பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - நான்காவது கட்டுரையை முன்வைத்து

(நான்காவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *நான்காவது கட்டுரையாக 'மௌனி : அகவெளியில் உலவும் குரல்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி குறித்த எப்படி எழுதப்போகிறார் என்கிற அர்த்தமற்ற கேள்வியுடன் தான் கட்டுரையை வாசிக்கலானேன்.
    ஒரு படைப்பை வாசகன் அணுகுவதற்கும், அதே படைப்பை ஒரு படைப்பாளி அணுகுவதற்கும் இடையில் ஊடாடும் வித்தியாசங்களையும் அவசியங்களையும் சிறப்பான முறையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.
    முப்பது பக்கங்கள் கொண்ட இந்த கட்டுரையில் மௌனி அவர்களின் படைப்பைக் குறித்த முழுமையான பார்வையைக் கொடுத்துள்ளார்.
    மௌனியின் படைப்புகளை அறிந்தவர்களுக்கும் இனி அறிந்துக்கொள்ள போகின்றவர்களுக்கும் மிக முக்கியமான அறிமுகத்தையும் மாற்றுப்பார்வையையும் இக்கட்டுரைக் கொடுக்கின்றது.
    மௌனியின் கதைகளை, 'பெரும்பாலும் நிகழ்வைச் சொல்வதில் அல்ல, நிகழ்வின் உணர்வை வார்த்தைகளில் கொண்டு வரும் வேலையில்தான் மௌனி ஈடுபடுகிறார்' என்கிறார் ஆசிரியர்.
    'இன்று மேஜிக் கதை எழுதவர்களின் நதிமூலம் மௌனி. இதை அவர்கள் சொல்லாமல் கமுக்கமாக இருக்கிறார்கள்' என்று சொல்வதின் மூலம் வாசகர்களுக்கு மௌனி கதைகளில் மீது தேடுதலை ஏற்படுத்தி வைக்கிறார். நிச்சயம் இதனை வாசிக்கையில் எனக்கும் அதன் ஆர்வம் மேலோங்கியது என்றே சொல்ல வேண்டும். இதற்கான காரணத்தையும் ஆசிரியர் சொல்லத்தவறவில்லை.
கட்டுரையில் அதற்கான விபரங்களை ஆசிரியர் தெளிவாகவே தந்திருக்கின்றார்.
    மௌனியின் கதைகளில், மரணத்தை அவர் கையாண்டுள்ள விதம், தன் கதைகளில் அதனை பயன்படுத்திய விதம் என ஆசிரியர் கொடுத்திருக்கும் விபரங்கள் முக்கியமானவை. அவர் தன் கதைகளில் பயன்படுத்தும் மொழி குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் ஆழமாகவே ஆசிரியர் பேசுகிறார்.
    கட்டுரையாளர் சு.வேணுகோபால், தனக்கு பிடித்தமான மௌனி கதைகள் என குடும்பத்தேர், பிரபஞ்சகானம், அழியாச்சுடர், மாறுதல், சாவில் பிறந்த சிருஷ்டி, மனக்கோட்டை, அத்துவானவெளி, தவறு போன்ற கதைகளையும் முக்கியமான கதைகளாக நினைவுச்சூழல், இந்நேரம் இந்நேரம், எங்கிருந்தோ வந்தான், நினைவுச் சுவடு, உறவு பந்தம் பாசம் போன்ற கதைகளைச் சொல்கிறார்.
    மௌனியின் படைப்பூக்கம், தனக்கு டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா' நாவலில் வரும் 'அன்னா' என்ற கதாப்பாத்திரத்தையும் , 'புத்துயிர்ப்பு' நாவலில் வரும் 'மாஸ்வாலா' என்ற கதாப்பாத்திரத்தையும் நினைக்க வைப்பதாக சொல்லும் ஆசிரியர் மௌனிக்கான புதிய வாசகர்கள் உண்டாக்கிவிடுகிறார்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்