பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 09, 2021

தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி - பதினொன்றாவது கட்டுரையை முன்வைத்து

(பதினொன்றாவது கட்டுரையை முன்வைத்து...)

தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

*பதினொன்றாவது கட்டுரையாக 'அசோகமித்திரன் : பறிபோகும் நம்பிக்கையின் துயரக்காட்சிகள்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.* 

வாசிக்க வாசிக்க அசோகமித்திரன் என்னும் படைப்பாளி மீது பெரிய மரியாதையும் ஆர்வமும் ஏற்படுகின்றது. மற்ற படைப்பாளர்களில் இருந்து அசோகமித்திரன் எவ்வாறு தனித்து தெரிகின்றார், என்பதனை அதற்கான கதைகளோடு கட்டுரையாசிரியர் சொல்லியுள்ளார். 

'நாம் வண்டித் தடத்தின் வழியாக நடந்து சென்றால் அசோகமித்திரன் இரும்புப்பாதை வழியாக கடப்பார்' என்று சொல்வதின் வழி அசோகமித்திரனை புரிந்துக்கொள்ளும் வழியை எளிமையாக்குகிறார். ஆனால் அந்த எளிமையான அறிமுகம் ஆழ்கிணறு பொன்ற வாழ்வின் இன்னொரு பக்கத்தை அவரது கதைகளில் நமக்கு காட்டுவதையும் குறிப்பிடுகின்றார்.


பிரயாணம் சிறுகதை பலருக்கும் பல வகையான அனுபவத்தைக் கொடுக்கும். அவ்வாறே, கட்டுரையாசிரியர் தனது வாசிப்பு அனுபவத்தை முன் வைக்கின்றார். ஆங்காங்கே அசோகமித்திரனின் நாவல்கள் குறித்து கோடிட்டு காட்டுகின்றார்.

நாவலுக்கும் சிறுகதைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளையும் அதன் மாற்றங்களை சொல்லும் போது புதியவர்களுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

எழுத்தாளரின் படைப்புகளை அதன் பலம் பலவீனம் கொண்டே எழுதியுள்ளார். ஆனாலும் பலமே அசோகமித்திரன் படைப்புகளில் ஓங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

அவை வெறும் கதைகள் அல்ல, காலத்தை ஆவணப்படுத்தும் செயல்.  நாம் கடந்த வந்த காலங்களை, மனித  வாழ்வின் நெருக்கடிகளை இவரின் கதைகள் வழி கண்டுகொள்ளலாம் என்கிறார்.

சின்ன வருத்தம், எனக்கு மிகவும் பிடித்த புலிக்கலைஞன் பற்றி ஒன்றும் சொல்லாததுதான். ஆனால் வாசிக்கத் தவறிய பல சிறுகதைகளைத் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்