பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 08, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 9/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 9/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

**********************************************************************

ஒரு கதையை எழுத  என்னதான் தேவைப்படுகின்றது?  என அடிக்கடி நான் யோசிப்பது உண்டு. சிலசமயங்களில் ஒரு சிறு பொறிகூட பல பக்களுக்கான கதையைக் கொடுக்கும். சிலசமயங்களில் பல பக்கங்களில் நாம் வாசித்த கதையை ஒரே வரியில் சொல்லிவிடலாம். அப்படிச் சொல்வது அந்தக் கதையின் பலவீனத்தைக் காட்டுகிறதா பலத்தைக் காட்டுகிறதா? 
இன்று நாம் பெருமாள்முருகனின் ‘தொடை’ என்ற சிறுகதையைப் பார்ப்போம்.

  ‘காதலை மறைப்பது போல; காதலால் கிடைத்த காயத்தையும் மறைப்பது ஒரு வகையில் சுவாரஸ்யமானதுதான்’ இதுதான் ‘தொடை’என்னும் சிறுகதையின் சாரம்.  நாயகனின் தொடையில் அடிபட்டு அவ்விடம் புடைத்திருக்கிறது. தொடையில் ஏதோ கட்டிதான் முளைத்திருப்பதாக சொன்னாலும் தம்பி நம்பவில்லை எனும்போதே அந்தக் காயத்தின் பின்னணி மீது நமக்கும் ஆர்வம் எழுகின்றது.

 காயம் வந்தக் கதையைத் தெரிந்து கொள்ள நாயகனுக்கு காதல் வந்த கதையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்தக் காதல்தான் காயத்திற்கு காரணம், ஆனால் நேரடியாக இல்லை. 

 தன் நண்பன் விரும்புவதாக சொன்ன பெண்ணை நாயகன் காதலிக்கத் தொடங்குகிறான். நண்பனுக்கு மட்டுமல்ல அங்குள்ள பலருக்கு அந்தப் பெண் மீது விருப்பம் இருக்கிறது. ஆனால் காதலிக்கும் வாய்ப்போ நாயகனுக்குத்தான் வாய்க்கிறது.

 நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக குடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்குதான் அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்த நண்பனும் இருக்கிறான். எப்படியோ அந்தப் பெண்ணை மயக்கிவிட்டான் தன் நண்பன் என பாராட்டுகிறான். எப்படி தெரியுமா கையை மூடி இறுக்கி அவனது தொடையில் ஓங்கி குத்துவிட்டு.

 மேற்சொன்னது போலத்தான் காதலை மறைப்பது போல காதலால் வந்த காயத்தையும் நாயகன் மறைக்கிறான் என்கிற ஒருவரியை; எழுத்தாளர் சுவாரஸ்யம் குன்றாத கதைப்பின்னல் வழி சொல்லியிருக்கின்றார்.

கதையெழுத என்னதான் தேவைப்படுகின்றது என யோசிக்கையில் அனுபம் என்பதே முதன்மையானதோ என தோன்றுகின்றது. அதில் இரகசியம் என்னவென்றால் நாம் சந்தித்த அனுபவங்களை மட்டுமல்ல, யார்யாருக்கோ நடந்த அனுபவங்களை நம் அனுபவமாக மாற்றி அதனுள்ளிருந்து நமக்கான கதையை எழுதத் தொடங்கலாம். 

எவ்வளவுதான் கற்பனையைக் கொட்டினாலும் அதைத் தாங்கிப்பிடிக்க அனுபவம் என்னும் பிடி அதனால்தான் அவசியமாகிறது. 

காதலிப்பவர்களுக்கு காதலால் ஏற்படும் காயங்கள் இப்படி கூட எதிர்ப்பாராத வரவாக இருக்கலாம்தானே. ‘தொடை’ சிறுகதையில் நாயகனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தெரிந்து கொண்டோம். அந்த அனுபவத்தில் இருந்தும் நமக்கான ஒரு கதையை நாம் கண்டுபிடித்து எழுதிவிட்டால் நாம்கூட நம் சட்டை காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்