மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 1
தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை - ஆட்டம் 1/20
முன்குறிப்பு – வரும் டிசம்பர் 21ம் நாள், ‘வல்லினம் விருது விழா’ நடைபெறுகின்றது. மலேசிய கல்விச் சூழலில் நவீன இலக்கியத்தை வலுபடுத்தியதோடு சிறுவர் இலக்கியத்தை மலேசியாவில் வளர பங்காற்றிய பி.எம்.மூர்த்தி அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. அந்நிகழ்ச்சியில் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். இம்முறை தமிழகத்தில் இருந்து சிறப்பு வருகையளிப்பதுடன் சிறப்புரையை வழங்கவுள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.
டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20 வரை ‘தினம் ஒரு பெருமாள் முருகன் சிறுகதை’ என வாசிப்பு அனுபவத்தை எழுதவுள்ளேன். எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து புலங்காகிதம் அடைவதற்கு முன் அவரின் எழுத்துகளை வாசித்திருக்க வேண்டும் என்கிற பாலபாடத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன். குறைந்தபட்சம் அவர்களது ஒரு கதையையாவது வாசித்திருக்க வேண்டியது எழுத்தாளர் என நாம் சொல்லிக்கொள்வதற்கு நியாயம் சேர்க்க கூடியது.
அதோடு; நாம் செய்ய நினைப்பதை முன்னமே செய்து அடுத்ததாய் நாம் செய்யவேண்டியதை நமக்கு வழிகாட்டும் ‘விதை சமைப்பவர்களுக்கு’ நாம் செலுத்தும் நன்றி இதுதான்.
பெருமாள் முருகன் சிறுகதைத் தொகுப்புகளில் இருந்து ஏதோ ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து வாசித்து அதுபற்றிய வாசிப்பு அனுபவத்தை இந்த இருபது நாட்களுக்கு எழுதுவேன்.
அவரது சிறந்த கதை என சொல்லப்பட்டதையும் அவரது சுமாரான கதை என சொல்லப்பட்டதையும் இந்த வாசிப்பு பயணத்தில் சேர்க்கவில்லை. தன்னிச்சையாக வாசிக்க கிடைக்கும் சிறுகதையில் எனக்கான கண்டடைதல் என்ன என்பதுதான் இதில் நமக்கு மறைந்திருக்கும் சூட்சுமம்.
பெருமாள் முருகன் சிறுகதை 1 – ஆட்டம்
உறவுகளை வைத்து நாம் கதையெழுத தொடங்கினால் அதில் பொறாமை என்னும் வலையில் எல்லா உறவுகளையுமே தள்ளிவிட முடியும். இன்னும் சொல்லப் போனால் ஒட்டுமொத்த எல்லா சிக்கல்களுக்குமே இந்தப் பொறாமை என்னும் சிறு பொறிதான் காரண கர்த்தாவாக இருக்க முடியும்.
மாமியார் மருமகளை பேசிய அளவிற்கு மாமனார் மருமகன்கள் பேசப்படவில்லை. அவர்கள் இருவருக்குமான நெருக்கமும் விலகளும் அதிகம் வெளிச்சத்திற்கு வரவில்லை.
அதற்கு இணையாக இன்னொன்றையும் சொல்லலாம். அம்மாக்களையும் மகன்களையும் பேசிய அளவிற்கு அப்பாக்களையும் மகன்களையும் பேசவில்லை. பேசியவரை அதிகமாய் இருப்பது அப்பா கண்டிப்பானவர் மகன் ஊதாறி. அப்பா குடிகாரர் மகன் பொறுப்பானவன். அதைத்தாண்டி அவர்களில் ஆண்களுக்கே உரிய ‘ஈகோ’ சீண்டப்படும் போது எப்படி எதிர்கொள்கிறார்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் யூகிக்க முடியாமல் போகிறது.
அப்பாவிற்கும் மகனுக்கும் ஏற்படும் இம்மாதிரி சிக்கல்கள் அம்மாக்களுக்கும் மகள்களுக்குமே இருக்குமா என எப்படி தெரிந்து கொள்வது எதை வசிப்பது. இன்னமும் நாம் உறவு முறைகளில் புனிதத்தைக் காப்பாற்றி கொண்டு நடைமுறை வாழ்வில் அதற்கு எதிரான சம்பவங்களையே பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.
சமீபத்தில் ஒரு செய்தி. தன் மகள் விளையாட்டிலும் சமூக ஊடகங்களிலும் புகழோடும் பிரபலத்தோடும் இருக்கிறாள் என்பதற்காக தன் மகளையே துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறார் ஒரு தந்தை.
பெருமாள் முருகனின் ‘ஆட்டம்’ சிறுகதை அப்பா மகனுக்கு இடையே தொடங்கும் ‘ஈகோ’ சிக்கலைக் காட்டுவதாகப் படுகிறது. அதிலும் குறிப்பாக தன் மனைவி எப்போது மகனுக்கு ஆதரவாக; அது நகைச்சுவையாக இருந்தாலும் அப்போதே கணவனின் ஈகோ விழித்துக் கொள்கிறது. அந்தப் பதட்டத்தை இச்சிறுகதை இயல்பாகச் சொல்லியுள்ளது.
கொரானா காலகட்டம். பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் எடுத்துப் படிக்கும் மகன், அப்பா அம்மாவுடன் வீட்டில் இருந்து படிக்கும்படி ஆகிறது.
மகன் அதிக நேரம் தூங்குவதையும், தங்களுடன் சேர்ந்து சாப்பிடாததையும் அப்பா ஒரு குறையாகவே சொல்கிறார். மகனுக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்லும் அதே சமயம் திட்டவும் செய்கிறார்.
ஒரு சமயம் மூவரும் ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடும் வாய்ப்பு ஏற்படுகிறது. முதன் முதலாக விளையாடுவதால் மகனுக்கு விளையாட்டு பிடிபடவில்லை. அப்பா அவனை வழக்கம் போல வழி நடத்திச் செல்கிறார். மெல்ல மெல்ல மகனுக்கு ஒவ்வொன்றாக பிடிபடுகிறது. விளையாடும் சமயத்திலேயே இந்த விளையாட்டுக்கு எப்படி எப்படியெல்லாம் புரோகிராம் எழுதலாம் என யோசிக்கவும் செய்கிறான். அப்பாவிடம் தோற்கவும் செய்கிறான்.
மறுநாள் மகனின் ஆட்டம் சூடு பிடிக்கிறது. மெல்ல மெல்ல முன்னேறுகின்றான். அப்பா எதிர்ப்பாக்காதபடிக்கு மகன் வென்றுவிடுகின்றான். மகனின் வெற்றியால் அம்மாவும் மகிழ்கின்றார். அப்போதே வீட்டில் மீதமிருக்கும் மாவில் குலோப்ஜாமுன் செய்து கொடுக்கின்றான். மகன் சாப்பிட அப்பா தவிர்க்கின்றார்.
நகைச்சுவையான அவர்களின் உரையாடல் அப்பாவை உள்ளுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்.
மறுநாளும் வழக்கம் போல மகன் தூங்கி கொண்டிருக்க; “அவனை எழப்பி சாப்பிட சொல்லுங்க.. நீங்களும் விளையாடனும்ல..?” என சொல்கிறார் அம்மா. அம்மாவின் குரல் அரை தூக்கத்தில் இருந்த மகனுக்கும் கேட்கிறது. உடனே எழுந்து போய் அப்பாவுடன் விளையாட ஆர்வம் ஏற்படுகிறது மகனுக்கு.
இதுநாள் வரை மகனின் நீண்ட நேர தூக்கத்தை ஒரு குறையாக பார்த்த அப்பா; அவனை எழுப்ப வேண்டாம். அசந்து தூங்குகிறான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்றவர் “விளையாட்டுக்கு என்ன நாளைக்கு ஆடினாப் போவுது” என்கிறார்.
அப்பா சொல்வது மகனுக்கும் கேட்பதாக கதை முடிகிறது.
இச்சிறுகதை தொடங்கும் இடமும் முடியும் இடமும் ஒரே இடம்தான். அது மகன் நீண்ட நேரம் தூங்கிகொண்டிருப்பது ஆனால் இரு இடங்களும் ஒருமாதிரியான முடிவைச் சொல்லவில்லை. அப்பாவின் மனதில் மகன் தன்னை வென்றுவிட்டான் என்பதைவிடவும்; தனக்கு இந்த வீட்டில் இனி முதலிடம் இல்லை என்கிற பதட்டமே அதிகம் இருக்கும்’ அப்பாவிற்கும் மகனுக்குமான ‘ஈகோ’ போராட்டம் இனிதான் தொடங்குமோ என தோன்றுகிறது.
