- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 3/20 -
‘தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை – மாயம் 3/20
இப்போது இன்றைய மூன்றாவது சிறுகதைக்கு போவோம்.
மாயங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அல்லது உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஏதாவது மாயம் நடத்திருக்கலாம் என எதிர்ப்பாத்திருக்கிறீர்களா? அப்படியெனில் இந்தக் கதை உங்களுக்கான கதை. சர்வ சாதாரணமாக இக்கதையின் முடிவிற்குள் நீங்கள் எந்தக் கேள்வியும் இன்று சென்றுவிடுவீர்கள். மற்றவர்களுக்கு அது சாத்தியமா என வாசித்துதான் சொல்லவேண்டும். அப்படித்தான் எழுத்தாளர் மாயம் என்கிற சிறுகதையை எழுதியிருக்கின்றார்.
கல்லூரி விடுமுறையில் நாயகன் வீட்டிற்கு வருகின்றான். வந்த சில நாட்களில் தோழி கைப்பேசியில் அழைத்து இரண்டு நாட்களில் அவனது ஊரில் இருக்கும் தங்களின் குலதெய்வத்தை வழிபட வரவிருப்பதாகவும் அவன் வீட்டிற்கும் வந்து விட்டு போகவுள்ளதாகவும் சொல்கிறாள். பேசி முடித்ததும்தான் கதையில் நமக்கும் பிடி கிடைக்கிறது.
தான் வாழும் சூழலை; உள்ளது உள்ளபடி சொல்லாமல் கொஞ்சம் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வதாகவே அவன் தன் கல்லூரி நண்பர்களிடம் சொல்லியிருக்கின்றான். இப்போது தோழி வீட்டிற்கு வந்தாள் என்றால் அவன் சொன்னது எல்லாம் பொய் என தெரிந்துவிடும். அவனுக்கு அது பெரிய அவமானமாக இருக்கும்.
தோழி வர இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அதற்குள் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என முட்டிமோதுகிறான் நாயகன்.
அதே சமயம் அம்மாவின் மேல் அவனுக்கு கோவமும் வருகிறது. அதிலும் குறிப்பாக அம்மா மீது அருள் வருவதும் அதனால் அம்மாவிடம் ஏற்படும் மாற்றங்களுமே பேச்சு பொருளாகிறது ஆனால் அம்மாவோ தனக்கு வரும் அருளை கடவுளின் ஆசீர்வாதமாகவே பார்க்கிறார். தோழி வருவதற்கு முன், உடனடியாக வீட்டில் செய்யவேண்டியதை செய்தபடி அசதியில் உறங்கிவிடுகிறான்.
தூங்கி எழுந்தவன் கண்ணுக்கு எல்லாமே அதிசயமாக இருக்கிறது. அவன் முன் அவனது அம்மா அருள் வந்த நிலையில் அமர்ந்திருக்கின்றார். அம்மா தன் கையில் விபூதியை எடுத்து வீடு முழுக்க ஊதுகிறார். அவன் எதிர்ப்பார்த்ததைவிடவும் வீடு அழகாகிறது. வீட்டில் எல்லாமே மாறுகிறது. கடைசியில் அந்த வீடே மாளிகையாகவும் மாறுகின்றது. அவன் தன் தோழியை வரவேற்கத் தயாரானான் என கதையை முடிக்கின்றார் எழுத்தாளர்.
மாயம் சிறுகதையின் கடைசியில் மாயம் நிகழ்ந்திருக்கிறது. அது உண்மையில் மாயம்தானா அல்லது அந்த இளைஞனின் கனவு காட்சிகளா என நம் வாசிப்பின் வழி ஒரு முடிவிற்கு வரலாம்.
நடுத்தர வயது இளைஞர்கள் தங்களின் கனவுகளைத்தான் பொய்களாக சொல்லி தங்களின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்கிறார்களா என்கிற கேள்வியுமே எழுகிறது. என்றாவது ஒருநாள் அந்த மாயங்கள் அவரவர் வாழ்வில் நிஜமாகவே நடப்பதற்கான ஒத்திகைகளை கனவில் காண்கிறார்கள் போல.
அந்த இளைஞனின் கனவை இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசவேண்டியுள்ளது. அம்மாவிற்கு அருள் வருவது அவனுக்கு பிடிக்கவில்லை. அவ்வபோது அது ஏமாற்று வேலை என அம்மாவை கடிந்தும் கொள்கிறான்.
ஆனால் எதை அவன் நம்பவில்லையோ எதை அவன் ஒதுக்க நினைத்தானோ அதுதான் அவனது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காய் அவனது கனவில் வருகிறது. உண்மையில் அவன் அதை வெறுக்கின்றானா நேசிக்கின்றான. இம்மாதிரி கனவிற்கும் நினைவிற்குமான இளைஞனின் போராட்டங்களை கடந்துவரும் இளைஞர்களில் நாயகனையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

0 comments:
கருத்துரையிடுக