பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 19, 2026

எஸ்.ராவின் 'வான் கேட்கிறது'


இந்த வார வாசிப்பில், எஸ்.ராவின் 'வான் கேட்கிறது' கட்டுரைகள்.
36 கட்டுரைகள் அடங்கிய கட்டுரை தொகுப்பு.

எஸ்.ராமகிருஷ்ணன் தான் வாசித்த இந்தி இலக்கியங்கள், அயல்மொழி இலக்கங்களுடன் தமிழில் முக்கியமான படைப்பாளிகள் குறித்து எழுதியிருக்கிறார்.

இதில் சில கட்டுரைகளை முன்னமே அவரது இணைய பக்கத்தில் வாசித்திருந்தாலும் ஒரு தொகுப்பாக தற்போது வாசிப்பதில் மனதிற்கு நெருக்கமாகின்றது.

இணையத்தில் வாசித்த போது அவர் அறிமுகம் செய்த புத்தகங்களில் சிலவற்றை வாங்கியிருக்கிறேன் சிலவற்றை வாசித்தும் இருக்கிறேன் என்பது எழுதுவதை மட்டுமே தனது வாழ்வாக கொண்டிருக்கும் எஸ்.ராவிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவர் அறிமுகம் செய்யும் புத்தகங்களை அவரது வாசகர்களும் தேடி வாசித்து பேசுவது அவருக்கு அதைத்தானே கொடுக்கும்.

இந்தத் தொகுப்பில் இருந்தும் சில புத்தகங்களைக் குறித்து கொண்டேன். என்றாவது ஒரு நாள் என் வாசிப்பு பட்டியலில் அந்தப் புத்தகம் இடம்பெறும்.

ஒரு புத்தகம் பல்வேறு கதவுகளை அதன் வாசகர்களுக்கு காட்டுகிறது. எஸ்.ராவின் 'வான் கேட்கிறது' எனும் இந்தப் புத்தகத்திலும் பல கதவுகள் இருக்கின்றன.

ஒவ்வொரு கதவிலும் ஒவ்வொரு குறிப்புகள் இருக்கின்றன. அவை இந்தக் கதவின் வழியே நமக்கு முன் சென்ற தேர்ந்த பயணியின் வழிகாட்டி குறிப்புகள். இந்தக் குறிப்புகள், இன்னும் ஆழமான நம் பயணத்திற்கு வழி காட்டுகின்றன.

இந்தத் தொகுப்பில் இரு பகுதிகள் உள்ளன முதல் 21 கட்டுரைகளும் புத்தகங்களைக் குறித்தும் அதன் பின்னணிகள் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசுகின்றன.

22முதல் 36 கட்டுரைகள் வரை 'காலத்தின் திரைகள்' என்ற தலைப்பின் கீழ் இருக்கின்றன. இந்தப் பகுதியில் தமிழில் முக்கியமான படைப்பாளியாக அவர் கருதும் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவற்றிலும் புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் முக்கியத்துவத்துடன் இடம்பெற்றுள்ளன.

'தொடுதிரை மீன்கள்' என்ற கட்டுரையில் கவிஞர் நகுலனின் கவிதையுலகை விவரிக்கின்றார். நகுலனின் கவிதைகளில் நிழலாக வந்து போகும் 'ஜான் டன்' பற்றிய அறிமுகம் எனக்கு புதிதாக இருந்தது. இந்த இருவரின் கவிதைகளையும் விரிவாகவும் ஒப்பிட்டும் ஆய்வு செய்யவேண்டிய அவசியத்தையும் முன்மொழிகின்றார். இந்தக் கட்டுரையில் சமகால கவிதைகள் மீதான விமர்சனத்தையும் முன்வைக்க தவறவில்லை.

'மகிழ்ச்சியின் அடையாளம்' என்ற கட்டுரைதான் இத்தொகுப்பில் சிறிய கட்டுரை. ஷங்கர ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கும் மேரி ஆலிவரின் கவிதையைக் குறித்து எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையையும் நம்மால் முழுமையாக இரசிக்கும்படியே இருக்கிறது.

செல்மா லாகர்லெவ்வின் நாவலை 'மதகுரு' என்ற பெயரில் க.நா.சு மொழிபெயர்த்திருப்பார். பலமுறை எஸ்.ரா அந்த நாவல் குறித்து பேசியிருப்பதைக் கேட்டிருக்கிறேன். 'மதகுரு எனும் நவீனகாவியம்' என்ற தலைப்பில் இந்நாவல் குறித்து விரிவாகவே எஸ்.ரா எழுதியிருக்கின்றார். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதும் அவர் குரலிலேயே வாசிக்க முடிந்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.


புத்தகங்களை அறிமுகம் செய்யும் அதே சமயம் பிறமொழி இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' நாவல் தமிழுக்கு வந்த சுவாரஸ்யமான பின்னணி, கவிஞர் பாஷோ மேற்கொண்ட நீண்ட பயணத்தையே முந்நூறு ஆண்டுகள் கழித்து தனது பயணப்பாதையாக தேர்வு செய்த 'லெஸ்லி டவ்னர்' எழுதுய புத்தகம், என வாசகர்களுக்கு எஸ்.ரா திறந்து காட்டும் புத்தக உலகம் ரொம்பவும் பெரியது பரந்துபட்டது.

இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் விரிவாக எழுதி உங்கள் வாசக அனுபவத்திற்கு தடைபோட விரும்பாது சுருக்கமாகவே முடித்து கொள்கிறேன்.

தேசாந்திரி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். அவகளிடம் வங்கலாம். அல்லது
மலேசியாவில் இந்தப் புத்தகத்தை 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில்' வாங்கலாம். புத்தகம் வாங்க +60164734794

அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்