும் நன்றியும்.... :)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்