பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச்சிறுகதையின் பெருவெளி' - ஐந்தாவது கட்டுரையை முன்வைத்து


(ஐந்தாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *ஐந்தாவது கட்டுரையாக 'சி.சு.செல்லப்பா : காலத்தின் ஆவணங்களைக் கதைகளில் பிடித்து வைத்தவர்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இக்கட்டுரையில் தலைப்பே இதன் உள்ளடக்கத்தைச் சொல்லிவிட்டது. ஆனால் அதனைப் புரிந்துக்கொள்ள கட்டுரையைக் கடைசி வரை வாசித்தாக வேண்டியுள்ளது. அதுதான் கட்டுரையாளரின் தெளிந்தப்பார்வை.
    இதுவரை பலரும் சி.சு.செல்லப்பாவை பற்றி எழுதியிருக்கிறார்கள். சிலர் அவரை புறக்கணிக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால் இக்கட்டுரையில் இரண்டிற்கும் இடையில் ஊடாடும் இலக்கியத்தின் தேவையை ஆழமாகச் சொல்லியுள்ளார் கட்டுரையாளர்.
    சி.சு.செ-வின் ஆக்கங்களில் ஆகச்சிறந்த படைப்பாக இன்றளவும் பேசப்படுவது 'வாடிவாசல்' நாவல். ஆனால் 'வாடிவாசல்' குறுநாவலுக்கு அருகில் வைத்து எண்ணத்தக்க அளவிற்கு குறைந்தது 10 சிறுகதைகளையாவது சொல்லலாம் என்கிறார் ஆசிரியர்.
    சிறந்த சிறுகதை என சொல்லத்தக்க கதைகளாக இல்லாவிட்டாலும், வரலாற்று நூலை விடவும் சி.சு.செல்லப்பாவின் கதைகளில் உள்ள வாழ்க்கை முறைதான் சிறந்த சமூக வரலாறாகத் தெரிவிதை கட்டுரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார். காலம் கடக்க கடக்க இக்கதைகளில் இருக்கும் இத்தகைய அம்சமே இக்கதைகளின் முக்கியத்துவத்தை கூட்டிவிடும்.
    சி.சு.செல்லப்பாவின் கதைகளில் இன்றைய முக்கியத்துவம் என்பது அதனுள் பரவிக் கிடக்கும் பண்பட்டுக் கூறுகள் எனக்கூறும் ஆசிரியர் அதனைத் தொடர்ந்து "வீரபாண்டித் திருவிழாவை ஒட்டி மாட்டுத்தாவணி எட்டு நாட்கள் நடக்கும். இன்று வீரப்பாண்டித் திருவிழா இருக்கிறது. மாட்டுத்திருவிழா இல்லை. தாவணி அழிந்துவிட்டது. செல்லப்பாவின் கதைதான் சாட்சியாக இருக்கிறது.
    தொடர்ந்து சி.சு.செ-வின் முக்கியமான கதைகளையும் அக்கதைகளை எதனால் தான் தேர்ந்தெடுத்தேன் என்பதையும் கட்டுரையில் சொல்வதன் வழி நம்மையும் அக்கதைகளை வாசிக்க வைக்கின்றார்.
    மற்ற எழுத்தாளர்களால் எழுதிவிடாத கதைகளை எவ்வாறு சி.சு.செல்லப்பாவால் எழுத முடிந்தது என தெளிவான பார்வையில் சொல்கிறார். இருப்பினும் சி.சு.செல்லப்பாவின் கதைகள் மீது ஏன் வெளிச்சம் வரவில்லை என்பதனை ' நவீன இலக்கிய விமர்சகர்களுக்கு சி.சு.செ காட்டும் உலகுடன் ஒரு தொடர்பும் இல்லை என்பதாலேயே அவர்களை அக்கதைகள் கவரவில்லை' என தன் அனுமானத்தை சொல்லி இக்கட்டுரை முடிக்கின்றார்.
    இக்கட்டுரையை வாசிக்கும் பொழுது, நம் எழுத்துகளில் நாம் காட்டும் நம்பிக்கையும் அன்பும் அக்கதைகளை காலம் தாண்டியும் ஏதோ ஒரு வகையில் காப்பாற்றிவிடுகிறது என்பதை அறிய முடிகிறது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்