- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 19/20
மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் சிறுகதை 19/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************
‘வளர்ந்துவிட்ட மகனுக்கு முதல் எதிரி அவனது அப்பாதான் !’ என்றால்; ஆமாம் என்பதற்கும் நம்மிடம் கதைகள் இருக்கும் இல்லை என்பதற்கும் நம்மிடம் கதைகள் இருக்கும். அப்பாவின் வலி; மகன் வளர்ந்து அப்பாவாய் ஆனப்பின்னர்தான் தெரியும் என்பதை நம்மால் மறுக்க முடியுமா சொல்லுங்கள்.
எழுத்தாளர் பெருமாள்முருககனின் மலேசிய வருகையை முன்னிட்டு எழுதும் தினம் ஒரு பெருமாள்முருகன் சிறுகதைகள் வாசிப்பு கட்டுரையில் அப்பா மகன் உறவு குறித்தும் சில கதைகள் இருக்கின்றன. அதில் இன்று நாம் பார்க்கப்போகும் கதை கொஞ்சம் மாறுபட்ட கதை. ஆடுகளைப் பற்றி இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா என்பதை ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ என்னும் நாவலில் எழுத்தாளர் நிரூபித்திருக்கிறார்.
இந்தக் வாசிப்பு கட்டுரையிலும் இன்னொரு கதையிலும் ஆடுகள் வருகின்றன. இன்று நாம் பார்க்கப்போகும் கதையிலும் ஆடுகள் வருகின்றன. நம்மை இரசிக்க வைக்கின்றன.
ஆனால் இது ஆடுகளை மட்டும் பேசவில்லை என்பதுதான் இந்தக் கதை நமக்கு சொல்லும் செய்தி.
பெருமாள்முருகன் சிறுகதை ‘நுங்கு’ 19/20
படிப்பைத் தொடர விரும்பாத நாயகன் அவர்களின் குடும்ப தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலை விரும்பி செய்கிறான். மாதம் இரு ஆடுகளை விற்றாலும் கூட எந்தவொரு பொருளாதார சிக்கல் இல்லாமல் வாழ முடிகிற நடுத்தர குடும்பம்தான். அதுநாள்வரை ஆடுகளை பராமரிக்கும் பொறுப்பை செய்துவந்த அப்பா நூறு நாள் வேலைக்குச் செல்கிறார்.
அப்பாவிற்கும் மகனுக்குமான உறவு ரொம்பவும் எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் மகனுக்கு மரம் ஏற கற்றுக்கொடுப்பதும்; மகன் தவறி கீழே விழுவதும். இருவரும் வீட்டில் அதை சமாளிக்கும் விதமும் மனதிற்கு நெருக்கமாகிறது.
ஏதோ ஒருவகையில் அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளி வந்துவிடுகிறது. ஆடுகள் மூலம் அந்த இடைவெளி எப்படி உடைகிறது என இக்கதையை வாசித்து தெரிந்துகொள்ளலாம்.
அதுசரி இந்தக் கதைக்கு ஏன் ‘நுங்கு’ என பெயரிட்டுள்ளார் எழுத்தாளர். அட சொல்ல மறந்துவிட்டேன். இந்தக் கதையில் நுங்கும் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கிறது.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக