பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 13, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 13/20


பெருமாள்முருகன் சிறுகதை - 'கருவாடு' 13/20


முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

**********************************

நீங்கள் எதை மிஸ் பண்ணுகிறீர்கள்? எதை நினைத்து நீங்கள் ஏங்கி கொண்டு நினைவுகளில்  மூழ்குகிறீர்கள்?  பேசப்பேசப் பேசி முடியாதது நண்பர்களிடம்தான். அவர்களைத்தான் நாம் எல்லோருமே மிஸ் பண்ணுகின்றோம். பால்ய நட்பின் நினைவுக்கு ஒருபோதும் வயதாவதில்லை. 

யாரோ ஒருவர் நம்மை கட்டிப்போட்டு கிச்சுகிச்சு மூட்டுகின்றார் என வைத்துக்கொள்வோம். நாம் அடக்க முடியாது சிரிப்போம். இதுவரை அப்படி சிரித்திருக்கவும் மாட்டோம். 

ஆனால் சிரிப்பில் அதன்  எல்லையைத் தொட்டவுடன் நம்மையும்  அறியாமல் கண்கள் கலங்கி அழ ஆரம்பித்துவிடுவோம். இப்படி சிரிப்பையும் அழுகையையும் ஒன்றின் பின் ஒன்றாகவும் இரண்டையுமே ஒன்றாகவும் வரவைக்கக்கூடியது பழைய நினைவுகள்தான். அதிலும் அது பால்ய நினைவுகள் என்றால் சொல்லவும் வேண்டுமா.

என் வாழ்வில் நான் அதிகம் சிரித்ததும் என் நண்பர்களிடம்தான் அதிகம் அழுததும் என் நண்பர்களிடம்தான். அதே போல நான் அதிகமும் வேதனைப்பட்டதும் அவர்களால்தான். நண்பர்கள் அமைவது நாம் நமக்கான நண்பர்களை அமைத்துக் கொள்வதும் வரம். 

இப்படி நமது பல பால்ய நினைவுகளுக்கு நம்மை அழைத்துச் சென்று நம்மை சிரிக்கவும் வைத்து அழவும் வைக்கும் கதையைத்தான் எழுத்தாளர் ‘கருவாடு’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

இன்றைய பெருமாள்முருகனின் சிறுகதை ‘கருவாடு’ 13/20

நாயகன் வேலை நிமித்தமாக ஒரு நபரை சந்திக்கின்றான். எங்கோ பார்த்த முகமாக இருக்கிறது. ஆம் அது நாயகனின் பால்ய நண்பன்.

 நாயகனுக்கு தெரிந்தது போலவே அவனது நண்பனுக்கு தெரிகிறது. ஆனால் இருவரும் தங்களை மீண்டும் அறிமுகம் செய்து நட்பு பாராட்டவில்லை. இருவருக்குமே பெரிய தயக்கம் இருக்கிறது. அது என்ன தயக்கம்?. நண்பர்களுக்குள் அன்று நடந்தது என்ன என்பதை எழுத்தாளர் சொல்லிச்செல்லும் இடங்களில் நாமும் நமது பால்ய நண்பர்களையும் அவர்களுடன் செய்த கலாட்டாக்களையும் சண்டை சச்சரவுகளையும் நினைக்க வைக்கிறது. 

பால்ய வயதில் ரொம்பவும் நெருக்கமான நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் பிரிய காரணமாக இருந்தது ‘கருவாடு’. அந்தக் கருவாடுதான் இந்தச் சிறுகதையின் மையம்.

 அந்தக் ‘கருவாடு’ நாயகனால் நண்பனுக்கு வந்த காரண பெயர். அதுவும் அவன் விரும்பும் பெண் மூலமாக ‘கருவாட்டு காதலன்’ என்று நாயகன் அழைக்கவும் பிறகு அதுவே சுருங்கி  நண்பனுக்கு பட்டபெயராக ‘கருவாடு’ என சுருங்கிவிட்டது. 

அதன் பின் இருவருக்கும் நடக்கும் ஒவ்வொன்றும் அட்டகாசமாக இருக்கும். 

எதனால் பிரிந்தார்களோ இன்று அதனாலேயே அந்த இறுக்கத்தை உடைத்து இருவரும் மீண்டும் பழையபடி இணைகிறார்கள். 

வாசிக்க ரொம்பவும் இனிமையான கதைகளில் இதுவும் ஒன்று. 

இப்படிச் சொல்ல ஆசைப்படுகின்றேன். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நீங்கள் கண்கள் கலங்கியபடி சிரித்தால் நீங்களும் நானும் கூட்டாளிகள்.

கட்டாயம் வாசித்துவிடுங்கள். மீண்டும் பால்யப்படகில் ஏறி பள்ளிக்கூடம் வரை சென்றுவருவோம். அங்குதான் நாம் ரொம்பவும் வெளிப்படையாக சூதுவாதின்றி திரிந்து கொண்டிருந்தோம். 

இன்றைய தலைமுறை அதில் பாதியைக் கூட அனுபவிக்க முடியவில்லை என்பதுதான் எவ்வளவு பெரிய இழப்பு.

தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்