பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - எட்டாவது கட்டுரையை முன்வைத்து

 

(எட்டாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *எட்டாவது கட்டுரையாக 'தி.ஜானகிராமன் : அபூர்வமான சொல்முறைக் கலைஞன்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இதுவரை வாசித்த கட்டுரைகளின் சற்றே நீளமான கட்டுரை. ஆனால் வாசிக்க வாசிக்க கட்டுரை முடிந்துவிடக்கூடாது என்கிற எண்ணமே மேலோங்கியது.
    கட்டுரையாளருக்கு தி.ஜானகிராமன் மீதான அன்பையும் விருப்பத்தையும் கட்டுரை முழுக்க நம்மால் உணர முடிகிறது. எப்படி இந்த அளவிற்கு தி.ஜாவின் எழுத்துலகில் இவரால் இத்தனை இலகுவாக நுழைந்து வர முடிந்தது என்கிற ஆச்சர்யத்தை எப்படி சொல்வது.
    கட்டுரை முழுக்க தி.ஜாவின் படைப்புலகம் பற்றி பேசியிருந்தாலும், வாசகர்களுக்கும் இன்றைய எழுத்தாளர்களுக்கும் தேவையான பல உள்ளீடுகளை கட்டுரையாளர் எழுதியுள்ளார்.
    முந்தைய கட்டுரைகளில் இல்லாத அளவிற்கு இந்த கட்டுரையில் பல விடயங்கள் உள்ளன. தி.ஜாவின் சிறுகதைகளைப் பற்றி மட்டுமில்லாமல் அவரின் நாவல்களின் படிமத்தையும் கோடிட்டு காட்டியுள்ளார்.
    'தி.ஜானகிராமன் எந்தக் கலைக்கோட்பாடுகளின் கண்ணாடிகளையும் மாட்டிக்கொண்டு சமூகத்தைப் பார்க்கவில்லை. மழை போல, வெயில் போல, உப்புசம் போல, காற்றுப்போல இயங்குகின்ற சமுக இயக்கத்தில் கரைந்தவர்' என்கிறார் ஆசிரியர்.
    கதாப்பாத்திரங்களின் உடல் மொழியில் இருந்து அவர்களின் உரையாடல் வறை தி.ஜா எந்த அளவிற்கு கவனம் செலுத்தியுள்ளார் என சொல்லும் அதே வேளையில் அது தொழிற்பட்டது போல அல்லாமல் இயல்பாக அவருக்கு கைவந்ததாகச் சொல்கிறார்.
    வழக்கம் போல , தி.ஜாவின் முக்கியமான சிறுகதைகளைச் சொல்லி, அதற்கான காரணத்தையும் சொல்கிறார். இந்த கட்டுரைக்கு பிறகு நாம் வாசிக்கும் அல்லது மீள்வாசிப்பு செய்யும் தி.ஜாவின் படைப்புகள் வேறொரு பார்வையைக் கொடுக்கும் என நம்புகிறேன்.
    ஒரு வாசகனாக, ஒரு எழுத்தாளனாக எனக்கு பல வழிகாட்டுதல்களை இக்கட்டுரையின் வழி கட்டுரையாளர் சொல்லியுள்ள உணர்வுடன் இந்த கட்டுரையை இன்னொரு முறை வாசிக்கின்றேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்