பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 28, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘கவிதையின் கையசைப்பு’

புத்தகவாசிப்பு_2021 ‘கவிதையின் கையசைப்பு’

தலைப்பு –‘கவிதையின் கையசைப்பு’

வகை – கட்டுரைகள்

எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்

வெளியீடு – தேசாந்திரி

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 

எஸ்.ரா எப்போதும் எனக்கு விருப்பமான எழுத்தாளர். மனம் சோர்ந்த போதும் அவரது எழுத்துகளை வாசிக்கையில் மீண்டு வரலாம். தன் அனுபவத்தை வாசகர்கள் மனதில் கடத்தி அனுபவத்திற்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்ககூடியவர். தனக்கென்ற ஒரு தனி வாசக பரப்பை உருவாக்கிக்கொண்டவர்.

‘கவிதையின் கையசைப்பு’ கட்டுரை தொகுப்பு 2019-ல் வெளிவந்தது. தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வந்தது குறிப்பிடத்தக்கது. 12 பிறமொழி கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும் நமக்கு இக்கட்டுரைகள் வழி அறிமுகம் செய்கின்றார்.

கவிஞர்கள் தேவதச்சன், சமயவேல் இருவரும் இக்கட்டுரை தொகுப்பில் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்கள். ஒவ்வொரு கட்டுரைக்கு நிறைவாக கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன.

பிறமொழி கவிதைகளை புரிந்துக் கொள்ள அக்கவிஞர்கள் பற்றிய புரிதல் தேவை என்பதை எடுத்துக்காட்டுகின்றார். அதோடு அவர்களின் பின்னணியைப் பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டியதின் அவசியத்தை அழகாய் காட்டியுள்ளார் எஸ்.ரா.

கட்டுரை முழுக்கவும் கவிதைகளை எப்படி அணுகுவது கவிஞர்களின் மனநிலையை எது நிர்ணயம் செய்கின்றது போன்றவற்றை முக்கியமான கேள்விகளுக்கு விடைகளை தந்துக்கொண்டே இருக்கின்றார். “கவிதை, எப்போதும் நாம் அறிந்த உலகை அறியாத உலகமாக்குகிறது. கூடவே, அறியாத உலகை நெருக்கமான அனுபவமாகவும் மாற்றுகிறது. கண் வழியே பதிவாகும் அனுபவங்களை, சொற்களைக் கொண்டு சிதறடிக்கிறது.” என்கிறார்.

12 கவிஞர்கள் குறித்து பேசும் போது, அவர்கள் விரும்பிய அவர்களுடன் எழுதிய இன்ன பிற கவிஞர்களையும் சிறு சிறு குறிப்புகளாக அறிமுகம் செய்கின்றார்.

 பிறமொழி கவிதைகளில் சொல்லப்படும் அன்றாட வாழ்க்கையை வாசிக்கையில் இதில் கவிதையாவதற்கு என்ன இருக்கின்றது என்கிற சந்தேகம் எழுவது இயல்பு. புத்தகத்தில் இடம்பெற்ற கட்டுரையில் இருந்து ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.

‘மேஜையின் மீது வைக்கப்பட்ட ரொட்டி

ஒரு குவளை நீர்

அல்லது ஒரு துளி உப்பு

போன்றதே கவிதையும்’

    என்கிறார் ரூபஸின் என்னும் கவிஞர். இக்கவிதையில் பெரிதாக என்ன வந்துவிட்டது என்கிற சிந்தனை வரலாம். இக்கவிஞருக்கு 1998-ல் புதிதாக கண்டறியப்பட்ட சிறிய கிரகம் ஒன்றிற்கு ‘ரூபஸ்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒரு கவிஞனுக்குச் செய்யப்பட உயரிய மரியாதை இதைவிட வேறு என்ன இருக்க முடியும் என்கிறார் ஆசிரியர். அவரின் பின்னணி, அவர் வாழ்ந்த சூழல் , அவரின் சமூகம் எதிர்கொண்ட சிக்கல்களை தெரிந்தவர்களுக்கு மேற் சொன்ன அவரது கவிதையின் வரும் ரொட்டியும் குவளை நீரும், உப்பும் அத்தனை எளிய பொருள் அல்ல என புரிந்துவிடும். இவ்வாறாக கட்டுரை முழுக்கவும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியவற்றின் அடிப்படைகளை விளக்கமாகச் சொல்லிக்கொண்டேப் போகின்றார் ஆசிரியர்.

            ‘கவிதையின் கையசைப்பு’ என்னும் இக்கட்டுரை தொகுப்பு, கவிதை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பயனான புத்தகம். வாசித்தப்பின் அக்கவிஞர்களின் பிற கவிதைகளை தேடி வாசிக்க வைக்கின்றது.

 

#தயாஜி

 

2 comments:

PUNNIAVAN சொன்னது…

இதயத் துடிப்பு அதிகமாகிறது. வாசிக்கும் வரை அது அமைதிகொள்ளாதோ!

தயாஜி சொன்னது…

அன்பும் நன்றியும்... :)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்