- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 6/20
-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-
பெருமாள்முருகன் சிறுகதை 6/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு
இன்றைய ஆறாவது சிறுகதை 'நாய்'.
'தவறான இரயிலில் ஏறிவிட்டோம் என தெரிந்ததும் நாம் செய்யவேண்டிய அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டியதுதான்'. ஐயோ தவறான இரயிலில் ஏறிவிட்டோமே என புலம்புவதாலும் இந்த இரயில் எங்கே போனாலும் நல்ல இடமாகத்தான் இருக்கும் என நம்பும் குருட்டு நம்பிக்கையும்ல்லா நேரங்களிலும் நமக்கு சாதமாக அமைந்துவிடு்வது அல்ல.
அப்படித்தான் இங்கு ஒரு பெண். வாழ்க்கையென்னும் நெடும்பயணத்தில் தப்பான நபருடன் பயணிக்க தொடங்குகின்றாள். அது சரிவராது என தெரிந்ததும் அவள் எடுக்கும் முடிவுதான் பெருமாள்முருகன் எழுதியிருக்கும் 'நாய்' என்னும் சிறுகதையின் கரு.
ரொம்பவும் அலட்டிக்கொள்ளாத ஒரு துண்டு சீட்டில் சொல்லிவிடக்கூடிய கதைதான். பத்திரிகை செய்தியாக கூட இக்கதையை நாம் வாசித்திருக்கலாம். ஆனால் அதனை ஒரு கதையாக எடுத்து வாசகர் முன் காரண காரியத்தோடு வைத்திருக்கின்றார் எழுத்தாளர்.
ஓடிப்போகும் பெண்களின் கதைகளை நாம் எவ்வளவோ பார்த்திருப்போம் எவ்வளவோ கேள்விபட்டிருப்போம். ஓடிப்போய் ஏமாற்றப்பட்டு அவமானத்துடன் வீட்டிற்கு வந்த பெண்களைப் பற்றியும் நமக்கு தெரியும்.
'நாய்' சிறுகதையில் ஒரு பெண் வருகின்றாள். தன் காதலை தன் காதலனை நம்பி அவனுடன் ஓடிப்போகின்றாள். அவனது நண்பன் வீட்டில் அவர்கள் தங்குகிறார்கள்.
மறுநாள் அவள் காதலனை காணவில்லை. முதல் நாள் தன் அம்மாவிடம் பேசியவன்; என்ன பேசினானோ தெரியவில்லை. நம்பி வந்தவளை விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சொந்த வீட்டுக்கே போய்விட்டான்.
நண்பன் விசாரிக்கவும் விபரம் தெரிகிறது. தன் அம்மா தற்கொலை செய்துவிடுவேன் என சொல்லி பயம் காட்டியதால் கிளம்பிவிட்டான். ஆனாலும் பெண் வீட்டில் விசயம் தெரிந்து சண்டை சச்சரவுகள் முடிந்து அவர்கள் இருவருக்குமே திருமணம் நடத்த முடிவாகிறது.
தன் வீட்டில் இருக்கும் பெண்ணை நண்பன் அவளது காதலன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். காதலனோ தான் செய்தது தவறு என்றும் அம்மா அப்படி சொன்னதும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் கூறி நண்பனிடம் மன்னிப்பு கேட்கிறான்.
அங்குதான் எழுத்தாளர் அந்தப் பெண்ணை ஒரு காரியம் செய்யவைக்கிறார். எந்தக் காதலனை நம்பி போனாளோ அந்தக் காதலனை திட்டிவிட்டு, அவனை நம்பி திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறாள். அதோடு நிற்காது. இவனோடு தான் ஓடிப்போகவில்லை. தன் அண்ணன் வீட்டிற்குதான் சென்று வந்தேன் என்றும் கூறுகிறாள். அந்தப் பெண் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டாள். இனி யார் என்ன சொன்னாலும் அவள் அவற்றை பொருட்படுத்தப் போவதில்லை.
அந்தப் பெண் தான் நம்பி ஏறிய இரயில் தவறான பாதைக்கு செல்கிறது என தெரிந்ததும் உடனே இறங்கிவிட்டாள். அதோடு இனி ஒருபோதும் தவறான இரயிலை தேர்ந்தெடுக்கவும்ாட்டாள்.
பெருமாள்முருகனின் சிறுகதைகளில் காட்டப்படும் பெண்கள் பலவீனமாக இருப்பதுபோல தெரிந்தாலும் நம்மால் அந்தப் பெண்களைக் குறைத்து மதிப்பிட முடியாதபடிக்கு பெண்களை எழுதி அவர்களின் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துவிடுகின்றார்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக