பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - முதல் கட்டுரையை முன் வைத்து


    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

    தொடக்க கட்டுரையாக 'புதுமைப்பித்தனின் படைப்புலகம்: சங்கிற்கும் அடங்கிடாத புதுவெள்ளம்' என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதனை வாசிக்க வாசிக்க அத்தனை ஆச்சர்யங்களை அக்கட்டுரையின் வழி உணர முடிகின்றது.
    புதுமைப்பித்தனை நான் வாசிக்கத் தவறிய இடத்தில் இருந்து ஒரு பார்வையை ஆசிரியர் முன் வைத்துச் செல்கிறார்.
    நான் எழுத வந்த தொடக்க காலத்தில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித்தேடி வாசித்தேன். அன்றைய மனநிலையும் அதையொட்டிய என் அனுபவங்களும் கதையை வாசித்து முடிக்கவும் கதையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என ஒற்றை வரியில் தெரிந்துக் கொள்ளவுமே ஆர்வம் காட்டியிருந்தேன். அதன் பின் வாசிப்பு வளர வளர வாசிப்பை ஒட்டிய கேள்விகளும் மனதில் எழ ஆரம்பித்தன.
    இன்றைய கதை வாசிப்பில் என்ன சொல்லப்படுகிறது என்பதைக் காட்டிலும் ஏன் சொல்லப்படுகிறது யாரால் சொல்லப்படுகிறது யாருக்காக சொல்லப்படுகிறது போன்ற பல கேள்விகள் உருகொள்கின்றன.
    சு.வேணுகோபால் அவர்களின் இந்த கட்டுரை புதுமைப்பித்தனை மீண்டும் வாசிக்கும் எண்ணத்தை வாசிப்பவர்களுக்கு கொடுக்கின்றது. அன்றைய வாசிப்பில் தவறவிட்ட கணங்களை ஆசிரியரின் வாசிப்பு அனுபவத்தின் ஊடே கண்டுகொள்ளவும் அதிலிருந்து வேறொரு தருணத்திற்கு கதையை கொண்டுச் சொல்லவும் இக்கட்டுரை உதவும்.
    சங்குத்தேவனின் தர்மம், ஞானக்குகை, புதிய கூண்டில், நாசகார கும்பல், வாடாமல்லிகை, வழி, பிரம்மராஷ்ஸ், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒரு நாள் கழிந்தது போன்று பல கதைகளைக் குறித்து சு.வேணுகோபால் இக்கட்டுரையின் வழி விவரிக்கின்றார். பல இடங்களில் இப்படியெல்லாம் கூட கதைகளை அணுக முடியுமா என்கிற சுயகேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
    அதோடு புதுமைப்பித்தனின் கதைகளில் உள்ள சிக்கலைப் பற்றியும் இக்கட்டுரையில் பேசத் தவறவில்லை.
    மொத்தத்தில், புதுமைப்பித்தன் கதைகளை மீள்வாசிப்பு செய்வதற்கு ஏதுவாக அமையும் கட்டுரை இது. எங்கிருந்து தொடங்கலாம், எப்படி கண்டறியலாம் போன்ற நுணுக்கங்களுடம் இக்கட்டுரை நமக்கு வழி காட்டுகிறது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்