நாகம்மாளின் மனக்குறிப்புகள் – புத்தக வாசிப்பு
மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு,
‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’. வழக்கமாக
, கதைகளை இதழ்களுக்கோ அல்லது ஏதும் ஊடங்களுக்கோ அனுப்பி அது பிரசுரமாகிய பின் தொகுத்து
புத்தகமாக்குவார்கள். அல்லது புத்தகம் வெளியீடு செய்வதற்கு முன்னமே அதையொட்டிய சில
கதைகளை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரிக்க வைப்பார்கள்.
இந்த இரண்டும் இல்லாமல், தனது வலைப்பூவிலும் அவ்வபோது
முகநூலிலும் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளார் கதாசிரியர். தொடர்ந்து
வாசிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு பல்வேறுபட்ட பதிப்புகளில் வெளிவந்துள்ள
திருக்குறள் புத்தகங்களை சேகரித்து வருகின்றார். மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களையும்
தொடர்ந்து சேமித்து வருகின்றார். தற்போது வெளியீடு காணும் புத்தகங்கள் முதல் கிடைக்காத
புத்தகங்கள் வரை அதில் அடங்கும். இச்செய்தி வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும்
என நம்புகின்றேன்.
இனி சிறுகதை தொகுப்பிற்கு செல்லலாம்;
மொத்தம் 15 கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு
கதையும் ஒவ்வொரு வகையில் நம் மண்ணில் கதையைச் சொல்ல முற்பட்டிருக்கின்றது. அது முழுமையடைந்துள்ளதா
என்றால் அதன் முயற்சி தெரிகிறது எனலாம்.
முதல் கதை, ‘மனைவி காத்திருக்கிறாள்’. இக்கதை எனக்கு ஒரு புதுமொழியை நினைக்க வைத்தது.
‘ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்கு துடைப்பக்கட்டைதான்’. பெரும்பாலும் கணவன்களுக்கு
இதனைச் சொல்லி கிண்டல் செய்வோம். சொல்லப்போனால், பெரும்பாலான கணவன்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும்.
பிறந்த விட்டிற்கு சென்றுள்ள மனைவியை அழைத்து வர செல்லும் கணவன் அதற்கான இரயிலில் ஏறினாரா
இல்லையா என்பதுதான் கதை. ஒரு கதைக்கு இதுமட்டும் போதுமா என்ன.? கணவனின் அந்த பயணத்தை
கதாசிரியர் சொல்லிக் கொண்டுச் செல்லும் போது நமக்கேக்கூட ஓரளவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது.
நம்மில் பலர் பொது போக்குவரத்து சேவைக்கு இவ்வாறான அனுபவங்களைப் பெற்றிருப்போம். ஆனால் கதையின் முடிவு
கதையோட்டத்தை காப்பாற்ற தவறிவிட்டதாகப்படுகிறது. இத்தனை இன்னல்களை தாண்டி, கணவன் தன்
மனைவியை அழைத்து வருவதற்கு பேருந்தில் ஏறிவிட்டதில்
என்ன கதை இருக்கிறது. முழு கதையையும் மாற்றிப்போடும் சூட்சுமம் இருக்கும் கதை முடிவில் இன்னும் கவனம்
எடுத்திருக்கலாம். பல பாடுகள் கடந்து விட்ட நிலையில் மனைவி தொலைபேசியில் அழைக்கும்
சமயத்தில், சில நொடிகளின் இரயிலை தவறவிட்டு நிற்பதில்தான் இக்கதை ஒளிந்திருக்கிறது.
ஆனால் இக்கதையின் முடிவு இக்கதையை அனுபவ பத்தி போல அமைத்துவிட்டது.
அடுத்த கதை, ‘வெளியே ஒரு வானம்’. தன் வகுப்பு மாணவனின் வித்தியாசமான செய்கையால் ஈர்க்கப்படும்
ஆசிரியை அதற்கான காரணம் தெரிந்ததும் உடைந்துப் போகிறார். இக்கதை சொல்லப்பட்டிருந்த
விதம் கவர்கிறது. முன் யூகங்கள் ஏதும் இக்கதைக்கு இடம் கொடுக்கவில்லை.
‘ஆன்மாக்களின்
தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும்’.
புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கும் கதை. இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இக்கதை
மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். நாவலுக்கான கருவை மிக சுக்கமாக சொல்ல முயன்று அது
தன் பக்கங்களின் சிலவற்றை அதிகப்படுத்தியது போல இருக்கிறது. இதனை நாவலாகவோ குறுநாவலாகவோ
கதாசிரியர் முயற்சிக்கலாம். அது இக்கதை வாசிப்பின் அனுபவத்தை முற்றிலும் வேறொரு அனுபவத்தைக்
கொடுக்கும்.
‘வட்டிப்பணம்’ . பணம் படுத்தும் பாடு. பணமே பிரதானம் என்னும் மனிதனின்
கடைசி நிமிடம் எப்படி இருந்துவிடும் என சொல்லும் கதை. இக்கதை சொல்லப்பட்ட விதம் வாசகர்களை
கவரும். மெல்ல மெல்ல காய்களை நகர்த்தி முன்னேறிச்
செல்வது போல கதையை ஆசிரியர் முன்னகர்த்தி செல்கிறார். கதையில் முடிவு முழு கதையையும்
மீண்டும் நினைக்க வைக்கிறது.
‘ஒற்றைச் செருப்பாய்’ இந்நாட்டுச் சூழலில் தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை
சொல்லும் கதை. பலரும் இத்தகைய கருவினை கையாண்டிருக்கிறார்கள். கதாசிரியர் தன் பார்வையில்
கதையை நகர்த்துகிறார்.
‘அற்றைக்கூலி’ வாசித்து முடிக்கவும் மனதை கணக்க செய்துவிடுகிறது.
எதற்காக போராடுகின்றோமோ அது கைக்கு எட்டிய நொடியில் நாம் அதனைவிட்டு இன்னும் அதிகம்
தூரம் நகர்ந்துச் சென்றுவிடும் உணர்வு மேலிடுகிறது.
‘கலைந்து செல்லும்
மேகங்கள்’, சகோதரியின் மரணத்திற்கு
செல்லும் வழியில் நாயகனின் நினைவுகள் பின் செல்கின்றன.
‘நெருப்புப்
பிண்டங்கள்’, சில பக்கங்கள் கொண்ட
கதைதான். ஆனால் கதையின் முடிவு என்னை பெரிதும் பாதித்தது என்றே சொல்லவேண்டும். தாத்தாவும் பேத்தியும் இருக்கும் வீட்டில் திருடர்கள்
நுழைகிறார்கள். தடுக்க முயன்ற தாத்தா கொலை
செய்யப்படுகின்றார். அந்த ஏழை வீட்டில் திருடர்கள் பறித்துக்கொண்டு போனது தாத்தாவின்
உயிர் மட்டுமல்ல அந்த பேத்தியின் எதிர்காலத்தையும் என கதை முடியும் போது வாசிக்கையில்
நம்மால் அவ்வளவு சீக்கிரத்தில் மீண்டு வர முடியாது.
‘பள்ளி வண்டி’, கதையும் இங்குள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்தான்.
பெரும்பாலும் பேருந்து ஓட்டுனர்கள் குறித்து பெரிதாக பேசுவதில்லை. இக்கதை அவர்களின்
சிக்கலைக் காட்டுகிறது.
‘தாயுமானவள்’, ஆசிரியை குறித்த கதை. பெரிய திருப்பங்கள் இல்லை.
நன்னெறியை போதிக்கும் வகை கதை.
‘மானுடம் கடந்த
மனிதர்கள்’, தலைப்பிற்கு ஏற்றார்
போல அமைந்துவிட்ட கதை. தினமும் ஒரு முறையாவது
வித்தியாசமான மனிதர்களை நாம் சந்திக்கக் நேரும். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு என்னதான் தேவை போன்ற எந்த புரிதலுக்கும் நம்மால் வர முடியாது ஆனாலும் நம்மால்
அவர்களை புறக்கணிக முடியாது. கதையின் மையம் இதுதான்.
அடுத்த தலைப்பு, புத்தக தலைப்பைக் கொண்டது. ‘நாகம்மாளின் மானக்குறிப்புகள்’. அம்மாவை
மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் நாயகன். அங்கு சந்திக்கும் நபர் மூலம் பழைய தங்களின்
தோட்டத்து பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்படி கதை நகர்கிறது. குலதெய்வ வழிபாடு
குறித்து இக்கதையில் குறிப்பிடும் தகவல் அதிர்ச்சியைக் கொடுக்கின்றது. ஜீரணிக்க முடியவில்லை.
அந்த காலத்தில் பூப்படைந்த பெண்களைக் கண்டு வேற்று இன மன்னர்களும் சிப்பாய்களும் அதிகாரம்
படைத்தவர்களும் வன்முறை செய்து இச்சையைத் தீர்ப்பதற்காக அவர்களை இழுத்துப் போவார்களாம்.
அதனை தடுப்பதற்காகவே, பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தவுடன், வீட்டின் முன் சிறு குழியை
வெட்டி அந்த பெண்ணை அதில் அமரவைப்பார்களாம். அவள் கையில் அகல் விளக்கைக் கொடுத்து அவள்
மேல் தென்னை மட்டைகளைப் போட்டு மூடி விடுவார்களாம். அந்த பெண் குழிக்குள்ளேயே எரிந்து
பூபோல் சாம்பலாகி விடுவதால் அவளையே குலதெய்வமாய் வணங்குகிறார்களாம்.
‘நிழல் மரக்கோடுகள்’ கதையும் பழைய வாழ்க்கையைச் சொல்லி செல்கிற கதைதான்.
போர்க்காலம், கொடுமைக்காலம், கலவரக்காலம், வசந்தகாலம் என நான்கு காலத்தின் சூழலைப்
படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்னும் அதிகமாக சொல்லியிருக்க கூடும் வாய்ப்புகள்
இருந்தும் இக்கதையில் கதாசிரியர் அதனை செய்யவில்லை. செய்திருக்கலாம்.
தொகுப்பின் நிறைவான கதை, ‘சுடுகாட்டு காளி’. சிறிய கதை. மேலும் செறிவாக்கம் செய்திருந்தால், ‘குறுங்கதை’
வடிவில் கிடைத்திருக்கும். இக்கதையை நேர்த்தியாக
சொல்ல முயன்றுள்ளார். சாமாண்யன் நான்கு நம்பர் எடுக்கும் கதை. அதற்காக மந்திரவாதியுடன்
சுடுகாட்டிற்கு பூஜை செய்ய செல்கிறார்கள். அங்குதான் சிக்கல் ஏற்படுகிறது. நினைத்துப்
போன நான்கு நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதையின் சுவாரஸ்யம். கதையின் கடைசி
பத்தி நம்மை நோக்கி நாமே சிரிக்கும்படி ஆகின்றது.
மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் இந்த ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’ அவரின் முதல்
சிறுகதை தொகுப்பு. அதற்கான முயற்சிகள் தெரிகின்றது. இப்புத்தகம் வாசிப்பதற்கு ஏற்றது.
வழக்கமாக வாசித்துப் பழகிய கதைகளில் இருந்து சற்றே மாறுபட்ட கதைபோக்குகள் கொண்ட கதைகளாக
இக்கதைகளைச் சொல்லலாம்.
அடுத்தடுது இன்னும் ஆழமான படைப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.
கதாசிரியருக்கு வாழ்த்துகள்.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக