- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 5/20
பெருமாள்முருகன் சிறுகதை – அருவி 5/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
இப்போது இன்றைய 5வது கதைக்கு போவோம்.
எப்போது கடைசியாக அழுதீர்கள் என்று யாரையும் கேட்க முடிவதில்லை. எது கடைசி என சொல்ல முடியாத அளவிற்கு ஆளுக்கு ஆள் அழுது கொண்டிருக்கிறோம். அவ்வப்போது அழுவதும் மன அழுத்தத்திற்கு நல்லது என சொல்லவும் ஆரம்பித்துவிட்டோம். அதற்கு ஏற்றார்ப்போல அழுது முடித்தபின் கோவமும் கவலையும் அதன் சதவிதத்தைக் குறைத்து கொள்கிறது. மனதில் தேத்தி வைத்திருக்கும் சோகமெல்லாம் அழுவதால் கொஞ்சம் குறையுமென்றால் அட்டவணை போட்டும் அழலாம் தவறில்லை என்றே தோன்றுகிறது.
சோகத்தில் அழுவதும் மனதில் இருக்கும் சோகத்தை வெளியேற்ற அழுவதும் ஒன்றல்ல வெவ்வேறானது. அழுவதற்கு என்றே கலை இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்களை நாம் பார்க்கிறோம். தத்தம் துயரத்தை தான் வாசிக்கும் கதைகளில் தான் கேட்கும் பாடல்களில் தான் பார்க்கும் சினிமாக்களில் வைத்து அழுது தங்கள் மனதை தேற்றிக்கொள்கிறவர்கள் ஏராளம்.
இன்று வாசித்த பெருமாள்முருகனின் சிறுகதை, ஏனோ என்னை அழ வைத்தது. உணவகத்தில் எனக்கு பிடித்த இஞ்சி டீயைக் குடித்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். கதையின் முடிவை நெருங்கவும் கண்கள் கலங்கிவிட்டன. கலங்கிய நீர் வெளியேவும் வந்துவிட்டது.
கடையில் வேலை செய்கிற அண்ணன் வந்து விசாரித்தார். வாசித்த கதையை அவரிடம் சொன்னேன். அவரும் அவரது பழைய நண்பர்களும் அவர்களின் குடும்பமும் நினைவுக்கு வந்துவிட்டதாய்ச் சொன்னார். மீண்டும் அந்தக் காலமும் அந்த அன்பும் கிடைக்காது என்றவர் அவர் வேலையைப் பார்க்கச் சென்றார்.
அப்படியென்றால் இது யாரும் சொல்லாத கதையா என்று கேட்டால்; பதில் இல்லை. பலர் சொன்ன இனியும் சொல்லப்போகிற கதைக்கருதான். அதனை எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய விதம் நமக்கு அந்தக் கதையை நெருக்கமாக்கிவிட்டது.
நான்கு நண்பர்களை மையப்படுத்திய கதை. நான்கில் ஒருவருவருக்கு மட்டும் முதலில் வேலை கிடைக்கிறது. நண்பர்கள் நால்வரும் அருவிக்கு செல்கிறார்கள். சொல்லி வைத்தார்போல முதலில் வேலை கிடைத்த நண்பன் அருவியில் தவறி விழுந்து இறக்கின்றான். மற்ற மூவருக்கும் சிறுசிறு காயங்களே. இவர்கள்தான் பொறாமையில் சூழ்ச்சி செய்து நண்பனைக் கொன்றுவிட்டார்கள் என ஊரும் இறந்தவனின் உறவுகளும் பேசுகின்றன. இவர்களையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என மற்ற மூவரும் பயப்படுகின்றார்கள். எல்லாவற்றையும் மீறி என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து மூன்று நண்பர்களும் இறப்பு நடந்த வீட்டிற்கு செல்கிறார்கள்.
நம்மால் அங்கு அடுத்ததாய் நடக்கவிருப்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும் நம்மையும் கலங்கடிக்கும் வகையில் இந்தச் சிறுகதையை எழுத்தாளர் முடித்திருப்பார்.
இறந்தவனின் தாயார் தன் மகனின் இறப்பை எப்படி எடுத்துக்கொண்டார். இந்த மூவறையும் எப்படி பார்க்கிறார் என கதை சொல்லப்பட்டவிதம் நன்றாக இருந்தது. சில சாதாரண விடயங்கள் கூட சொல்லும் முறையில் அசாதாரணமாக மாறிவிடுகின்றன.
பொருமாள்முருகனின் ‘அருவி’ சிறுகதையை நீங்கள் வாசிக்கும் போது உங்களை அழ வைக்கிறதோ இல்லை; உங்களின் நண்பர்களையும் அவர்களுடன் இருந்த நேரத்தையும் நினைத்துப் பார்க்க வைக்கும். முடிந்தவர்களை மீண்டும் தொடர்பு கொள்
நம்மை அழவைக்க பெருந்துயரங்களால் மட்டுமல்ல சிறுசிறு மன்னிப்புகளாலும் முடியும்தானே..
0 comments:
கருத்துரையிடுக