பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 14, 2021

பாவம், செல்லமுத்து அண்ணன்

 

#குறுங்கதை 2021 - 5


- பாவம், செல்லமுத்து அண்ணன் -

    நள்ளிரவு மணி 12ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது விடுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. ஆனால் உள்ளே செல்ல வேண்டும். எப்படி? வாசலில் காவல் காக்கும் செல்லமுத்து அண்ணனை ஏமாற்றுவது தவிர வேறு வழியில்லை. அவர் ஒரு வெகுளி. இருப்பதிலேயே சுலபமானது அதுதான்.

    சிவனும் செல்வாவும் திட்டம் போட்டார்கள். மோட்டார், வாசலில் வந்து நின்றது. கடிகாரத்தில் மணியைப் பார்த்துக்கொண்டே செல்லமுத்து அண்ணன் வந்தார்.

"இவ்வளவு நேரமாவா வெளியில் சுத்துவீங்க.. மணி என்ன தெரியுமா தம்பி...?"

"சாரிணா...நான் கடிகாரம் கட்டலணா..?" என்றான் சிவன்.

    "நீங்க கட்டலன்னா என்ன தம்பி.. அதான் பின்னால இருக்கற தம்பி கட்டியிருக்கே கேட்டு சொல்லுங்க...? என்றார் நக்கலாக.

சிவன் அதிர்ச்சியானான். செல்லமுத்து அண்ணனும் அதனை கவனித்தார்.

"அண்ண.. என்ன சொல்றீங்க...?"

"அந்த தம்பிகிட்ட மணி கேட்க சொன்னேன்.."

"ஐயோ அண்ண விளையாடாதீங்க.. நான் மட்டும்தான இருக்கேன்.. வேற யாரு இருக்கா....?"

    சிவன் மீண்டும் திரும்பிப்பார்த்தான். ஏற்கனவே திட்டமிட்டபடி , யாரும் அங்கு இல்லாதது போல நடிக்கலானான். ஆனால் பின்னால் அமர்ந்திருக்கும் செல்வா, வைத்த கண் வாங்காமல் செல்லமுத்து அண்ணனையேப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் சிவன் கூட பயந்துவிட்டான். ஆனாலும் அவர்களின் நாடகம் நின்றபாடில்லை.

"தம்பி நிஜமாவே உங்க கண்ணுக்கு யாரும் தெரியலையா...?"

    "அண்ண.. இனி லேட்டா வரமாட்டேன்.. இப்படி பயமூட்டாதீங்க... என்னமோ மாதிரி இருக்கு..."

    "சரி சரி.. தம்பி பின்னால யாருமில்ல.. நான் சும்மாதான் கேட்டேன்.. நீங்க உள்ள போங்க.. தம்பீ.. ரூம்குள்ள போனதும் முதல் வேலையா கை கால் கழுவிடுங்க..."

"குளிச்சிடறேன் ணா போதுமா..? நான் போகவா...?"

    சிவன் புறப்பட்டான். மோட்டார் மறையும் வரை செல்வா செல்லமுத்து அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    "டேய் டேய்.. போதும்டா.. அந்த அண்ணன் பாவம்.. நீ பாக்கறதைப் பார்த்தா எனக்கே பயமா இருக்கு..." என்று சிவன் சொல்லவும் இருவரும் சிரித்துக்கொண்டு அறைக்கு சென்றனர்.

    அறையில் யாரும் தூங்கவில்லை. ஏதோ பீதியில் இருப்பதாகத் தெரிந்தது. சிவனும் செல்வாவும் விசாரித்தனர்.

    "என்ன ஆச்சோ தெரியலை. நம்ம செல்லமுத்து அண்ணன் மத்தியானம் தூக்கு போட்டுகிட்டாருடா..!! ச்சே.. நல்ல மனுஷன்...." என்றான் ஒரு நண்பன்.

    சிவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. திரும்பி செல்வாவைப் பார்க்கிறான். செல்வா வாசலில், எதையோ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். அங்கு செல்லமுத்து அண்ணன் நின்றுக்கொண்டிருக்கிறார்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்