- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 20/20
பெருமாள்முருகன் சிறுகதை; ‘முத்தம்’ 20/20
இன்று இருபதாவது சிறுகதையைப் பார்க்கவுள்ளோம். இந்த தொடர் வாசிப்பு கட்டுரையின் நிறைவு கட்டுரையும் இதுதான். நாளை பெருமாள்முருகனைச் சந்திக்கவுள்ளேன். அதற்குள் இந்தக் கட்டுரையை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தால் நாளை எழுதவேண்டியதை இன்று எழுதுகிறேன்.
நாளை மறுநாள்; டிசம்பர் 21-ம் திகதி, வல்லினம் விருது விழா என்னும் நம் நாட்டின் முக்கியமான இலக்கிய நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதனை நிகழ்ச்சி என்று சுருக்காமல் இலக்கிய முன்னெடுப்பு என்றே அழைக்க விரும்புகிறேன். நீங்களும் இந்த விருது விழாவிற்கு வந்தால், நான் சொல்வதற்கான காரணத்தை நீங்கள் நேரடியாக உணரலாம்.
இவ்விழாவில் மலேசிய மக்களிடம் நன்கு அறிமுகமானவரும், பலரும் தங்களின் கல்விசார் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் நினைக்கும் பி.எம்.மூர்த்தி அவர்களுக்கு இம்முறை இவ்விருதைக் கொடுக்கின்றார்கள். அதோடு பி.எம்.மூர்த்தி குறித்த ‘கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை’ என்னும் புத்தகத்தையும் வெளியிடவுள்ளார்கள்.
பிரிக்பீல்ட் YMCA மண்டபத்தில் ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் இவ்விருது விழாவில் மேலும் ஒரு சிறப்புரையை வழங்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் வருகின்றார்.
எப்போதும் சொல்வதுதான் நாம் நேசிக்கும் செயல்பாடுகளை நம்மால் செய்யமுடியாமல் போகலாம். ஆனால் நாம் நம்பும் ஒன்று நம் கண்முன்னே நடக்கின்றது என உணர்ந்துவிட்டால் நாமும் நம்மால் முடிந்த சிறு பங்களிப்பை தருவதே ஒருவகையில் நாமும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம் என்பதற்கான ஒரு சாட்சிதான். இந்த சாட்சி யாருக்கு தேவையோ இல்லையோ நமக்கு நாம் கொடுக்கும் உற்சாகம் அதுதான்.
அந்த உற்சாகத்தை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். அந்த உற்சாகம்தான் இன்று இருபதாவது சிறுகதையைக் குறித்து எழுதவும் வைக்கிறது.
ஓர் எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் எவரும் அந்த எழுத்தாளரின் படைப்புகளில் சிலவற்றையாவது வாசித்திருத்தல் என்பது அடிப்படை என எப்போதும் நம்புகிறேன். நான் இதனை தொடர்ந்து செய்வதால்தான் உங்களோடும் பகிர்ந்து கொளகிறேன்.
நான் தொடர்ந்து எழுதிய இந்த வாசிப்பு கட்டுரையின் வழி எழுத்தாளர் ‘பெருமாள்முருகன் படைப்புலகம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் முன் பேசுவதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதற்கான மேலும் சில தயாரிப்பு வேலைகள் இருப்பதால்தான் நாளை பகிரவேண்டிய இந்த வாசிப்பு கட்டுரையை இன்று பகிர்கிறேன்.
பெருமாள்முருகன் சிறுகதை; ‘முத்தம்’ 20/20.
இக்கதையின் களம் எனக்கு புதியது. ஓர் இளைஞன் திருடுவதற்கான புதிய வழியைக் கண்டுபிடிக்கின்றான். அதன் படி அவனுக்கு அவனே சில சட்ட திட்டங்களை வைத்துக்கொள்கிறான். அவனே அதை மீறவும் செய்கிறான். அவனது வயது அப்படி. அதன் பின் என்ன நடந்து. அவனது திட்டம் ஈடேறியதா இல்லையா என்பதுதான் கதை.
இதனைப் படித்ததும் சினிமாக்களில் காட்டும் சில கோமாளி திருடர்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இக்கதையின் போக்கு உங்களுக்கு வேறொரு உலகத்தைக் காட்டும். இக்கதையின் எதிர்ப்பாராத முடியும் நம்மை பலவிதங்களில் யோசிக்க வைக்கும்.
மலைப்பகுதியில் இருக்கும் சிறு குகையின் உள்பகுதியில் நாயகன் சென்று ஒழிந்து கொள்வதாக கதை தொடங்குகிறது. அந்தப் பக்கம் இருக்கும் ஒத்தையடி பாதியில் அவ்வப்போது சிலர் வருவார்கள் போவார்கள். அங்கே வரும் காதல் ஜோடிகள் யார் கண்ணிலும் படாமல் சில்மிஷங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற இடமும் அங்கே இருக்கிறது. அங்கு வரும் காதலர்களுக்கு அந்த இடம் கண்ணில் பட்டுவிடும். நாயகன் ஒழிந்திருக்கும் இடத்தில் இருந்து அங்கு பார்க்கலாம். இவனது வேலை என்னவென்றால் அந்தப் புதருக்கு வரும் காதல் ஜோடிகளை கவனித்து அவர்கள் மெய்மறக்கும் சமயம் சட்டாரென அவர்கள் முன் தோன்றி பயம்காட்டி அவர்களிடம் இருந்து பணததையும் நகையையும் திருடிக்கொள்வதுதான். முகத்தை மறைத்தபடி தீடீரென தோன்றும் அப்படியொரு உருவத்தைப் பார்த்தவர்கள் நிச்சயம் பதறத்தானே செய்வார்கள். அதிலும் அந்த இளம்ஜோடிகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வேன் என்று கூறும் நாயகன்; அவர்களைப் பொறுத்தவரை இந்தக் கதையின் வில்லன் தானே.
நாயகன் யார் என்ன செய்கிறான். இந்தத் திருட்டுத் தொழிலை ஏன் தொடங்கினான் எப்படி தொடங்கினான் என எழுத்தாளர் சொல்வது நமக்கு புதிய கதைக்களாக இருக்கலாம். ஆனால் இது எங்கோ நடக்கும் உண்மை சம்பவமாகவே நமக்கு தோன்றும்.
இந்தச் சமயத்தில்தான் நாயகன் கண்களுக்கு இரு இளம் ஜோடிகள் சிக்குகிறார்கள். காதலனும் காதலியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாயகன் தான் அவர்களுக்கு இடையே குதிக்க வேண்டிய சரியான தருணத்திற்காக காத்திருக்கிறான். அங்கு அந்தக் காதலி சட்டென காதலின் தலையை தன் இரு கைகளாலும் பற்றி இழுத்து அவன் உதட்டில் முத்தமிடுகிறாள். இருவரும் அப்படியே அந்த முத்தத்தில் ஆழ்கிறார்கள். இனிதான் அவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்வார்கள் என்ற நாயகனுக்கு நன்றாக தெரிகிறது. அவ்வளவு தொழில் சுத்தம். ஆனால் என்ன நினைத்தானோ அவர்கள் முன் சட்டென வந்து நின்று “என்னடா பண்றீங்க?” என அதட்டுகிறான்.
அவர்களிடம் வழக்கம் போல கைவரிசையைக் காட்டுகிறான் நாயகன். அவனின் வயது அங்கு வந்த பெண்ணின் அழகும் நாயகனை சபலப்படுத்துகிறது. அவள் மீது ஆசை கொள்கிறான். காதலனை கட்டிப்போட்டுவிட்டு காதலியிடன் தவறாக நடக்க முடிவு செய்கிறான். இந்தத் தொழிலில் எதை செய்யக்கூடாது என அவனுக்கு அவனே சட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறானோ அதை அவனே மீற முற்படுகின்றான்.
இதுதான் தாங்கள் முதன் முறையாக வெளியில் வந்துள்ளதாகவும். தன் காதலனுக்கு இன்று பிறந்த நாள். அவளிடம் பரிசாக கொடுக்க எதுவும் இல்லை என்பதாலும் ஆசையாய் அவனுக்கு அவன் விரும்பும் ஒரு முத்தத்தைக் கொடுக்கத்தான் இங்கு அழைத்து வந்ததாய்ச் சொல்லி காதலி நாயகனிடம் அழுகிறாள். அவள் சொலவதில் உள்ள உண்மையை எழுத்தாளர் முன்னமே நமக்கு தெரியப்படுத்தியிருப்பார்.
ஆனாலும் நாயகன் அவளை விடுவதாக இல்லை. மரத்தில் கட்டப்பட்டிருக்கும் காதல் கண்மூன்னே நடக்கவிருக்கும் கொடூரம் வாசகர்களுக்கும் பதற்றத்தைக் கொடுக்கிறது. இதுவரை நாயகனாக் தெரிந்தவன் ரொம்பவும் கேவலமானவனாக தெரிய தொடங்குகின்றான்.
அங்குதான் எழுத்தாளர் ஒரு வேலையைச் செய்கிறார். எந்த நல்லவனிடமும் ஒரு கெட்டவன் இருப்பான் எந்த கெட்டவனிடத்திலும் என நாம் சொல்வதை எழுத்தாளர் அங்கு நடத்திக்காட்டுகிறார்.
அந்தக் காதலி சொல்லும் ஒரு வார்த்தை நாயகனின் மனதில் மாற்றத்தைக் கொடுக்கின்றது. அது மன மாற்றமா அல்லது தான் செய்யவிருந்த அருவருப்பான காரியத்தைப் பற்றிய காட்சியா என வாசகர்கள் முடிவு செய்துக்கொள்ளலாம்.
கதை எழுத விரும்புகிறவர்கள் இந்தக் கதையை வாசித்து அதில் இருக்கும் வித்தைகளைக் கண்டு கொள்ளலாம். இன்னும் கூட இந்தக் கதையைக் குறித்து நாம் பேசலாம். கதையின் முடிவில் அந்தக் காதலில் என்ன சொல்லியிருந்தால் நாயகன் தன் முடிவை மாற்றியிருப்பான்.
நாயகன் மனதில் எழுந்திருக்கும் அந்த காமுகம் சட்டென அவளை துச்சமாகவோ தூய்மையாகவோ நினைத்து சட்டென உதறி “போய்த் தொலைங்க..” என சொல்லிவிட்டு அங்கிருந்து போவதற்கு என்ன காரணமாக இருக்கும். இக்கதையை வாசித்தால் அது நமக்கு விளங்கும்.
ஆனால் நான் உங்களுக்கு ஒரு குறிப்பு கொடுக்க விரும்புகிறேன். அந்தப் பெண் தன் காதலனுக்குக் கொடுத்த முத்தம் ரொம்பவும் பரிசுத்தமானது. அந்தப் பரிசுத்தத்தைதான் நாயகனால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் அங்கிருந்து தப்பியோடியிருக்கலாம்.
இனி நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக