பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 05, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 4


'மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்'

‘தினம் ஒரு பெருமாள்முருகன் சிறுகதை –  4/20

முன்குறிப்பு டிசம்பர் 21-ம்  நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு. 

இப்போது இன்றைய 4வது கதைக்கு போவோம்.

         ஒரு சிறுகதையை வாசிக்கின்றோம். அதை அப்படியே புரிந்து கொள்ளவேண்டுமா? அல்லது நமக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ள வேண்டுமா? ஒருவேளை இந்தக்கதையில் இவர் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லியிருக்கலாமோ என யோசிப்போமா? அல்லது கதையில் ஆணாய் உள்ளவரை பெண்ணாகவும் பெண்ணாய் உள்ளவரை ஆணாகவும் மாற்றிக் கொண்டு அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கக்கூடும் என சிந்திப்பது நாம் வாசித்த சிறுகதையையும் தாண்டி வாழ்க்கைக்கு பயன்படலாம் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

    இப்படி பலவகையான கேள்விகளுக்கு காரணமாக அமைந்தது பெருமாள்முருகன் எழுதிய ‘பசி’ என்னும் சிறுகதை.

      புதிதாக திருமணம் ஆன தம்பதிகள், வேலை நிமித்தம் ஆளுக்கு ஓரிடத்தில் இருக்கின்றார்கள். கணவன் தன்னுடைய கிராமத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.  மனைவி பல மைல் தூரத்தில் வேலை என்பதால் அங்கேயே தங்கி வேலைக்குச் செல்கிறார். அதுவும் திருமணம் முடிந்த பின்னர்தான் மனைவிக்கு வேலை கிடைத்திருக்கிறது. இப்போதைக்கும் வேலையிடத்தை மற்றுவதற்கான சூழல் இல்லை. ஆகவே இப்படியே விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்.

      கிடைக்கும் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் மருமகளுக்கு ஓய்வே இல்லாத வேலையைத்தான் மாமியாரும் எடுத்துவைக்கின்றார். ஓய்வெடுக்கவோ கணவனுடன் கலந்து பேசவோகூட போதுமான அவகாசம் பல சமயங்களில் கிடைக்கவில்லை. ஆனாலும் கல்யாணமாகி ஓராண்டு ஆகியும் குழந்தை இல்லாததை அம்மா மகனிடம் புகார் சொல்வதை மறக்கவில்லை.

        இதற்கிடையில்தான் இருவருக்கும் பக்கமாக இருக்கும் ஓர் ஊரில் உறவினர் திருமணம் நடக்கவிருக்கிறது. உடனே அங்கு சந்திக்கலாம். அங்கு தங்கிக்கொள்ள நமக்கென்றும் தனியாக அறை ஏற்பாடு செய்யலாம் என மனைவியையும் அங்கு வர சொல்கிறார் கணவன்.

       மனைவியும் அங்கு வருகின்றார். கணவன் வர தாமதமாகிறது. கணவன் வரும்வரை மனைவியை சாப்பிடாமல் காத்திருக்கச் சொல்கிறார். மனைவிக்கோ நல்ல பசி. கணவன் வந்து சேர்ந்ததும் மனைவியிடம் தங்களுக்கான தனி அறை எங்கே என கேட்டு முதல் வேலையாக அறையைத் தேடுகிறார். அவர்களுக்கு என்று தனியே அறை சாத்தியமற்றதாகிறது. கணவனுக்கு அதனால் கோவம் வர, ஏற்பாடு செய்ய சொன்னவரிடம் பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று தங்களுக்கான அறையைக் கேட்கிறார்.    
   
            மீண்டும் முயற்சிப்பதாக சொல்லி முதலில் இருவரையும் சாப்பிடச் சொல்கிறார் ஏற்பாடு செய்பவர். கணவன் சாப்பிட மனைவிக்கு பசியே இல்லாமல் போனது. கணவனுக்கு கவனமோ சாப்பாட்டில் இல்லை. தனி அறை சாவி வாங்குவதில்தான் இருக்கிறது. குனிந்த தலை நிமிராது மனைவியும் சாப்பிட்டு முடிக்கிறார்.

       ஒருவழியாக அறை கிடைக்கிறது. 
மணமக்களைகூட நாளை காலையில் சந்தித்துக் கொள்ளலாம் என்று அவசர அவசரமாக விடுதி அறைக்கு மனைவியை அழைத்துச் செல்கிறார் கணவன். அறைக்கு வந்ததும் கதவைச் சாத்திவிட்டு மனைவியின் இடுப்பில் கைகளை வளையமிட்டு கட்டியணைக்கின்றார்.

    அவளோ ‘சீ..போ’ என்று அவனை தள்ளிவிட்டு கட்டிலில் குப்புற விழுந்து அழ ஆரம்பிக்கின்றாள் என்று கதை முடிகிறது.

     எல்லாமே சுமூகமாக நடந்திருந்தால் மனைவி அழுதிருப்பாரா என முதல் கேள்வி எழுகிறது. இருவருமேதான் பிரிந்து வாழ்கிறார்கள். இருவருமேதான் சேர்ந்திட விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வரும்போது ஏன் மனைவியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை இதுபோன்று ஒரு பெண் தன் கணவனை இப்படி அவசரப்படுத்தினால் நம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? இப்படி பல கேள்விகளை நம்மால் அடுக்கிக் கொண்டே போக முடியும்.

    இதில் இன்னொரு விடயமுமே இருக்கிறது. கணவன் மனைவி உறவு வெறும் தனி அறையில் மட்டுமே நெருக்கமாவது இல்லை. பொதுவெளியில் இருவரும் ஒருவருக்கொருவரை எப்படி நடத்துகிறார்கள் என்பது அடிப்படையான கேள்வி. 

     மனைவியை கணவன் வெறும் உடலாகப் பார்த்து பாவிக்க நினைப்பதுதான் மனைவியை அழ வைத்திருக்க வேண்டும். இங்கு வந்ததும் மனைவியைப் பார்த்து சிரித்தபடி முதலில் ‘ரூம் எங்க?’ என்று கணவன் கேட்டதுமே மனைவி உள்ளுக்குள்ளே அழத் தொடங்கியிருப்பாள். ஒருவேளை இருவருக்கும் இடையில் புரிந்துணர்வும் அன்பும் காதலும் முதன்மையாக இருந்திருந்தால் கணவனின் கேள்விக்கு மனைவி வெட்கப்பட்டிருக்கலாமோ என்னவோ.

   ஒருவேளை நீங்கள் இந்தக் கதையை வாசிக்கும்போது கணவனின் செயலில் உங்களுக்கு நியாயம் இருப்பதாகவும் தோன்றலாம். ஆக பெருமாள்முருகனின் ‘பசி’ சிறுகதையை வாசித்துவிடுங்கள்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்