பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 08, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 8/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 8/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

****************************

நீங்கள் பார்த்து வைத்து திருமணம் செய்தவரா? காதல் கீதல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று சமத்து பிள்ளையாய் வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்தவர் என்றால் இந்தக் கதையை வாசித்துவிடாதீர்கள். உங்களின் வருங்கால கனவுகள் மீது பெரிய கல்லை போட்டுவிடக்கூடிய கதை இது.


ஒருவேளை காதல் திருமணம் செய்தவர்கள் இந்தக் கதையை வாசிக்கலாமா என்று கேட்கிறீர்களா? இதைவிட பெரிய கற்களெல்லாம் உங்களுக்கு காத்திருக்கும் போது இந்தக் கல் பெரிதாக உங்களை பாதிக்காது என்றும் சொல்ல ஆசைதான். ஆனால் உங்களுக்கும் வயிறு கலக்கத்தான் போகிறது.

இன்று பெருமாள்முருகனின் ஏழாவது சிறுதையாக 'அபிசேகம்' சிறுகதையைப் பார்ப்போம்.

புது மாப்பிள்ளைக்கு புதுப்பெண் கொடுக்கும் அதிர்ச்சிதான் கதை. சிறுகதையில் நடக்கும் அபிசேகத்திற்கு வாசகர்களை மெல்ல மெல்ல எழுத்தாளர் தயார் செய்வது சிறுகதை மீதான ஈர்ப்பையும் ஏதோ நடக்கவுள்ளதான அறிகுறியையும் கொடுத்துக் கொண்டே வருகிறது.

புது தம்பதிகள் அழைப்பின் பேரின் உறவினர் வீடுகளுக்கு விருந்திற்கு செல்கிறார்கள். அங்கு விடைபெறும் போது மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் மொய்ப்பணத்தைக் (விருந்து பணம்) கொடுக்கின்றார்கள்.

புதுப்பெண் அந்தப் பணத்தை கணவனிடம் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை எப்படி கேட்கபது என புது மாப்பிள்ளையும் குழம்புகிறார். வண்டிக்கு பெட்ரோல் போடும் போது தன் பணம் பாக்கெட்டில் இருப்பதாகவும் எடுக்க சிரமமாக இருக்கிறது என்றும் அவளிடம் உள்ள விருந்து பணத்தை எடுத்து பெட்ரோலுக்கு கொடுக்க சொல்லி வீட்டிற்கு வந்ததும் கொடுக்கதாக சொல்கிறான். மனைவியோ ஒன்றும் அவசரமில்லை நீங்கள் நிதானமாக வண்டியில் இருந்து இறங்கி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுங்கள் என்கிறாள். அவனுக்கு அது அவமானமாகிறது.

இவள் பணத்தை கொடுப்பாளா மாட்டாளா அல்லது தன் அப்பா வீட்டிற்கு கொடுக்க எடுத்து வைக்கிறாளா என வாசிக்கின்றவர்களையும் கேட்க வைக்கிறது.

இரவு பணத்தைக் குறித்து கணவன் மேட்கிறான். அவள் ஆவேசம் வந்தவளைப் போல தனக்கு கிடைத்த பணத்தையெல்லாம் அவன் மீது வீசுகிறாள். அதோடு நிற்கவில்லை "இந்தா பிடிச்சிக்கோ.. பிசாசே இந்த புடிச்சிக்கோ... " என்று அடிக்குரலில் ஆங்காரமாகச் சொல்கிறாள் . அவன் மீது ரூபாய்த் தாள்கள் அபிசேகம் செய்யப்பட்டது போலானது என கதையை முடிக்கின்றார் ஆசிரியர்.

கணவன் மீது இப்படியொரு அபிப்பராயம் வருவதற்கான காரணத்தை கதையின் ஓரிடத்தில் கணவன் மனைவி சாப்பிட்ட விதத்தை எழுத்தாளர் சொல்லியிருப்பார். அவன் அவசர அவசரமாக சாப்பிட்டு அவளுக்காக காத்திருக்கவும் அதை கவனிக்காமல் அவள் மெதுவாக, நிதானமாக சாப்பிட்டதையும் , கணவன் அவளுக்கு காத்திருப்பதைப் பார்த்து அங்குள்ளவர்கள் சிரிப்பதையும் அவளோ உடனே இலையை மூடிவிட்டு எழுந்ததையும் எழுதியிரிப்பார். இதுதான் அந்த அபிப்பராயத்திற்கு முழுமையான காரணம் என்றும் சொல்வதற்கில்லை.

ஆண் பெண் உறவுகளில் விசித்திரமானது கணவன் மனைவி உறவு. எப்போதோ யாரோ ஏற்படுத்திய வலிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவர் இங்கு பாதிக்கப்படக்கூடும். அல்லது எல்லா வெறுப்புகளையும் கொட்டித்தீர்க்க ஓர் ஜீவன் யாரோ ஒருவரிடம் வந்து சிக்கி கொள்ளும்.

'அபிசேகம்' சிறுகதையில் அந்தப் பெண் ஏன் தன் கணவனைப் பார்த்து அப்படி சொல்லி ஆவேசம் கொள்கிறாள். அது அவன் மீதுள்ள கோவமா அல்லது இந்த திருமணத்தின் மீதுள்ள கோவமா அல்லது பெண்ணாய்ப் பிறந்ததில் இயலாமையின் விரக்தியா என்பதை நீங்கள் இந்தச் சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்