பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பத்தாவது கட்டுரையை முன்வைத்து

(பத்தாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பத்தாவது கட்டுரையாக 'ஜெயகாந்தன் : மரபைச் செழுமையாக்கியவர்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    தமிழ்ச்சூழலில் ஜெயகாந்தனின் பெயர் பிரபலம். சொல்லப்போனால் அவரின் படைப்புகளை படிக்காதவர்களுக்குக் கூட ஜெயகாந்தன் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கும். அதற்கான காரணத்தைக் கட்டுரையில் கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.
    இக்கட்டுரைக்கு ஆரம்பிப்பதற்கு முன் ஆசிரியர் சிலவற்றை தெளிவுப்படுத்தியுள்ளார். தனது இளமை காலத்தில் ஜெயகாந்தனின் அத்தனைப் படைப்புகளையும் தேடித்தேடி வாசித்தது, அவை ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவற்றை பகிர்ந்துக் கொள்கிறார். ஆனால் நல்ல வேளையாக தன் வாசிப்பை விசாலப்படுத்தியதின் வழி ஒரு வட்டத்திற்குள் தான் சிக்கிக்கொள்ளாமல் இருந்ததாகச் சொல்கிறார். கட்டுரையில் அதற்கான காரணம் நமக்கு புலப்படுகிறது.
    என்னதான் தனக்கு விருப்பமான எழுத்தாளராக இருந்தாலும், விமர்சனம் என வரும்பொழுது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது முக்கியமான கேள்வி. முகநூலில் தனக்கு லைக் போட்டவர் என்ற ஒரு காரணமாக போலியாக விமர்சனங்களை முன் வைப்பவர்களும், விமர்சித்துவிட்டார்கள் என்பதால் முகநூலில் ப்ளாக் செய்பவர்களுக்கும் அவரவர்களுக்கான இடத்தை இக்கட்டுரை காட்டிக்கொடுத்து விடுகிறது.
    'புதுமைப்பித்தன், மரபில் நின்று கலகம் செய்தார். ஜெயகாந்தன் வஞ்சிக்கப்பட்டவர்களின் சார்பாக நின்று மரபிற்குள் புதிய புரிதலை உண்டாக்கினார்.' என்கிறார் ஆசிரியர். கூடவே ஜெயகாந்தனின் பலவீனங்களையும் சொல்கிறார். யோசிக்கையில் இன்றளவும் அந்த பலவீனம் பல படைப்பாளிகளிடம் இருப்பதை உணர முடிகின்றது.
    'அவரது நடையில் இருக்கும் துல்லியம் கதைகளுக்கு எவ்வளவு பலத்தைக் தருகின்றனவோ அதே அளவு பாலகீனத்தையும் தருகின்றது' என சொல்லும் கட்டுரையாளரின் விளக்கம் நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒன்று.
    வழக்கம் போல் வாசிக்கவேண்டிய ஜே.கேவின் சிறுகதைகளையும் அதற்கான காரணத்தையும் சொல்கிறார். நிச்சயம் அக்கதைகளை தேடவைக்கும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்