பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 13, 2026

- தோழன் நிஜந்தனுக்கு -


நண்பனும் தம்பியுமான; என்று  சொல்வதைவிட புத்தகங்களை வாசிப்பதையே தனது அடையாளமாக கொண்ட நிஜந்தன் இன்று நம்மோடு இல்லை.

நோயின் பிடி எவ்வளவு மூர்க்கமானதாக இருந்தாலும் தன்னுடைய வாசிப்பின் வழி அதிலிருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட வாசகன் அவன்.

தான் வாழ்ந்த உலகில், தனது அடையாளமாக 'பிறழ்வு' என்னும் நாவலை விட்டு போயிருக்கிறான் இந்த எழுத்தாளன்.

தனது முதல் நாவலை வாசித்து கண்டிப்பாக எழுதுங்கள் என சொல்லியிருந்தான். நிச்சயம் நாம் இணையம்வழியே ஓர் உரையாடலை நடத்துவோம் என்று சொல்லியிருந்தேன்.

நாவல் கைக்கு வருவதற்கு முன்பாகவே அவன் சென்றுவிட்டான்.
இனி அவனின் நாவலை அவனது குரலிலேயே வாசிக்கும்படி செய்துவிட்டான் சூழ்ச்சிக்காரன்.

எழுத்தில் அவன் தொடங்கிய இடத்தை பலரும் சிலாகித்தார்கள். இங்கிருந்து அவன் எழுத்துப்பயணம் தொடர்ந்து செல்லும் என நானுமே எதிர்ப்பார்த்தேன். 

அவன் பயணம் இனி நம் நினைவுகளில் ஊடே பயணிக்கும்படிக்கு அவன் செய்துவிட்டான்.

ஒவ்வொரு முறையும் தனது மருத்துவ செலவுக்கு அவன் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அவனது வாசிப்பு அவனுக்கு உதவக்கூடிய பலரை அவனிடம் நெருங்க வைத்தது.

இனி யாரும் நெருங்க முடியா தூரத்திற்கு சென்றுவிட்டான்.

சென்றுவா தம்பி, நீ செல்லும் இடத்தில் இனி எந்த நோயும் உன்னை நோக்கி வராது. மருத்துவ செலவுக்கு அல்லாட தேவை இருக்காது. கூச்சத்தோடு யாரையும் நீ அணுகவேண்டியும் இருக்காது.

இனி மருத்துவமனை கட்டில் இருக்காது. புத்தகங்களால் செய்த நாற்காலியில் உனக்கு பிடித்தபடி அமர்ந்து கொள். ஓய்வெடு.

நாங்கள் புத்தகம் வாசிக்கும் குரலைக் கேட்டு நீயுமே எங்களுடன் வாசித்து மகிழ்ந்திரு...

(12.4.2026-ல் தோழன் நிஜந்தன் இயற்கை எய்தினான் - அவனுக்கு என் அஞ்சலி)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்