பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மர்லின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மர்லின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செப்டம்பர் 28, 2019

மர்லின் 4




என்ன மர்லின்
என் கதையில்
எதனைத் தேடுகிறாய்

எப்போதோ தொலைந்த உன்னையா
எப்போதும் தொலையும் என்னையா

கவனமாக பார் மர்லின்
வார்த்தைகளின் இடுக்கில் கூட
நீ இருக்கக்கூடும்

எந்த பக்கம்
திறந்ததும்
உன் வாசனை கொடுக்கிறதோ
அதுதான் உனக்கான
துருப்புச் சீட்டு

வார்த்தைகளை நோக்கி
வாசனையோடு பின் தொடர்

உன்னை முன் தொடர்ந்த
என் கதையில்
எந்த பக்கத்தில் நீ
இருக்கிறாய் என்று
என்னாலும் நினைக்க முடியவில்லை

என்
எந்த பக்கமும் நீ
இருப்பதால் இந்த
குழப்பம்

முயற்சியை கைவிடாதே

இன்னும் கூட உன் தொடுதலுக்கு
ஏங்கி
வீங்கி
வரும் வார்த்தைகளைப் பாரேன்

பாவமில்லையா

#தயாஜி

மர்லின் 3



தியானிக்க முயல்கிறேன்
தீயென பற்றிக்கொள்கிறாள்

மர்லின் 

அழைப்பேதுன்றி
அத்துமீறி
பிரவேசிக்கிறாள்

மர்லின் 

தேகமெல்லாம் வியர்க்க
விரல் வழி வழிகிறாள்

மர்லின் 

போதாதென காதில்
காற்றூதி கரைக்கிறாள்

மர்லின் 

இனியென்ன தியானம்
நீயே போதுமென
எழுந்தேன் தீயென
எதிரே
கண்மூடி
கால் மடக்கி
புத்தகம் ஒன்றில்
மூழ்கி
தியானிக்கிறாள்
சஞ்சலமின்றி

மர்லின் 2



மர்லின்
அப்படியே தூங்கிடு
இவ்வுலகு
நாம் வாழ்ந்த உலகல்ல

கிடைக்கும் நேரமே போதுமென்றுணர்
உறங்கும் தருணமே
உன்னால் மூச்சினை உணர முடியும்
இதர நேரமெல்லாம்
மேல் மூச்சு கீழ் மூச்சென
ஓடி ஓடியே உன்னை மறைத்திட வேண்டும்

பேச்சுகொடுக்க மரங்கள் இங்கில்லை
கடித்து காட்ட அணில்கள் இங்கில்லை
ஆற்றை கடக்க முதலைகள் இங்கில்லை
சக்கரை கொடுக்க எறும்புகள் இங்கில்லை
காலை கூப்பிட சேவல்கள் இங்கில்லை
சிரித்து பேசா பூக்கள் இங்கில்லை
வானில் அழைத்திட பறவைகள் இங்கில்லை
படித்து முடித்திட புத்தகங்கள் இங்கில்லை
ஒளியால் நடத்த விளக்குகள் இங்கில்லை

இங்கிருப்பதெல்லாம் ஒன்றுதான்
மனிதர்கள்
ஊர் கொன்று தான் தின்று
வளரும் மனிதர்கள்

நம் உலகு செல்ல
வழித்தடங்கள் இல்லை
எல்லோரும் சேர்த்து
அங்கு
பிணங்களை அடுக்கிட்டார்கள்
நீயோ நானோ
நாமோ அங்கு
போனால்
பிணமாவோம்
பிணவாடையில் ஒன்றாவோம்

உறங்கும் நேரம்தான் இங்கு
உனக்கான நேரம்

எப்போது விழிக்கிறாயோ
இருளை நீ சந்திப்பாய்

மர்லின்




மர்லின்
எந்த நூற்றாண்டிலோ
ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்திருக்கிறோம்

அதன் காரணமாய்
இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்
வெறும் நினைவுகள் சுமந்த பிரேதங்களாய்
சிரித்துக்கொண்டிருக்கிறோம்

சதையினை கிழித்து
இதயத்தை பிழிகையில்
சொட்டென சிதறும் ரத்தம்
உன் பெயரையையே சொல்லி மரிக்கும்

மர்லின்

கோடான கோடியில் நீ
உன் கண் செய்யும் மாயையில் நான்

என் செய்வேன் சொல்
நீயாகவே வந்தென்னை கொல்

தேவதையென தெரிகிறாய் மர்லின்
தேவைநீ சொல்கிறேன் மர்லின்

எழுத முடியா எழுத்துகளால்
கூற முடியா சொற்களால்
காண முடியா காட்சிகளால்

உன்னை எழுதி
உன்னில் சொல்லி
உன்னையே காண்கிறேன்
மர்லின்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்