பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 12, 2012

தற்போதைய வாசிப்பில், ஆல்பெர் காம்யு--வின் 'அந்நியன்'




8.6.2012 இன்றோடு;

ரெ.கார்த்திகேசு எழுதிய ‘அந்திம காலம்’ நாவலை படித்து, வாசித்த அனுபவம் குறித்து எழுதியாகிவிட்ட்து (பிரசுரம் ஆகும் போது சொல்கிறேன் & அதன் லிங்க் கொடுக்கிறேன்)
தற்போதைய வாசிப்பில் அடுத்த நாவலாக வருவது; ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ (THE STRANGER)
இது ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல். 1942-ல் எழுதப்பட்டது.
இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சனைகளைத் தெளிவான நேர்மையுடன் விளக்கியிருக்கும் இவரது இலக்கிய படைப்புகளுக்காக இர்வருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
நாவலை எனக்கு முன் மொழிந்தவர் நண்பர் மா.நவின்.
..................................................................
இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண்மையை எழுதிவிட்ட தாளும் , அந்த ஒரு பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்.... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கிறது - என்கிறார் நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாதி ‘ஆல்பெர் காம்யு’
.....................................................

8.6.2012
இன்றோடு ஆல்பர் காம்யு-வின் ‘அந்நியன்’ நாவலின் மூன்றாம் அத்தியாயத்தை இப்போதுதான் படித்து முடித்தேன்.
ஆல்பேர் காம்யு-வே கதை சொல்லியாக நாவலில் சொல்லிச் செல்கிறார். நாவலில் முதல் வாக்கியமே இப்படி ஆரம்பமாகிறது.
“இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது”
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் , நாயகனின் செயல்களும் சிந்தனைகளும் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை நாவலை தொடர்ந்து படிப்பதன் மூலமும் , ஆல்பெர் காம்யு -வின் கோட்பாடுகள் குறிந்தும் அறிந்து கொள்வதின் மூலமும் இநாவல் எனக்கு புரிதலை ஏற்படுத்தலாம்.
.......................................................................
10.6.2012
இன்றுவரை இந்நாவலின் 4 பாகம் வரை படித்துவிட்டேன்.(60-ம் பக்கம் வரை)
என் குழப்பம் கூடிக்கொண்டுதான் போகிறது. இத்தனை குழப்பம் கொடுக்கும் நாவலை நான் படிப்பதின் அவசியம் என்ன என்றுகூட எனக்கு தெரியவில்லை. இன்றுதான் நாவலை ஆல்பெர் காம்யு , ‘மெர்சோ’ சொல்லிக் கொண்டுச் செல்வதாக எழுதியிருக்கிறார் என எனக்கு தெரிந்தது. தொடக்க அத்தியாயங்களில் ஆல்பெர் காம்யு-வே சொல்லி செல்வதாக நினைத்து படித்து வந்தேன். இப்போது எனக்கும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் - மெர்சோ கதையை சொல்லிச் செல்கிறான்.
  என் வரையில், வலது கையில் உண்பதையும் இடது கையில் உண்பதையும் நாயகன் வித்திசாயமாகப் பார்ப்பதில்லை. அவனுக்கு வலதும் ஒன்றுதான் இடது ஒன்றுதான்.
   என்னால் இதை நினைக்கவும் முடியவில்லை. வலது கையை அதற்கான வேலையை செய்வதற்கும் இடது கையை அதற்கான வேலை செய்வதற்கும் மட்டுமே பழக்கப்படுத்தியிருக்கிறேன். எனக்கு இரண்டும் ஒன்றல்ல. இது வேறு அது வேறு.
    நாயகன் ‘மெர்சோ’ அவனை விரும்பும் ஒரு பெண் தன்னை திருமணம் செய்வாயா என கேட்டதற்குக் கூட, அவள் வ் விருப்பம் அதுவென்றால் செய்ய தயார் என்றே சொல்கிறான். திருமணம் செய்து பழகுவது, திருமணம் செய்யாமல் பழகுவது அவனுக்கு ஒன்றாகவேப் படுகிறது.
    தேவையில்லாமால், உணவு விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணின் செயல்களை  சிரத்தை எடுத்தும்க் கொண்டு கவனிக்கிறான். அது விசித்திரமாக இருக்கவே (விசித்திரம் என சொல்வது சரியா என்று கூட எனக்குத் தெரியவில்லை.) அவளை பின் தொடர்கிறான். அதைகூட நாயகனான் முழுமையாகச் செய்ய முடியவில்லை. கொஞ்ச தூரம் சென்ற அவள் காணாதது குறித்து எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் திரும்புகிறான்.
    எந்த ஒரு காரண காரியம் இன்றி நண்பன் ஒருவனுக்கு உதவுகிறான். உதவாமல் இருப்பதும் உதவி செய்வது அவனுக்கு ஒன்றுதான்.
   ஆனால் உதவி என்பது அப்படிப்பட்ட ஒன்றா என்ன..? உதவி செய்வது செய்யாமல் இருப்பதும் ஒன்றே என நினைக்கும் ஒருவன் எப்படிபட்ட மனிதன். மூளைக் கோளாறு உள்ளவனா இல்லை அவன்தான் தெளிவானவனா..?
இனி அடுத்தடுத்த அத்தியாங்களை படித்து எழுதுகிறேன்.


...........................................................................

11.6.2012

    இன்றோடு 'அந்நியன்' நாவலின் முதல் பாகத்தை படித்தேன். தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் முதல் அத்தியாயத்தையும் படித்திருந்தேன்.

     முதல் பாகத்தின் முடிவில் காரணமோ எந்த முன்பகையோ இன்றி அரேபியன் ஒருவனை துப்பாக்கியால் சுடுகிறான் நாயகன். அதோடு விடவில்லை, இறந்தவனின் உடலை மீதமிருக்கும் நான்கு குண்டுகளால் சுடுகிறான்.

     இப்படியாக முதல் பாகம் முடிகிறது; 'அதுவே நான் என் துரதிஷ்டத்தின் வாயிற்கதவை நான்கு முறை தட்டியது போல் இருந்தது' என.

    இரண்டாம் பாகத்தில் விசாரிக்கப்படுகிறான். அவம் வழக்கில் நீதிபதிக்கு ஆர்வம் ஏற்படுகிறது. தனக்கென்று ஒரு வழக்கறிஞர் இல்லாத பட்சத்தில் அரசாங்கமே ஒரு வழக்கறிஞரை நியமிக்கும் என்கிறார் நீதிபதி. அது சிறப்பான ஒன்றாக நாயகன் கருத்து தெரிவிக்கிறான்.
  
     தன்னை சந்திக்க வரும் அரசாங்க வழக்கறிஞர் நாயகன் பேசுவதை கேட்டு வியப்படைகிறார் உடன் கோவப்படுகிறார். தன் தாயின் மரணத்தில் கூட அழாமல் இருந்ததன் காரணம் என்ன என்று வினவ பதில் இல்லையென வெறுமையாய் சொல்கிறான் நாயகன்.
    
    தாயின் இறுதி ஊர்வலத்தில் இருந்த அவன் எந்தவித பாதிப்பையும் காட்டாமல் இருந்தது தெரிந்ததும் வழக்கறிஞர் மேலும் விரக்தியடைகிறார். மேற்கொண்டு, நாயகனின் பேச்சு வழக்கறிஞருக்கு வழக்கில் வெற்றிபெற வாய்ப்பு குறைந்துக் கொண்டு வருவதை உணர்ந்துகிறது.


மேலும் படித்த பிறகு எழுதுகிறேன்.
.....................................................


           17.6.2012 - சில நாட்கள் இடைவேளிக்கு பிறகு மீண்டும் ஆல்பெர் காம்யு எழுதிய 'அந்நியன்' நாவலை படிக்கிறேன்.
வாசிப்பின் இடைவேளிக்கு நான் பொறுப்பல்ல; நாவலைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட 'வெறுமை' அல்லது 'பெயர் குறிப்பிட இயலாத' ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். அதனை அனுபவிக்கவே, வாசிப்பின் இந்த இடைவேளி........




......................................................................................................


     இருபதாவது  நாளாக 'அந்நியன்' நாவலைப் படித்து முடித்தேன்.  மலையேறிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது ஆல்பெர் காம்யு-வின் எழுத்துகளும் ; அந்நியன் கதாநாயன் மெர்சே-வும்.
..........................................................................................................


2.7.2012

அந்நியன் - இவனும் சக மனிதன்தான்
     வாசித்த புத்தகங்கள் குறித்து மனதில் தோன்றியவற்றை எழுதுவது வழக்கம். சில புத்தகங்களுக்கு சில வரிகளில் அனுபவத்தை சொல்லிவிடுவேன். இன்னும் சில புத்தகங்களுக்கு பக்கங்கள் நிறைய எழுதுவேன். சில புத்தகங்களுக்கு எதுவும் எழுத எண்ணியிருக்கவில்லை.
   இதில் அந்நியன் நாவலை எந்த இடத்தில் வைப்பது என முடிவாகத் தெரியவில்லை.
   சமீபகாலமாக தொடர்ந்து நாவல்களைப் படித்து வருகிறேன். அந்த வகையில் வந்ததுதான் அந்நியன் நாவல். இலக்கிய துறையில் எனக்கு முன்னோடியாகவும் நண்பராகவும் நான் நினைப்பது ம.நவின்-ஐ. அவர் அறிமுகம் செய்ததுதான், ஆல்பெர் காம்யு-வின் அந்நியன் நாவல்.  மற்றபடி என் வாசிப்பு அனுபவங்களை என் வலைப்பூவில் எழுதிவந்திருக்கிறேன்.
    வாங்கிய சில மாதங்கள் கழிந்த பின்னரே அந்நியனை படிக்க எடுத்தேன். அதற்கு முன் ‘இருத்தலியல்’ குறித்தோ ‘அபத்தம்’ குறித்தோ எந்த ஒரு புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. இப்போதுகூட என்னால் முழுமையாக அந்த கோட்பாடுகளை புரிந்துக் கொள்ள முடியவில்லை.
    இப்போது எழுதுவது கூட, எழுத வேண்டும் என எண்ணுகிறேன் அதனால் எழுதுகிறேன். எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் ஒன்றாகவே இருப்பது போல நினைக்கிறேன்.
    அந்நியன் நாவலின் தலைப்பை போலவே சமூகத்திடம் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறான் நாயகன். அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்விகளை அவனிடம் நம்மால் முன்வைக்க முடியவில்லை. தன் மனதுக்கு ஏற்றவாரு மிக இயல்பாக எந்த ஒரு உணர்ச்சிக்கும் அடிமையாகதவன் அவன். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்கிறான் என்றே சொல்லத் தோன்றுகிறது.
    நாவலில் தொடக்கமே; தாயின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது. மரணம் நாயகனை பாதிக்கவில்லை. அதுவும் தன்னை ஈன்ற தாயின் மரணம். எப்படி சாத்தியம்..!
    நாவலில் அந்த தாயில் மரணத்தை கடந்து வாசிக்கும் போது, முதன் முதலாக நான் கலந்துக் கொண்ட மரண நிகழ்வை நினைக்கத் தொடங்கினேன்.
    என் வயது நினைவில் இல்லை. ஒருவேளை எட்டு முதல் பத்துவரை இருக்கலாம். பெரிய குடும்பம் ஒன்றில் மூத்தவரான அம்மா இறந்துவிட்டார். என் வீட்டில் இருந்து எல்லாரும், சொகம் நிறைந்த முகத்துடன் சென்றோம். மரண வீட்டில் அந்த அம்மாவின் (பாட்டி வயது) வெளியே வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் இடத்தை அடையவும் அம்மாவின் உடலை அகற்றவும் சரியாக இருந்தது.
    உறவுகள் எல்லாம் கதறி அழத்தொடங்கின. சம்பந்தமே இல்லாத எனக்கும் அழுகை வந்தது அவர்களில் அழுகையால்.
    உடலை எடுத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில், அழுதவர்கள் எல்லாம், வீட்டைக் கழுவினர். நாற்காலிகளை அடுக்கினர். சமையலைத் தொடங்கினர். தேநீரெல்லாம் தயார் செய்துக் கொடுத்தனர். இந்த முறை, அவர்கள் கண்கள் கலங்கியிருக்கவில்லை. முன்பு அழுது வடிந்திருந்த முகங்கள் இப்போது வழக்கத்திற்கு திரும்பியிருந்தன.
   அரை மணி நேரத்துக்கு முன் ஒரு முகம், அரை மணிநேரத்துக்கு பின் ஒரு முகம். இதில் எதுதான் நிஜம்.
    ஆனால் அந்நியனின் வரும் நாயகன் அப்படி அல்ல. முன்னதில் அழுது பின்னதில் பிரகாசிக்க அவன் விரும்பவில்லை. எப்போதும் இயல்பாகவே இருக்கிறான்.  அழாதக் காரணமே கூட இவனுக்கு எதிராக சாட்சிப்படுத்தப்படுகிறது.
    மரணம் என்பது இயல்பானது என புரிந்துக் கொண்டு தற்காலிகத் தீர்வாக, அழுவதை விரும்பாத நாயகன், தனக்கு வரும் வெளிநாடு செல்லும் வாய்ப்பைக் கூட வேண்டாம் என்கிறான். அங்கு சென்றால், மகிழ்ச்சியாக இருக்கலாம் என  சொல்லும் மேலதிகாரியிடம் கூட, தற்போது இருப்பதே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறான். மேலதிகாரியால் அதனை சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை.
    அம்மாவின் மரணத்திற்கு பிறகு, தன் காதலியுடன் கடலில் குளிக்கிறான். உல்லாசமாக இருக்கிறான். அவள் வரையில் அவன் காதலன். அவன் வரையில் அவள் காதலியாக் இருந்தாலும்; காதலியாக இல்லாமல் இருந்தாலும் ஒன்றுதான். அவளுக்குத் தோன்றுவதை ஏற்கிறான். அவளுடன் வாதம் செய்யவோ, தன்னை பற்றிய புரிதல் ஏற்படுத்தவொ அவன் முயற்சிக்கவில்லை, விரும்பவும். நம்மிடம் கூட இதனை எழுதிய ஆல்பெர் காம்யு, தன் நாயகன் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மாறாக அந்த நாயகனின் வாழ்க்கையைக் காட்டுகிறார்.
   நாயகன் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவன் என சொல்ல முடியவில்லை. ஆனால் எதற்கும், அவன் உணர்ச்சிவசப்படவில்லை. அதே சமயம் அவன் உணர்வற்றவனும் இல்லை.
    ஜன்னல் வழியே , கடந்து போகும் ஒவ்வொருவரையும் கவனிக்கிறான். பெரிதாய் ஏதும் எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல், தினம் தினம் வீடு திரும்புகிறான். அரட்டை அடிக்க பெரிதாய் நண்பர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களும் ஒருவர் இருவர்தான். அதுகூட ஓரளவுக்கு இவனை சார்ந்தவர்கள்தான்.
     முதல் பாகம் முழுக்க நாயகனின் உணர்ச்சியற்ற வாழ்க்கைமுறையே சொல்லப்படுகிறது. இறுதியில் கொலைகாரனாகிறான். முன்விரோதமோ பகையோ கோவமோ காரணமல்ல, அந்த சூழல், வெயில் என்றே சொல்லலாம்.
    மனம் நம்மை இயக்குகிறது என சொல்வதைவிட, இதன் வழி புற சூழல்தான் நம்மை இயக்கிக் கொண்டுவருகிறது என நினைக்கத் தோன்றுகிறது. பகையும் பலிவாங்கும் உணர்ச்சியும் மனதில்தானே தோன்றுகிறது. வெயிலும் அதன் உஷ்ணமும் உடலில்தானே உணரமுடிகிறது. நாயகனுக்கு அப்படித்தான் போலும்.
   இரண்டாம் பாகம் முழுவதும் கைதியாகவே வருகிறான். கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படுகிறவன் பின்னர் தன் விசித்திர குணத்திற்காக விசாரிக்கப்படுகிறான் கவனிக்கப்படுகிறான்.
    நமது ஒவ்வொரு செயலும் நமது அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவதை நாயகனின் வாழ்க்கை காட்டுவதாகப் படுகிறது. இதற்கிடையில் மன்னிப்புகளுக்கும் கடவுள்களுக்கு வேலை இல்லாத்தையே நாயகன் காட்டுகிறான்.
   இந்நாவலில் வாசிப்பு எனக்கு புது அனுபவத்தையேக் கொடுத்தது. இதுவரை படித்திருந்த நாவல்கள் எல்லாம் உணர்ச்சிகளையும் கேள்விகளையும்தான் முன்வைத்தன. அந்நியன் நாவல் எனக்குள் கேள்வியினை முன்வைத்தது.
    புரிந்துக் கொண்டது இதுதான், சமுதாயத்தில் பொதுபுத்தி சார்ந்தே நாம்  செயல்படவேண்டியுள்ளது. மீறி எதனையும் கேள்வி கேட்டால் நாம் அந்நியமாக்கப்படுகிறோம். அதற்கான காரணங்களை பொதுபுத்திகள் இலகுவாக சொல்லிவிடுகிறார்கள்.
மரணத்தில் அவர்கள் அழுதால் நாமும் அழவேண்டும்.
நட்பு என்றும் காதல் என்றும் அவர்கள் கொண்டாடினால், நாமும் கொண்டாடவேண்டும்
தவறுகள் செய்த பிறகு, பாவமன்னுப்பு கேட்டால் நாமும் அப்படித்தான் கேட்கவேண்டும். ஏனெனில் நம் செயலுக்கு நாமே பொறுப்பேற்க கூடாது.
தனித்து செயல்படக்கூடாது.
அதைத்தான் நாம் வாழும் இந்த பொழுதுபுத்தி சமூகம் எதிர்ப்பார்க்கிறது என்றால்; நம்மால் அதை ஈடுகட்ட முடியாதென்றால் நாம் கூட அந்நியன்கள்தான். ஆனால் கவிஞர்களாக நொடிகளையும் அனுபவித்து வாழ்வோம்.

தயாஜி
   

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்