பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புத்தக்காதலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக்காதலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆகஸ்ட் 12, 2012

யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’ - உட்புகும் தேடல்


12.8.2102
      தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாவல்கள் வரிசையில் படித்து முடித்த நாவல், யுவன் சந்திரசேகர் எழுதிய ‘வெளியேற்றம்’.

      படித்து முடித்திருந்த நாவல்களில் இந்த நாவலை நான் வேறு வகையாக உணர்கிறேன். வழக்கமாக இந்திரா சௌந்திரராஜன் கதைகளை தொடக்கத்தில் படித்து வளர்ந்தவன் நான். அதில் வரும் அமானுஷயம், சித்தர், மூலிகைகள், மர்மங்கள் எல்லாம் எனக்கு ஒருவகையில் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது. அவரது எழுத்துகளைத் தொடர்த்து வாசிக்க வாசிக்க அதன் கட்டமைப்பை புரிந்துக் கொண்டதாய் ஓர் நிறைவு. கடவுள் நம்பிக்கையை அடைப்படையாக கொண்ட எழுத்து வகை அது. அதனுடன் மூலிகைகள் தொடர்புடைய அற்புதங்கள் நிகழ்த்தும் சித்தர்களும் சேர்ந்துக் கொள்வார்கள்.
    பிறகு இந்திரா சௌந்திர்ராஜன் நாவல்களை படிப்பதை தொடரவில்லை. வருடம் முழுக்க ஒரே வழியில் செல்வதை என் மனம் விரும்புவதில்லை. இதன் வழி அவரை நான் குறைத்து மதிப்பிட்டதாய் எண்ணிட வேண்டாம். என் அடிப்படை வாசிப்பிற்கு அடித்தளம் அமைத்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அதே பாடசாலையில் அதே வகுப்பில் என்னை வைத்துக்கொள்ளவில்லை.
   
வெளியேற்றம் நாவல் முழுக்க ஒவ்வொரு காலக்கட்டங்களில் ஒவ்வொருவர் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம், ஒவ்வொரு கேள்விகள், ஒவ்வொரு குழப்பம். கதைகள் தனக்குள் கதைகளையே வைத்து ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன. ‘ஓடிப்போனவன்’ என்று சொல்லப்படுகின்றவர்கள் வெறுமனே ஓடி ஒளிந்துவிடுவதில்லை. இந்த வெளியேற்றத்தில் ஓடிப்போனவர்கள் மிளீர்கிறார்கள்.
    நான் படித்த நாவல்களில் இந்த நாவ்லதான் அதிக பக்கங்கள் என நினைக்கிறேன்.495 பக்கங்கள்.
      படிக்கப்படிக்க நாவலில் நடுப்பகுதியில் , தொடர்ந்து படிக்க வேண்டிமா என்ற வெறுமை தோன்றுகிறது. அதற்கு அடுத்த அத்தியாயத்தை படித்துவிட்டால், நாவலில் போக்கு நம்மை மீண்டும் நாவலுள் இழுத்துவிடுகிறது.
     
      நதியின் போக்கினை போல , ஆளுக்கு ஒரு திசையில் இருந்து அடித்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பெரியவர்’ இந்த நாவலில் மிக முக்கிய கதாப்பாத்திரம். இதனையே மற்றவர் எழுதியிருந்தார் அவருக்கு சித்தர் என்ற பெயரை வைத்து காவி துணி கொடுத்திருப்பார்கள். ஆனால் யுவன் சந்திரசேகர் அந்த வழக்கத்தை தொடரவில்லை. தன் மரணத்தை நான் நினைத்தபடி சமாதியடையவிருக்கும் பெரியவருக்கு எந்த ஓரு ஆன்மீக சாயத்தை பூசாதது எனக்கு ஆச்சர்யத்தையே கொடுத்தது.
      மனித மனம் இத்தனை கதைகளை ஒன்றினைக்க முடியுமா என படிக்க படிக்க வியப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. தேடல் என்பதின் உண்மை அர்த்தம் இந்த நாவலின் வழி அறியப்படும். வெறுமனே வாசக சுவாரஸ்யத்தையும் தாண்டிய ஒன்று இந்நாவலில் காணக்கிடைக்கிறது.
     இன்னும் கூட எழுதலாம் இந்த நாவல் குறித்து பக்கம் பக்கமாக ஆனால்; இந்நாவல் எனக்குள் முடக்கிவிட்டிருக்கும் கேள்விகளை எழுதுவது எனக்கு சாத்தியப்படவில்லை. இந்த நாவலும் தனக்குள் பல கதைகளை சுமந்துக் கொண்டே செல்கிறது, சொன்னதில் கொஞ்சம் சொல்லாததில் மிச்சம்.

- தயாஜி -

ஜூலை 10, 2012

வாங்கிய புத்தகங்கள்






7,8.7.2012-ல் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இருநாள் மொழியியல் வகுப்பில், கே.பாலமுருகன் எழுதி மிகவும் கவனம் பெற்ற நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலை வாங்கினேன். பாலமுருகனின், ‘தம்பி தயாஜிக்கு’ எனும் கையெழுத்திட்டார்.

1. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
- எழுத்து பாலமுருகன் கேசவன்.

9.7.2012-ல் ஜெயபக்தி சென்றிருந்தேன்.

2. வெளியேற்றம் - நாவல்

எழுத்து - யுவன் சந்திரசேகர்.
 

ஜெயமொகனின் புத்தகம் மூலம் அறிமுகமான யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை சமீபத்தில் வாங்கியிருந்தேன். இன்னும் படிக்கவில்லை. தற்சமயம் தொடர்ந்து நாவல்களைப் படித்துவருவதால், யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல்களைத் தேடினேன், ‘வெளியேற்றம்’ நாவல் கிடைத்ததில் மகிழ்ச்சி.

3. பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள்

தமிழில் மொழிபெயர்ப்பு - யுவன் சந்திரசேகர்.
 

இயற்கையாகவே ஜென் என்றால் ஒருவகை ஈர்ப்பு எனக்கு இருக்கிறது, அதிலும் இது கவிதை. தமிழில் மொழிபெயர்த்திருப்பதின் கீழ் ஆங்கிலத்தில் அந்த கவிதை எழுதப்பட்டுள்ளது, உடன் எழுதிவரின் பெயரும் இருக்கிறது.

5. நான் பின் நவீனத்துவ நாடோடி இல்லை (கட்டுரை தொகுப்பு)

எழுதியவர் யமுனா ராஜேந்திரன்.

-பின்நவீனத்துவம், அதன் மீதான விமர்சனம், மார்க்கிசியம், பின்மார்க்கிசியம், சோஷலிசம், கிராம்ஸின் முக்கியத்துவம், போலி அறிவியலின் தோற்றுவாய்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளும், உரையாடலும் அடங்கிய புத்தகம்.







இப்படிக்கு தயாஜி....

ஜூலை 05, 2012

‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்


     

அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்


 (6.6.2012)
    இன்றுதான், ரெ.கார்த்திகேசு எழுதிய அந்திம காலம்நாவலை படித்து முடித்தேன். 1998-ல் எழுதப்பட்ட இந்நாவல் 2007 இல் மறுபதிப்பு வந்தது.  ரெ.கா-வின் மூன்றாவது நாவல் இது.

      மனைவி ஆசிரியர் பயிற்சி கழகத்தில் படித்த சமயம், திறனாய்வு செய்த நாவல் இதுவென அறிமுகம் செய்தார். இந்நாவலை படிக்கும் முன்  ரெ.கா-வின் சில சிறுகதைகள் தவிர (அதுவும் இப்போது நினைவில் இல்லை)எந்த எழுத்துகளும் எனக்கு பரிச்சயம் இல்லை.

    சுஜாதாவின் தொடர்கள், பின்னாளில் புத்தகமாக வெளிவந்தது. அதை தீவிரமாக வாங்கி படித்தேன். அவ்வாறே இந்திரா சௌந்தரராஜன், ஆர்னிகா நாசர் உடன் ராஜேஷ்குமார் அதில் அடங்குவர். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் ஒரு எதிர்பார்ப்பும் முடிச்சுகளும் இருக்கும். பரப்ப்புக்கு கொஞ்சமூம் பஞ்சம் இருக்காது.  நாவலின் வடிவமைப்பு இப்படித்தான் இருக்குமனெ எனக்குள் நானே முடிவெடுத்துக் கொண்டேன். தன்னையே தனக்கு குருவாக நினைப்பவன் முட்டாள்என விவேகானந்தர் சொன்னதை படித்திருந்தாலும் அதன் உள் அர்த்தம் புரிந்திருக்கவில்லை.

     கால போக்கில் எழுத்துகளில் இருக்கக் கூடிய வித்தியாசங்கள் வாசிப்பின் வழி தானாகவே புரியத் தொடங்கியது. அதன் காரணமாகவே சில காலம் வரை உடன் சுற்றிவந்த பலரிடம் இருந்து விலகும்படி ஆனது. முரண் படுவதால் மட்டுமே என்னை முட்டாளாக்கி வேடிக்கை காட்டியவர்களும் உண்டு. வெறும் பெண் என்ற அமைப்புகளால் மட்டுமே கொண்டாடப்பட்டவரும் உண்டு. ஜால்ராக்களின் சத்தம் சந்தமாய் ஒலிப்பதால் கூட்டம் கூடியவர்களும் உண்டு.

     கடந்த சில மாதங்களாக ஜெயமோகன் எழுத்துகளை படித்து வந்ததில் இருந்து அவர் அறிமுகம் செய்த கதைகளையும் முன்மொழிந்த எழுத்தாளர்களையும் தேட ஆரம்பித்தேன். ஜெ.மோ தன் புத்தகத்தில் நாவல்கள் குறித்து எழுதியதை/ படிக்கும் போது எனக்கும் நாவல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதற்கு அடித்தளமாக அமைந்தது, ஒருமுறை வல்லினம் கலை இலக்கிய விழாவில் கலந்து கொண்டு நாவல்கள் குறித்து அமைந்த ஜே.மோ-வின் பேச்சுதான் எனலாம்.
 
   பின்னாளில் வல்லினம் அகப்பக்கத்தின் ஆசிரியர் நவினுடன் நட்பு கிடைத்த பிறகு பலவற்றைப் பகிரும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றுதான் அன்று பேசிய ஜெ.மோவின் பேச்சு
.
   சிற்றிதழ்கள் குறித்து பேசும் பொருட்டு , மலேசியாவிற்கு வருவதற்கு முன்பே தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்ததாம். திடீரெனத்தான் நாவல்கள் குறித்து பேசும்வடி ஆனது. அந்த பேச்சினை இப்போதுகூட நீங்கள்   ‘யுடியூப்’-ப்பில் கேட்கலாம். அதிகம் பேரால் கேட்கப்படும் ஜெ.மோவின் பேச்சுகளில் அதுவும் ஒன்று.

    நல்ல கதைகள் தன்னைத்தானே எழுதிக் கொள்வது போலத்தான் என்னவோ நல்ல பேச்சுகள் தனக்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றன போலும்.

   சமீபத்தில் தொடர்ந்து நாவல்களை படிக்கும் வாய்ப்பைக் காலமும் நேரமும் எனக்கு வழங்கியது. ஆர்வம் என்ற பெயரில் எனக்கு நானேப் பெருமை சேர்க்க   விரும்பவில்லை.

   தொடர்ந்து சுந்தர ராமசாமியின் ஒரு புளிமரத்தின் கதை’, தகழி சிவசங்கர பிள்ளை மலையாளத்தில் எழுதி சுந்தர ராமசாமி தமிழில் மொழிபெயர்த்த தோட்டியின் மகன்’, சாரு நிவேதிதா எழுதிய எக்ஸிடென்சியலிசமும் பேன்ஸி பனியனும்’, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி’, வைக்கம் முகமத்து பஷீர் எழுதியஆனைவாரியும் பொன்குருசும்’- (நெடுங்கதை) போன்ற நாவல்களில் மூழ்கியிருந்த பல கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொண்டே அடுத்த நாவலை எடுக்கும் பொழுதுதான் , மனைவி அந்திம காலம்நாவலை அறிமுகம் செய்தாள்.

    தொடர்ந்து படித்த ஐந்து நாவல்களைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும் எழுத்துரு இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு ஏன் இந்த அவசரம் அந்திம காலம்குறித்து எழுத..?

   தெரியவில்லை. சில முடிவுகளை நானாக எடுப்பது குறைந்து தானாக நடக்கத் தொடங்கியிருக்கும் நேரம் இது.

   இனி அந்திம காலம்’- நோயாளியில் நெடுந்துயரம் என சொல்லலாமா? அல்லது வயோதிகத்தின் பாவப் பரிகாரம் எனப்  பொருள் கொள்ளலாமா?

  கதையில் நாயகன் சுந்தரம் , தன் வயோதிக காலத்தில் தனக்கு மூளைப் புற்று நோய் இருப்பதைக் தெரிந்துக் கொள்கிறார். அங்கிருந்துதான் நாவல் தொடங்குகிறது.

   தொடக்க அத்தியாயம் வியப்பை எற்படுத்தும் வகையில் எழுதியிருக்கின்றார். குறிப்பாக, ‘காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது, அகலாமான கண்ணாடியெங்கும்  மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடைவிடாது அழித்துக் கொண்டிருந்தன. டடக்.....ட்டக்... டடக்... அழிக்க அழிக்க/ புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் இல்லாத வைப்பர். ’ .

    நாவலின் தொடக்க அத்தியாயத்தில் வந்திருக்கும், இந்த வரிகள் முழு நாவலின் சாரத்தை ஓரளவேனும் சொல்லியிருக்கிறது எனவே மனதில் பட்டது. அந்த வைப்பர் போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கை எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் பாடாய்ப்  படுத்துகிறது. மழையால் ஓவியம் போலக் காட்சியளிக்கும் தண்ணீரெல்லாம், எந்த ஒரு பாரபட்சமுமின்றி அழிக்கப்படுவதும். பின் புதிதாக வரையப்படுவதும் இறப்பையும் பிறப்பையும் சொல்கிறதோ ? பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். இறக்கிறார்கள் பிறக்கிறார்கள். இதுதான் வாழ்க்கையா..?

    பிறப்பையும் இறப்பையும் மிக சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் இரண்டுக்கும் இடையில் இருக்கும் அனுபவம் எத்தனை வலிகள் நிறைந்தவை. எப்படி அந்த வலியை கணக்கெடுப்பது? வயது மட்டுமே வலியை/ குறித்த பிரக்ஞையை கொடுக்கிறது.

    ‘அந்திம காலம்நாவலில் வயோதிகர் சுந்தரத்திற்கு வந்திருக்கிற அதே புற்றுநோய் அவரது பேரன் பரமாவிற்கும் வந்திருக்கிறது. மரண வாசலில் இருக்கும் இருவரையும் படிக்கும் போதே வயதின் பிரக்ஞை புரிகிறது.

    தலைமையாசிரியராக  இருந்து பதவி ஓய்வு பெற்ற இரண்டாம் ஆண்டில் அவர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் யாரும் எதிர்பாராதது. சுந்தரத்தின் மனைவி ஜானகி. மகள் ராதா, மருமகன் சிவமணி, மகன் வசந்தன், பேரன் பரமா.

     அவ்வபோது சுந்தரத்தின் பழைய நினைவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சுந்தரம் ஜானகி இருவரின் அறிமுகமும்  , திருமணம் நடந்த கதையெல்லாம் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இவர்களின் அன்பான வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தாள் மகள் ராதா. ராதாவும் கணவன் சிவமணியும் காதலித்துத்தான் திருமணம் புரிந்திருந்தார்கள் என்றாலும், தன் தாய் தந்தையைப் போல இல்லாமல், மனமுறிவுக்கு செல்கிறார்கள். ராதாவால் சிவமணியின் மிருகக் குணம் பொறுக்க முடியாமல் 3 வயது பரமாவை தன் பெற்றோரான சுந்தரம் ஜானகியிடம் கொடுத்துவிட்டு மறுநாள் வெளிநாடு சென்றுவிடுகிறாள். தனக்கு ஒரு வெள்ளைக்காரனைப் பிடித்திருப்பதாகவும் அவரும் தன்னை விரும்புவதாகாவும் , விரைவில் பரமாவை அங்கே கொண்டு செல்லப்போவதையும் கடிதம் வழி சொல்லியிருந்தாள். மேற்கொண்டு முகவரியோ தொலைபேசி எண்ணோ இருக்கவில்லை. அவளே அடிக்கடி அழைப்பதாக எழுதியிருந்தாள்.

    சுந்தரத்துக்கு நல்ல நண்பனாக இருக்கிறார் ராமச்சந்திரன். நல்ல நட்பிற்கு அடையாளமாக இவர்கள் இருவரையும் சொல்லலாம்.

    சுந்தரத்தின் மறுமகனான நேசமணி மிருகக் குணத்தில் இருந்து, தன் குழந்தை பராமுக்கு எற்பட்டிருந்த நோயால் மனிதனாகின்றான். தன் மாமனாரிடம் அவன் மன்னிப்பு கேட்கும் நேரம் படிக்கும் போதே மனதைக் கனக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் பரமா இறந்துவிடுகிறார். குழந்தையின் மரணத்திற்குக்  காரணம் தங்களின் ஓயாத சண்டைதான் என உணர்கிறார்கள் நேசமணியும் ராதாவும். சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு புறம் இருந்த நேரங்களுக்கு பதிலாக குழந்தையை கவனித்திருந்தால் , நோயின் அறிகுறி தொடக்கத்தில் இருந்தே கண்டு கொண்டு சிகிச்சை கொடுத்திருக்கலாம்.

    சுந்தரத்தின் குடும்பத்தில் இருக்கும் மற்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை/ சொல்லவேண்டும். ஒருவர் சுந்தரத்தின் அக்கா அன்னபூரணி,  மற்றொருவர் சுந்தரத்தின் அத்தை.

    எல்லா சமயமும்  சூழ்நிலைக் கைதி ஆகாமல் பதட்டமில்லாமல் ஒவ்வொன்றையும் செய்துவருகின்றார் அக்காள் அன்னபூரணி.

    இளம் விதவையான சுந்தரத்தின் அத்தை, கணவன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து பீதிக்குள்ளாகி, மனப்பாதிப்பை அடைகிறார். தன் வாழ்நாளில் கடைசி வரை, ‘தண்ணி பக்கம் போகாதேஎன இதையே சொல்லி வருகிறார். துணிகளை துவைப்பது முதல் சமைப்பது வீட்டைச் சுத்தம் செய்வது என எதைச் செய்தாலும் அதற்கான பலனைத் தேவையில்லாமல் போனது அத்தைக்கு. ஒரு தேர்ந்த ஞானியைப் போலவே இவர் எனக்கு தெரிகிறார். வீட்டில் இறப்பு நடந்த சமயம் , சுந்தரத்துக்குப் புற்றுநோய் எனத் தெரிந்த பொழுதும் என எல்லா காலகட்டமும்  மந்திர உபதேசம் போல  ‘தண்ணி பக்கம் போதான்னு சொன்னே கேட்டியாஎன்பதையே கேட்கிறார்.  ஞானிகள் இப்படித்தானோ  

    தனக்கு கடமையாக்கப்பட்டதை  செய்த பிறகும் செய்யும் பொழுதும் மனம் ஒன்றையேதானே நினைத்திருக்கும்..!

   நோயின் பிடியில் ஒவ்வொரு மாறுதல்களியும் சுந்தரத்தின் மூலம் நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களுக்கு ஓரளவேனும் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்.

    என்னை/ கவர்ந்த கதாபாத்திரம்  என மதர் மேகியை/ சொல்லலாம். நோயாளிகளுடன் உரையாடவும் தொண்டூழியம் செய்யவும் இருக்கிறார் இவர். அவ்வ/போது நோயாளியான சுந்தரத்துக்கு இவர் சொல்லும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் படி இருக்கிறது.

    சுந்தரம் சொல்லும் கதையில், அவ்வபோது கதை சொல்லியும் கதை சொல்கிறார். சில இடங்களில் விளைவுகளைச் சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் அதன் சம்பவங்களைச் சொல்வது ரசிக்கும்படி இருந்தது. இடையிடையில், சுந்தரம் படிக்கும் நூல்களில் இருந்த மேற்கோள்களைப்  
 படிப்பது, சுவாரஸ்யமாக இருக்கிறது.

    புற்றுநோய் ஆராய்ச்சியாளராக வரும் மருத்துவர் ராம்லியின் கதாபாத்திரம் திருப்பத்தைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்க/பட்டு இயல்பாகவே இறுதிவரை செல்கிறது. சுந்தரத்தின் பழைய மாணவர்தான் இந்த ராம்லி. அப்போது, கட்டொழுங்கு ஆசிரியரான சுந்தரத்திற்கும் பிரச்சனை கொண்ட மாணவனான ராம்லிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனை நேர்மைக்கு அதிகாரத்திற்கும் ஏற்படும் போராகச் சொல்லலாம். அதனை நல்ல சிறுகதையாக கணக்கெடுக்கலாம். நல்ல கதை சொல்லல், திருப்பம், சரளமான நடை.

     மேற்கொண்டு சொல்ல பல இருந்தாலும், நீங்களே இந்நாவலைப் படிக்கும் போது கிடைக்கவிருக்கும் அனுபவத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

    இந்நாவலை எழுதி ரெ.கா-விற்கு, இந்நாவலை வாசித்தவன் என முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால் அவரிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். இதுதான் உங்கள் எழுத்துகளின் முதல் நாவலாக நான் படித்தது என்பதால் உங்கள் எழுத்துகளும் கதை சொல்லும் முறைகளும் எனக்கு  பரிச்சயமில்லை. அதனால் இந்த/ கேள்விகள் என நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அல்லது வாசித்தவன் முன் வைக்கும் சந்தேகங்கள் எனவும் நீங்கள் பொருள் கொள்ளலாம்.


1.   சுந்தரத்தின் மகனாக சில இடங்களில் மட்டும் சொல்லப்படும் வசந்தன்  என்ன ஆனான்.? தொடக்கத்தில் அவன் குறித்து/ சொல்கிறீர்கள் அதன் பின் இடையில் ஒரு முறை, அடுத்து கடைசி அத்தியாயத்தில்  வருகிறான். தந்தைக்குப் புற்று நோய் என எல்லாருக்கும் தெரிந்த பிறகும் கூட வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு தெரியாதா என்ன..?



2.    300 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை நான் 8 நாள்களில் படித்து முடித்துவிட்டேன். ஆர்வம் மட்டும் காரணமல்ல, உங்கள் கதை சொல்லும் முறையிலும்தான். இப்படி விரைவாகப் படிக்கும் படி இயல்பாக கதை கொண்டு சென்ற நீங்கள் ஏன் கடைசி அத்தியாயத்தில் அப்படி ஒரு காரியத்தைச் செய்தீர்கள்? கடைசி பத்தொன்பதாவது அத்தியாத்தில் நீங்கள் ஐந்து பக்கங்களில் எழுதியிருந்ததை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தீர்களா..? ஏன் அப்படி ஒரு நாடகத்தன்மை (இவ்வார்த்தை புண்படுத்தினால் மன்னியுங்கள் எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை). நீண்ட கதையின் சுருக்கம் போல ஏன் அப்படி அவசரத்தில் முடித்துவிட்டீர்கள்.? யாரோ கதையை முடிக்கும் படி ஒரு மணிநேரம் கொடுத்தது போல அல்லவா  நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்?

3.    ஒருவேளை நாவலில் முடிவு உங்கள் எழுத்தின் பாணியோ..?



4.  சீதை பதிப்பகம் வெளியீடு செய்த நாவலைத்தான் நான் வாசித்தேன். இதில் உள்ள சில மலாய் வார்த்தைகளுக்கு தமிழிலும் அதன் அர்த்தத்தை கீழ் எழுதியிருக்கலாமே..?


வாசகன் என்ற முறையின் படித்த நாவல் குறித்து பதிவு இது.
இப்படிக்கு, தயாஜி.

ஜூலை 01, 2012

கிறுகிறுவானம் - தெரிகிறது என் பால்யம் !


 1.7.2012

    சமீபத்தில் ஆல்பெர் காம்யு-வின் அந்நியன் நாவலைப் படித்து சில கேள்விகளை எனக்குள்ளே கேட்கத் தொடங்கியிருந்தேன். சரியாக தூங்கவும் முடியவில்லை. தொடர் குழப்பங்கள். அந்த வாசிப்பு அனுபவத்தை எழுதலாம் என உட்கார்ந்தால், கேள்விகள் ஒவ்வொன்றும் சுற்றத்தையும் சமூகத்தையும் நோக்கியே செல்கிறது. அபத்தம் என்பது கூட எனக்கு முழுமையாக புரியவில்லை ஆனால்; நாயகன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தேன். மேலும் அது குறித்து எழுத வேண்டும்.

      அதற்கு முன், இப்போது கிடைத்த மூன்று நாள் இடைவேளையில், இலகுவாக எதையாவது படிக்கலாம் என , என் அலமாரியில் தேடினேன். கிடைத்தது, எஸ்.ரா-வின் 'கிறுகிறுவானம்' எனும் குழந்தைகளுக்கான நாவல்.

(சில மாதங்கள் நாவல்கள் மட்டும் படிக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.)

     ஒரு கிராமத்து சிறுவன் அவன் மொழியிலேயே கதையை சொல்லிச் செல்கிறான். இருக்கமான சூழலில் இருந்து மீண்டும் என் பால்ய காலத்திற்கு பயணித்தது போல உணர்ந்தேன். நன்றாக சிரித்தேன். சில நண்பர்களை நினைத்துப்பார்த்தேன்.

     பால்ய வயதுக் கேள்விகளை இன்னமும் நாம் கேட்டுக் கொண்டுதால் இருக்கிறோம். முந்தையது மனம் கேட்கும் கேள்வி; பின்னது அறிவு கேட்கும் கேள்வி. இன்னமும் இதற்கான விடைகளைத்தேடிக் கோண்டிருக்கிறோம்.

         நாவலில்;
       
   தன்னை ஓட்டைப்பல்லு என அறிமுகம் செய்துக் கொள்கிறான்  செண்பகராமன். இவனுக்கு மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த எல்லோர்க்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் இருப்பதை பெருமையாய் சொல்கிறான். ஆசிரியர்களும் அதில் அடக்கம்.

       தொடர்ந்து ஒரு சிறுவன் நம் முன் அமர்ந்து , நடந்தையும் நடக்காததையும் மிகைப்படுத்துஇ உணர்வுப்பூர்வமாக சொல்வதுபோது அமைந்திருக்கிறது எஸ்.ரா-வின் எழுத்து நடை.

  குழந்தைகள் கதை சொல்லும் போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போதெல்லாம் நம்மில் பலர் அதை செய்வதில்லை)  அப்போது ஏற்ற இறக்கமாக , கண் பெரிதாகி, கைகளை வானுக்கும் பூமிக்கும் ஆட்டியெல்லாம் கதை சொல்லுவார்கள். உடன் கதைக்குள், கதைக்குள், கதைக்குள் ஒரு கதையைச் சொல்லி மீண்டும், இடைவேளியில்லா கதையை தொடர்வார்கள்.

       சொல்லிக் கோண்டுபோகும் கதையில் திடீரென நம் அனுபவத்தையும் கேட்டு; கேள்விகள் கேட்டு பதிலுக்கு காத்திராமல் கதையை நகர்த்திக் கொண்டே செல்வார்கள். இந்நாவலில் அந்த சிறுவனும் அதையேத்தான் செய்கிறான்.
  
         உங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியிருந்தால்,
இந்த  நாவலை படித்துக் காட்டச் சொல்லுங்கள் . கடினமென்றால் பிள்ளைகளை உட்காரவைத்து நீங்கள் இந்நாவலை படித்துக் காட்டுங்கள். உங்கள் பிள்ளைகளோடு இன்னும் நீங்கள் நெருக்கமாவீர்கள்.  மொத்தமே 80 பக்கங்கள்தான். 

      நாவலில் இறுதியில் இப்படியாக சிறுவ கேட்கிறான்;
"எல்லா பெரியவங்களும் ஒரு காலத்துல சின்ன பையனா இருந்தவங்க தானே, ஆனா பலரும் அதை மறந்துருறாங்க. அது தான் ஒரே பிரச்சனை. சரி தானே? "

    அந்த ஓட்டைப்பல்லு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன் அப்போது நான் கதை சொன்ன பெரியவ்ர்களையும்; இப்போது என்னிடம் கதைசொல்லும் குழந்தைகளையும் நினைத்துப் பார்க்கிறேன்.


நன்றி.

- தயாஜி-

   

ஜூன் 12, 2012

தற்போதைய வாசிப்பில், ஆல்பெர் காம்யு--வின் 'அந்நியன்'




8.6.2012 இன்றோடு;

ரெ.கார்த்திகேசு எழுதிய ‘அந்திம காலம்’ நாவலை படித்து, வாசித்த அனுபவம் குறித்து எழுதியாகிவிட்ட்து (பிரசுரம் ஆகும் போது சொல்கிறேன் & அதன் லிங்க் கொடுக்கிறேன்)
தற்போதைய வாசிப்பில் அடுத்த நாவலாக வருவது; ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ (THE STRANGER)
இது ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல். 1942-ல் எழுதப்பட்டது.
இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சனைகளைத் தெளிவான நேர்மையுடன் விளக்கியிருக்கும் இவரது இலக்கிய படைப்புகளுக்காக இர்வருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
நாவலை எனக்கு முன் மொழிந்தவர் நண்பர் மா.நவின்.
..................................................................
இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண்மையை எழுதிவிட்ட தாளும் , அந்த ஒரு பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்.... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கிறது - என்கிறார் நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாதி ‘ஆல்பெர் காம்யு’
.....................................................

8.6.2012
இன்றோடு ஆல்பர் காம்யு-வின் ‘அந்நியன்’ நாவலின் மூன்றாம் அத்தியாயத்தை இப்போதுதான் படித்து முடித்தேன்.
ஆல்பேர் காம்யு-வே கதை சொல்லியாக நாவலில் சொல்லிச் செல்கிறார். நாவலில் முதல் வாக்கியமே இப்படி ஆரம்பமாகிறது.
“இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது”
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் , நாயகனின் செயல்களும் சிந்தனைகளும் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை நாவலை தொடர்ந்து படிப்பதன் மூலமும் , ஆல்பெர் காம்யு -வின் கோட்பாடுகள் குறிந்தும் அறிந்து கொள்வதின் மூலமும் இநாவல் எனக்கு புரிதலை ஏற்படுத்தலாம்.
.......................................................................
10.6.2012
இன்றுவரை இந்நாவலின் 4 பாகம் வரை படித்துவிட்டேன்.(60-ம் பக்கம் வரை)
என் குழப்பம் கூடிக்கொண்டுதான் போகிறது. இத்தனை குழப்பம் கொடுக்கும் நாவலை நான் படிப்பதின் அவசியம் என்ன என்றுகூட எனக்கு தெரியவில்லை. இன்றுதான் நாவலை ஆல்பெர் காம்யு , ‘மெர்சோ’ சொல்லிக் கொண்டுச் செல்வதாக எழுதியிருக்கிறார் என எனக்கு தெரிந்தது. தொடக்க அத்தியாயங்களில் ஆல்பெர் காம்யு-வே சொல்லி செல்வதாக நினைத்து படித்து வந்தேன். இப்போது எனக்கும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் - மெர்சோ கதையை சொல்லிச் செல்கிறான்.
  என் வரையில், வலது கையில் உண்பதையும் இடது கையில் உண்பதையும் நாயகன் வித்திசாயமாகப் பார்ப்பதில்லை. அவனுக்கு வலதும் ஒன்றுதான் இடது ஒன்றுதான்.
   என்னால் இதை நினைக்கவும் முடியவில்லை. வலது கையை அதற்கான வேலையை செய்வதற்கும் இடது கையை அதற்கான வேலை செய்வதற்கும் மட்டுமே பழக்கப்படுத்தியிருக்கிறேன். எனக்கு இரண்டும் ஒன்றல்ல. இது வேறு அது வேறு.
    நாயகன் ‘மெர்சோ’ அவனை விரும்பும் ஒரு பெண் தன்னை திருமணம் செய்வாயா என கேட்டதற்குக் கூட, அவள் வ் விருப்பம் அதுவென்றால் செய்ய தயார் என்றே சொல்கிறான். திருமணம் செய்து பழகுவது, திருமணம் செய்யாமல் பழகுவது அவனுக்கு ஒன்றாகவேப் படுகிறது.
    தேவையில்லாமால், உணவு விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணின் செயல்களை  சிரத்தை எடுத்தும்க் கொண்டு கவனிக்கிறான். அது விசித்திரமாக இருக்கவே (விசித்திரம் என சொல்வது சரியா என்று கூட எனக்குத் தெரியவில்லை.) அவளை பின் தொடர்கிறான். அதைகூட நாயகனான் முழுமையாகச் செய்ய முடியவில்லை. கொஞ்ச தூரம் சென்ற அவள் காணாதது குறித்து எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் திரும்புகிறான்.
    எந்த ஒரு காரண காரியம் இன்றி நண்பன் ஒருவனுக்கு உதவுகிறான். உதவாமல் இருப்பதும் உதவி செய்வது அவனுக்கு ஒன்றுதான்.
   ஆனால் உதவி என்பது அப்படிப்பட்ட ஒன்றா என்ன..? உதவி செய்வது செய்யாமல் இருப்பதும் ஒன்றே என நினைக்கும் ஒருவன் எப்படிபட்ட மனிதன். மூளைக் கோளாறு உள்ளவனா இல்லை அவன்தான் தெளிவானவனா..?
இனி அடுத்தடுத்த அத்தியாங்களை படித்து எழுதுகிறேன்.


...........................................................................

11.6.2012

    இன்றோடு 'அந்நியன்' நாவலின் முதல் பாகத்தை படித்தேன். தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் முதல் அத்தியாயத்தையும் படித்திருந்தேன்.

     முதல் பாகத்தின் முடிவில் காரணமோ எந்த முன்பகையோ இன்றி அரேபியன் ஒருவனை துப்பாக்கியால் சுடுகிறான் நாயகன். அதோடு விடவில்லை, இறந்தவனின் உடலை மீதமிருக்கும் நான்கு குண்டுகளால் சுடுகிறான்.

     இப்படியாக முதல் பாகம் முடிகிறது; 'அதுவே நான் என் துரதிஷ்டத்தின் வாயிற்கதவை நான்கு முறை தட்டியது போல் இருந்தது' என.

    இரண்டாம் பாகத்தில் விசாரிக்கப்படுகிறான். அவம் வழக்கில் நீதிபதிக்கு ஆர்வம் ஏற்படுகிறது. தனக்கென்று ஒரு வழக்கறிஞர் இல்லாத பட்சத்தில் அரசாங்கமே ஒரு வழக்கறிஞரை நியமிக்கும் என்கிறார் நீதிபதி. அது சிறப்பான ஒன்றாக நாயகன் கருத்து தெரிவிக்கிறான்.
  
     தன்னை சந்திக்க வரும் அரசாங்க வழக்கறிஞர் நாயகன் பேசுவதை கேட்டு வியப்படைகிறார் உடன் கோவப்படுகிறார். தன் தாயின் மரணத்தில் கூட அழாமல் இருந்ததன் காரணம் என்ன என்று வினவ பதில் இல்லையென வெறுமையாய் சொல்கிறான் நாயகன்.
    
    தாயின் இறுதி ஊர்வலத்தில் இருந்த அவன் எந்தவித பாதிப்பையும் காட்டாமல் இருந்தது தெரிந்ததும் வழக்கறிஞர் மேலும் விரக்தியடைகிறார். மேற்கொண்டு, நாயகனின் பேச்சு வழக்கறிஞருக்கு வழக்கில் வெற்றிபெற வாய்ப்பு குறைந்துக் கொண்டு வருவதை உணர்ந்துகிறது.


மேலும் படித்த பிறகு எழுதுகிறேன்.
.....................................................


           17.6.2012 - சில நாட்கள் இடைவேளிக்கு பிறகு மீண்டும் ஆல்பெர் காம்யு எழுதிய 'அந்நியன்' நாவலை படிக்கிறேன்.
வாசிப்பின் இடைவேளிக்கு நான் பொறுப்பல்ல; நாவலைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட 'வெறுமை' அல்லது 'பெயர் குறிப்பிட இயலாத' ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். அதனை அனுபவிக்கவே, வாசிப்பின் இந்த இடைவேளி........




......................................................................................................


     இருபதாவது  நாளாக 'அந்நியன்' நாவலைப் படித்து முடித்தேன்.  மலையேறிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது ஆல்பெர் காம்யு-வின் எழுத்துகளும் ; அந்நியன் கதாநாயன் மெர்சே-வும்.
..........................................................................................................


2.7.2012

அந்நியன் - இவனும் சக மனிதன்தான்
     வாசித்த புத்தகங்கள் குறித்து மனதில் தோன்றியவற்றை எழுதுவது வழக்கம். சில புத்தகங்களுக்கு சில வரிகளில் அனுபவத்தை சொல்லிவிடுவேன். இன்னும் சில புத்தகங்களுக்கு பக்கங்கள் நிறைய எழுதுவேன். சில புத்தகங்களுக்கு எதுவும் எழுத எண்ணியிருக்கவில்லை.
   இதில் அந்நியன் நாவலை எந்த இடத்தில் வைப்பது என முடிவாகத் தெரியவில்லை.
   சமீபகாலமாக தொடர்ந்து நாவல்களைப் படித்து வருகிறேன். அந்த வகையில் வந்ததுதான் அந்நியன் நாவல். இலக்கிய துறையில் எனக்கு முன்னோடியாகவும் நண்பராகவும் நான் நினைப்பது ம.நவின்-ஐ. அவர் அறிமுகம் செய்ததுதான், ஆல்பெர் காம்யு-வின் அந்நியன் நாவல்.  மற்றபடி என் வாசிப்பு அனுபவங்களை என் வலைப்பூவில் எழுதிவந்திருக்கிறேன்.
    வாங்கிய சில மாதங்கள் கழிந்த பின்னரே அந்நியனை படிக்க எடுத்தேன். அதற்கு முன் ‘இருத்தலியல்’ குறித்தோ ‘அபத்தம்’ குறித்தோ எந்த ஒரு புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. இப்போதுகூட என்னால் முழுமையாக அந்த கோட்பாடுகளை புரிந்துக் கொள்ள முடியவில்லை.
    இப்போது எழுதுவது கூட, எழுத வேண்டும் என எண்ணுகிறேன் அதனால் எழுதுகிறேன். எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் ஒன்றாகவே இருப்பது போல நினைக்கிறேன்.
    அந்நியன் நாவலின் தலைப்பை போலவே சமூகத்திடம் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறான் நாயகன். அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்விகளை அவனிடம் நம்மால் முன்வைக்க முடியவில்லை. தன் மனதுக்கு ஏற்றவாரு மிக இயல்பாக எந்த ஒரு உணர்ச்சிக்கும் அடிமையாகதவன் அவன். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்கிறான் என்றே சொல்லத் தோன்றுகிறது.
    நாவலில் தொடக்கமே; தாயின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது. மரணம் நாயகனை பாதிக்கவில்லை. அதுவும் தன்னை ஈன்ற தாயின் மரணம். எப்படி சாத்தியம்..!
    நாவலில் அந்த தாயில் மரணத்தை கடந்து வாசிக்கும் போது, முதன் முதலாக நான் கலந்துக் கொண்ட மரண நிகழ்வை நினைக்கத் தொடங்கினேன்.
    என் வயது நினைவில் இல்லை. ஒருவேளை எட்டு முதல் பத்துவரை இருக்கலாம். பெரிய குடும்பம் ஒன்றில் மூத்தவரான அம்மா இறந்துவிட்டார். என் வீட்டில் இருந்து எல்லாரும், சொகம் நிறைந்த முகத்துடன் சென்றோம். மரண வீட்டில் அந்த அம்மாவின் (பாட்டி வயது) வெளியே வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் இடத்தை அடையவும் அம்மாவின் உடலை அகற்றவும் சரியாக இருந்தது.
    உறவுகள் எல்லாம் கதறி அழத்தொடங்கின. சம்பந்தமே இல்லாத எனக்கும் அழுகை வந்தது அவர்களில் அழுகையால்.
    உடலை எடுத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில், அழுதவர்கள் எல்லாம், வீட்டைக் கழுவினர். நாற்காலிகளை அடுக்கினர். சமையலைத் தொடங்கினர். தேநீரெல்லாம் தயார் செய்துக் கொடுத்தனர். இந்த முறை, அவர்கள் கண்கள் கலங்கியிருக்கவில்லை. முன்பு அழுது வடிந்திருந்த முகங்கள் இப்போது வழக்கத்திற்கு திரும்பியிருந்தன.
   அரை மணி நேரத்துக்கு முன் ஒரு முகம், அரை மணிநேரத்துக்கு பின் ஒரு முகம். இதில் எதுதான் நிஜம்.
    ஆனால் அந்நியனின் வரும் நாயகன் அப்படி அல்ல. முன்னதில் அழுது பின்னதில் பிரகாசிக்க அவன் விரும்பவில்லை. எப்போதும் இயல்பாகவே இருக்கிறான்.  அழாதக் காரணமே கூட இவனுக்கு எதிராக சாட்சிப்படுத்தப்படுகிறது.
    மரணம் என்பது இயல்பானது என புரிந்துக் கொண்டு தற்காலிகத் தீர்வாக, அழுவதை விரும்பாத நாயகன், தனக்கு வரும் வெளிநாடு செல்லும் வாய்ப்பைக் கூட வேண்டாம் என்கிறான். அங்கு சென்றால், மகிழ்ச்சியாக இருக்கலாம் என  சொல்லும் மேலதிகாரியிடம் கூட, தற்போது இருப்பதே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறான். மேலதிகாரியால் அதனை சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை.
    அம்மாவின் மரணத்திற்கு பிறகு, தன் காதலியுடன் கடலில் குளிக்கிறான். உல்லாசமாக இருக்கிறான். அவள் வரையில் அவன் காதலன். அவன் வரையில் அவள் காதலியாக் இருந்தாலும்; காதலியாக இல்லாமல் இருந்தாலும் ஒன்றுதான். அவளுக்குத் தோன்றுவதை ஏற்கிறான். அவளுடன் வாதம் செய்யவோ, தன்னை பற்றிய புரிதல் ஏற்படுத்தவொ அவன் முயற்சிக்கவில்லை, விரும்பவும். நம்மிடம் கூட இதனை எழுதிய ஆல்பெர் காம்யு, தன் நாயகன் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மாறாக அந்த நாயகனின் வாழ்க்கையைக் காட்டுகிறார்.
   நாயகன் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவன் என சொல்ல முடியவில்லை. ஆனால் எதற்கும், அவன் உணர்ச்சிவசப்படவில்லை. அதே சமயம் அவன் உணர்வற்றவனும் இல்லை.
    ஜன்னல் வழியே , கடந்து போகும் ஒவ்வொருவரையும் கவனிக்கிறான். பெரிதாய் ஏதும் எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல், தினம் தினம் வீடு திரும்புகிறான். அரட்டை அடிக்க பெரிதாய் நண்பர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களும் ஒருவர் இருவர்தான். அதுகூட ஓரளவுக்கு இவனை சார்ந்தவர்கள்தான்.
     முதல் பாகம் முழுக்க நாயகனின் உணர்ச்சியற்ற வாழ்க்கைமுறையே சொல்லப்படுகிறது. இறுதியில் கொலைகாரனாகிறான். முன்விரோதமோ பகையோ கோவமோ காரணமல்ல, அந்த சூழல், வெயில் என்றே சொல்லலாம்.
    மனம் நம்மை இயக்குகிறது என சொல்வதைவிட, இதன் வழி புற சூழல்தான் நம்மை இயக்கிக் கொண்டுவருகிறது என நினைக்கத் தோன்றுகிறது. பகையும் பலிவாங்கும் உணர்ச்சியும் மனதில்தானே தோன்றுகிறது. வெயிலும் அதன் உஷ்ணமும் உடலில்தானே உணரமுடிகிறது. நாயகனுக்கு அப்படித்தான் போலும்.
   இரண்டாம் பாகம் முழுவதும் கைதியாகவே வருகிறான். கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படுகிறவன் பின்னர் தன் விசித்திர குணத்திற்காக விசாரிக்கப்படுகிறான் கவனிக்கப்படுகிறான்.
    நமது ஒவ்வொரு செயலும் நமது அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவதை நாயகனின் வாழ்க்கை காட்டுவதாகப் படுகிறது. இதற்கிடையில் மன்னிப்புகளுக்கும் கடவுள்களுக்கு வேலை இல்லாத்தையே நாயகன் காட்டுகிறான்.
   இந்நாவலில் வாசிப்பு எனக்கு புது அனுபவத்தையேக் கொடுத்தது. இதுவரை படித்திருந்த நாவல்கள் எல்லாம் உணர்ச்சிகளையும் கேள்விகளையும்தான் முன்வைத்தன. அந்நியன் நாவல் எனக்குள் கேள்வியினை முன்வைத்தது.
    புரிந்துக் கொண்டது இதுதான், சமுதாயத்தில் பொதுபுத்தி சார்ந்தே நாம்  செயல்படவேண்டியுள்ளது. மீறி எதனையும் கேள்வி கேட்டால் நாம் அந்நியமாக்கப்படுகிறோம். அதற்கான காரணங்களை பொதுபுத்திகள் இலகுவாக சொல்லிவிடுகிறார்கள்.
மரணத்தில் அவர்கள் அழுதால் நாமும் அழவேண்டும்.
நட்பு என்றும் காதல் என்றும் அவர்கள் கொண்டாடினால், நாமும் கொண்டாடவேண்டும்
தவறுகள் செய்த பிறகு, பாவமன்னுப்பு கேட்டால் நாமும் அப்படித்தான் கேட்கவேண்டும். ஏனெனில் நம் செயலுக்கு நாமே பொறுப்பேற்க கூடாது.
தனித்து செயல்படக்கூடாது.
அதைத்தான் நாம் வாழும் இந்த பொழுதுபுத்தி சமூகம் எதிர்ப்பார்க்கிறது என்றால்; நம்மால் அதை ஈடுகட்ட முடியாதென்றால் நாம் கூட அந்நியன்கள்தான். ஆனால் கவிஞர்களாக நொடிகளையும் அனுபவித்து வாழ்வோம்.

தயாஜி
   

ஜூன் 01, 2012

ந.பிச்சமூர்த்தி - 'வெறும் செருப்பு'




    தொடர்ந்து நாவல்களை படித்து, கொஞ்சம் இடைவேளி/ஓய்வு கருதி சிறுகதை ஒன்றை படிக்கலாம் என புத்தக அலமாரியைத் திறந்தேன். ஜனவரியில் வாங்கியிருந்த மாதாந்திர நாவல் புத்தகத்தில் சிறப்பாக பாரதியார், புதுமைப் பித்தன், அறிஞர் அண்ணா, கு.ப.ராஜகோபாலன், கல்கி, ந.பிச்சமூர்த்தி மற்றும் லா.சா.ராமாமிருதம் ஆகியோர் எழுதிய ஒவ்வொரு சிறுகதையையும் ஒன்றாக பிரசுரித்திருந்தார்கள்.

   நண்பர் நவினால் அறிமுகம் செய்யப்பட்டு, சுந்தர ராமசாமியின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துவந்தேன். சு.ரா-வின் ‘நா.பிச்சமூர்த்தியின் கலை - மரபும் மனித நேயமும்’ என்ற புத்தகத்தை படித்த போதுதான் நா. பிச்சமூர்த்தி குறித்தும் அவரது எழுத்து குறித்தும் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவரின் கவிதைகளோ, சிறுகதைகளோ கிடைப்பது அரிதாக இருந்தது. இருந்தும் சு.ரா இந்த புத்தகத்தில் ந.பிச்சமூர்த்தியின் கதைகள், கவிதைகள், அவரது வாழ்க்கை குறித்து ஆழ்ந்தும் அற்புதமாகவும் எழுதியிருக்கிறார். இதுவரை நான் படித்த புத்தகங்கள்லேயே அதிக அளவு கோடிட்டும், சிறு சிறு குறிப்பும் எழுதி படித்த புத்தகம் இதுதான். கவிஞன் என்பவன் யார் என்கிற தெளிவும் கூட எனக்கு கிடைத்தது. வெறும் சந்தத்திலும் எதுகையிலும் மோலையிலும் , அழகுகளை மீறிய ஆழ்மன அழுக்குகளையும் ஆதங்கங்களையும் ஆன்மிக தேடல்களையும் இவர் சொல்லியிருக்கும் விதம் அபாரம் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் அந்த புத்தகத்தை படித்து, இன்னும் அதிகமாக எழுத விரும்புகிறேன்.

சரி இப்போது,
    நான் அந்த நாவலை வாங்கியது கூட ந.பிச்சமூர்த்தியின் கதையை படிக்கத்தான். படித்தேன்.
தலைப்பு ‘வெறும் செருப்பு’.
 
   வெறும் செருப்பில் இருந்து வாழ்வின் உன்னத தத்துவமான ‘நிலையின்மையை’ சொல்லியிருக்கிறார் ந.பிச்சமூர்த்தி. அறுந்துபோன செருப்பை ஒதுக்கி புது செருப்புடன் நடக்கிறார்; கதை அங்கே தொடங்குகிறது. செருப்பை மிக கவனமாக உபயோகிக்கிறார், அதிக அக்கறை காட்டுகிறார். பின் நண்பரின் மரண செய்தி. ரயில் பயணாமாய் இறப்பு வீட்டிற்கு செல்கிறார். செல்லும் வழியில் தனது சிந்தனை முழுவதையும் ஆகிரமித்திருந்த செருப்பை திடீரென உணர்கிறார். அங்கே நிலையாமை புலப்படுகிறது. நண்பரின் மரணமும், தனது மனம் முழுக்க பரவியிருக்கும் புது செருப்பும் எதையோ இவருக்கு நினைவூட்டுகிறது.

    மரண வீட்டிற்கு செல்லும் போது காலில் செருப்பு இல்லை. நண்பர் ஒருவர் விசாரிக்க , இப்படி பதில் கொடுக்கிறார்,    

 “ ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். இயிரென்னும் வழிபோக்கன் எப்போதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எறிலயாம். யாரால் தடுக்க முடியும் ”
   
   நேரம்/வாய்ப்பு இருப்பின் படித்து பாருங்களேன். நா.பிச்சமூர்த்தியின் ‘வெறும் செருப்பு’ .


 இப்படிக்கு தயாஜி.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்