பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 13, 2025

- தாலாட்டு -

 

பூக்களை நேசிப்பவர்களுக்கு

பூந்தொட்டிகள் 

தேவையில்லை


மீன்களை நேசிப்பவர்களுக்கு

மீன் தொட்டிகள்

தேவையில்லை


பறவைகளை நேசிப்பவர்களுக்கு

கூண்டுகள்

தேவையில்லை


காதல் கவிதைகளுக்கு

காதல் தேவையில்லை என்பது போல


கவிதை எழுதுவதற்கு

கவிதையே தேவையில்லை என்பது போலவும்


ஒன்றைச் 

சொந்தம் கொண்டாட

வடிவமும் சிறையும் பூட்டும் அநாவசியம்


சில நிமிடங்களில் அதனுடன்

லயித்திருந்தாலே போதும்

அதுதான் அவசியம்

அதுதான் வசியம்


வாழ்நாளுக்கான நினைவுகளை

அது தந்துவிட்டு செல்லும்

அந்தத் தாலாட்டும் 

நாம்

வாழும் காலம் மட்டும்

பாடும்....



மார்ச் 12, 2025

- எந்த நாவில் ஊறுகிறது இந்தக் காதல் -


 


"சீ" 
என்று சொல்லிவிட்டதால்
உடைந்த காதலும் உண்டு
உயிரையே எடுத்தாலும்
உடையாத காதலும் உண்டு

காதலில் ஒரு தம்பதி
கவியமாகிறார்கள்
காதலில் மறு தம்பதி
காணாமலே போகிறார்கள்

இனிப்பாக இருப்பதே
சிலருக்கு கசப்பாய் அமைகிறது
கசப்பாய் இருப்பதே
சிலருக்கு இனிப்பாய் இனிக்கிறது

சிலருக்கோ 
ருசியும் தெரிவதில்லை
அதன் பசியும் புரிவதில்லை

காதல்தான் முக்தியும்
கழுத்தை அறுக்கும் கத்தியும்

ஒரே சமயத்தில்
இருவேறு நடன அசைவுகளைக்
காட்டும் மாய தேவதைதான்
இந்தக் காதல் போலும்
ஒருவனை அழ வைப்பது எதுவோ
ஒருவனை எழ வைப்பதும் அதுவே

இறைவனைக் காட்டிலும் அதிகம்
வழிபாடு வாங்குவதும்
நம்மிடம் தினம் தினம்
வசைபாடு வாங்குவதும்
காதலில் தலையெழுத்து

யாரால் அதை திருத்தி
எழுதிட முடியும்

இப்படி 
தன் பெயர் அடிபடும் 
கதைகளையெல்லாம் என்றாவது
அறிந்திருக்குமா அந்தக்
காதல்

சொல்லமுடியாது
இந்தக் கவிதையைக் கூட
யாரோ ஒருவர் 
நாவில் அமர்ந்து
வாசித்துக்கொண்டிருக்கும்

அது
சாமியின் நாவா
சாத்தானின் நாவா
எனதான் நமக்கு தெரியவில்லை
தெரியாமல் இருப்பதுதானே
காதலின் கலை...






மார்ச் 11, 2025

- தொடாவானம் -

 

உண்மையைச் சொல்லுங்கள் 

மறைக்காமல் சொல்லுங்கள்


அன்பின் பெயரால்

கூர்வாளை மார்பில் ஏந்தி

உடல் 

உடைந்தூற்றும் உதிரத்தில் 

பூக்களை மலர்விப்பவர்கள் 

நீங்கள்தானே


வலிக்கவில்லை வலிக்கவில்லையென

சிரித்துக்கொண்டே செல்பவர்கள் நீங்கள்தானே


முழுக்க முட்டாளாக்கி 

உங்களை உதாசினம் செய்பவர்களுக்காகவும்

நீங்கள் பிரார்த்திப்பீர்கள்தானே


அவர்கள் அறியாமல் செய்கிறார்கள்

என அழுகிறீர்களே


ஒரே ஒரு கேள்வியைக் கேட்கவா

உங்கள் உதிரம் குடித்து

வளர்ந்த செடிகளில் 

இன்று

பூத்துக்குலுங்கும் பூக்களுக்கு

உங்களைக் கொஞ்சமாவது நினைவிருக்கிறதா?


இனியெப்போதும் 

தொட்டுவிடவே முடியாத ஒன்றுக்கு

தொடுவானம் என பெயரிட்டவனிடம்தான்

எவ்வளவு கருணை

எவ்வளவு அன்பு

அவனைத்தானே இவர்கள்

முதலில் கொன்றிருப்பார்கள்


உன்னையும் என்னையுமா

விட்டு வைக்கப்போகிறார்கள்....


சகாவே

செத்துபிழைத்தான் என 

இவர்களிடம் பெயர் வாங்குவதற்காக

நாம் செத்துப்போக முடியுமா....

மார்ச் 10, 2025

- மறைந்தாடும் மௌனிகள் -


அந்த மௌனத்தை

அப்படியே விட்டுவிடலாம்தானே


என் சகாவே

ஏன் தடுமாறுகிறாய்


மீண்டும் மீண்டும்

காயப்படும் இதயத்தின்

வலியை

இன்னும் எத்தனை நாட்கள்தான்

பொறுப்பாய்


நெருப்பாய் விழும்

சொற்களை

வெறுமனே தாங்கிகொள்ள

உன் இதயம் என்ன

கற்களா 


அவர்கள்

மௌனம் காக்கிறார்கள் என்றால்

உன்னை இன்னமுமே

வதைக்க 

வழிமுறைகளை யோசிக்கிறார்கள்

என புரிந்து கொள்


இங்கு

எல்லா மௌனங்களுமே மௌனங்கள் அல்ல


அதில் சில

நயவஞ்சக ஓநாய்களின் நாக்குகள்

பசித்திருக்கும் கழுகுகள்

காத்திருக்கும் கட்டுவிரியன்கள்


தானாய்ச் சென்று 

தலை கொடுக்காதே


மௌனத்தை அப்படியே

விட்டுவிடுவதுதான்

உனக்கும் நல்லது

உன்னையே நம்பி துடிக்கும்

இதயத்திற்கும் 

ரொம்பவே நல்லது


மார்ச் 09, 2025

- சமாதி புறா -

 


தொலைக்காட்சி விவாதமேடை

காதலால் சாதியை எதிர்த்து

ஓடிப்போய்

எங்கோ ஓர் மூலையில்

நிம்மதியாய்

வாழ்ந்திருந்த தம்பதிகள்

முகம் காட்டினார்கள்


கடந்த காலத்தின்

கசப்புகளையும் 

எதிர்காலத்தின் நம்பிக்கையையும்

கண்கலங்க பேசினார்கள்


இழந்துவிட்ட

அம்மாவின் பாசம்

அப்பாவின் அக்கறை

அண்ணன் தம்பிகளின் அரவணைப்பு

அக்கா தங்கைகளின் சிரிப்பு

உறவுகளின் உரையாடல்

ஊர் மக்களின் உற்சாகம்

என 

இழந்துவிட்டவை எவ்வளவோ


வீட்டிலிருந்து பார்த்த

பலரும் அழுதார்கள்


நிகழ்ச்சி முடிவில்

சாதி தோற்று

காதலே வென்றது என

நடத்துனரும் கொண்டாடினார்


சில நாட்களில்

பங்கேற்ற மூன்று தம்பதிகளையும்

அடையாளம் தெரியாதவர்கள்

வெட்டி கொன்றார்கள்


மேற்கொண்ட இரு 

தம்பதிகள் தற்கொலை

செய்து கொண்டார்கள்


அடுத்த வாரம்

அதே விவாத மேடையில்

'ஏன் கொல்கிறோம்' என்பவர்களை

பேச அழைத்திருந்தார்கள்


விவாத மேடைகளின்

விளைவுகள் அவ்வளவுதானா



மார்ச் 08, 2025

- அரசியல்வியாதி -

 


எழுத எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

கிறுக்கல்


பகிர எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

புரளி


பாட எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

ஒப்பாரி


பேச எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

வசை


சிரிக்க எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

பகடி


தப்பிக்க எதுவும்

இல்லையென்றால்

இருக்கவே இருக்கிறது

கழிவிரக்கம்


மில்லியன் பண ஊழலில் 

அரசியல்வாதி சிக்கிவிட்டால்

இருக்கவே இருக்கிறது

மதச்சண்டையும் இனச்சண்டையும்


மார்ச் 07, 2025

- பி(ர/ரே)மை -

 


சகாவே

தற்கொலைக்கும் 

முக்தியடைவதற்கும்

என்ன வித்தியாசம்


எங்கே போகிறோம் 

எதற்கு போகிறோம்

ஏன் போகிறோம்

என்கிற

தெளிவின் ஆழம்தான் 

இல்லையா


என்னை மறைத்துக்கொள்ள

எனக்கிருப்பது 

என் கவிதைகள்

மட்டுமே


என்னை கண்டுபிடிக்க

உனக்கிருப்பதும்

என் கவிதைகள் 

மட்டுமே


யாராவதென்னை

கண்டறியட்டும் என்றே

காலம் முழுக்க

மறைந்தாடுகிறேன்


நான் விலகி ஓடவில்லை

நமக்கிருக்கும் இடைவெளியின்

மீது வெளிச்சம் பாய்ச்சுகிறேன்


அது எவ்வளவு பிரகாசமோ

அவ்வளவு வலி

அது எவ்வளவு மங்கலோ

அவ்வளவும் வழி


ஒரே வரியில் ஆயிரம் அர்த்தங்கள்

வைப்பவன் ஞானி என்றால்

ஆயிரம் வரிகளை ஒரே அர்த்தத்தில் வைப்பவன் தீர்க்கதரிசி என்றாகக்கடவது


இதிலொரு பிரமை இருக்கிறது

இதிலேதான் பிரேமையும் இருக்கிறது



மார்ச் 06, 2025

- ஒரே கவிதை -

 

நெடுநாட்களாக 

மனதை இம்சித்திருந்த

கவிதையை 

இன்று எப்படியோ 

எழுதி முடித்து விட்டேன்


இன்றுதான்

எதோ கொஞ்சம்

பெருமூச்சு விடமுடிகிறது


இனியாவது

நிம்மதியாய் உறங்குவாயா

என கேட்கிறாள்


இல்லை

இனி ஒருபோதும்

என்னால் நிம்மதியாகவே

இருக்க முடியாது


நாம் 

அடுத்த கவிதைக்கு

செல்லவேண்டாமா


ஒரு கவிதை என்பதை

ஒரே கவிதை என்றா

நினைக்கிறாய்


மார்ச் 05, 2025

- சொற்களே வாதை, சொற்களே போதை, சொற்களே பாதை -

 


ஒருவனை உடைக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை வதைக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை சிதைக்க 

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை வஞ்சிக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை தாழ்த்த

ஒரு சொல் 

போதுமானது

ஒருவனை வீழ்த்த

ஒரு சொல்

போதுமானது



ஆனால்,

ஒருவன் தன் தேடலை

தெரிய

ஒருவன் தன் மீட்சியை 

அறிய

ஒருவன் தன் அறத்தை 

விளங்க

ஒருவன் தன் அவமானத்தை

துடைக்க


ஆயிரமாயிரம் பக்கங்கள் தேவைப்படுகின்றன


அதற்கென்றேதான் இங்கு

இன்னும் இன்னும்

கவிதைகள்

எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன


கண்ணீரைத் துடைக்க

வழி சொல்பவன்

அந்தக் கண்ணீரின் வலியின் சென்றிருக்கத்தான் வேண்டும்


ஆதாம் ஏவாள்

காலத்திலிருந்தே இங்கு

சொற்களே வாதை 

சொற்களே போதை

சொற்களே பாதை 

மார்ச் 04, 2025

- உனக்கு வேறு கவிதை -

 


அன்பே

உனக்கொரு காதல் கவிதை

அனுப்பியிருந்தேன் வாசித்தாயா?


என் மனதிலிருந்த வார்த்தைகளை

எந்த பாசாங்குமின்றி

எந்த ஒளிவும் மறைவும் இன்றி

வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்


நாம் இருவருக்குமான

காதல் காவியத்தை

உனக்கே உனக்கென

செதுக்கியிருக்கிறேன்


இப்படியொரு கவிதையை

இன்னொருவன் எழுதவே முடியாதபடிக்கு எழுதியிருக்கிறேன்


வாசித்தாயா

இல்லையென்றால்

ரொம்பவும் பாவம் நீ


இனியெப்போதும் அதை 

வாசிக்காதே

இனி அது உன்னுடையதல்ல


என் அன்பே 

நீ நம் காதல் 

சாம்ராஜ்ஜியத்தின் பேரரசிக்கான வாழ்வை தவறவிட்டுவிட்டாய்


சரி போகட்டும் விடு


உனக்கென  

இன்னொரு கவிதையை 

எழுதி அனுப்புகிறேன்

அதையாவது நீ

தவறாமல் வாசி


முன்பு அனுப்பிய கவிதை

இன்னொருத்திக்கு பிடித்துவிட்டதாம்

இனி அவளுக்குத்தான் 

அக்கவிதையும் அதன் சாம்ராஜ்ஜியமும்


உனக்கு வேறு கவிதை....

மார்ச் 03, 2025

- மழையடிக்கும் குடை -

 

மழைவிடும் வரை

குடை என்பது கொடை

பெருங்கொடை


மழைவிட்ட பின்

அக்குடையே நமக்கு தடை 

பெருந்தடை


இங்கு தடையாகும் ஏதொன்றும்

நமக்கொருநாளில் 

பெருங்கொடையென இருந்ததை


அறிந்து கொள்

மனமே


அறிவில் கொள் 

தினமே....


மார்ச் 02, 2025

- எளிய மனிதனின் ஆயுதம் -


தனக்கென்ற 
மேளத்தை
தானே அடித்து
தன் தாண்டி
இசையைக் கொடுத்து
வயிறு நிறைத்தவனின்

மேளத்தை பிடுங்கிவிட்டீர்கள்
சாட்டையில் முட்களை சொருகிவிட்டீர்கள்
அடையாளத்தை அழித்துவிட்டீர்கள்
உங்கள் பாவங்களுக்கு
ஆயிரம் காரணம் இருக்கலாம்

மேளமடிப்பதற்கு பதில்
தன் மேல் தோலை
அடித்து அடித்து
சதைகளின் பிளவில்
குருதிகளின் கொடையில்
நிறுத்தாமலவன் 
இசையைக் கொடுப்பதற்கு
காரணம்

அவனின் பசித்த வயிறு
மட்டுமல்ல
என்றென்றும் நிலைத்திருக்கும்
அவனின் 
பசித்திருக்கும் பெருங்கனவு

எளிய மனிதனின்
முதலும் கடைசியுமான
ஆயுதம் எப்போதும்
அவனேதான்.....

மார்ச் 01, 2025

- தொப்பை முளைத்த தலைகள் -



அப்போதெல்லாம்

எப்போதாவது 

அந்தத் தாத்தா

எங்கள் வீட்டு லயத்தில் 

சைக்கிளோடு வருவார்


ஒருபோதும் உட்கார்ந்து 

வரமாட்டார்

நீண்ட நடைப்பயண 

தோழன் போல்

சைக்கிள் தோளில்

கையைப் போட்டுகொண்டு

நடந்துதான் வருவார்


இன்னொரு கையோ

சைக்கிள் சீட்டில்

அமர்ந்திருக்கும் வண்ணமிட்ட

பெட்டியைத் தாங்கியிருக்கும்


கையடக்க பூஜை மணியில்

கைப்பிடிப்பு வலிக்காதிருக்க

கட்டியிருக்கும்

நைந்த துணியை

கழற்றி வீச மனமின்றி

ஒன்றின் மேல் ஒன்றென 

சுற்றிச்சுற்றி

உலகிலேயே 

தலையில் தொப்பை முளைத்த 

உருவத்தை அதில்தான் 

பார்க்க முடிந்தது


அதைவிட அதிசயம்

அவரால் எப்படியோ

அந்த மணியை 

நொடிக்கொரு முறை

அடிக்க முடிந்தது


வீட்டின் எந்த மூலையில்

இருந்தாலும்

அவர் வந்துவிட்டால்

குழந்தைகளின் கூச்சல்  

"தோ பாரு வந்துட்டாரு"

என எல்லோர்

காதையும் குடையும்


நடந்தே தேய்ந்த

ஜப்பான் சிலிப்பரில்

அழுக்கு படிந்த

காற்சட்டையில்

மாதம் ஒருமுறை துவைக்கும்

மேல்சட்டையில்

பொக்கை வாய் சிரிப்பில்

நடுங்கும் கைகளில்


அன்று 

அவர் விற்ற 

ஐஸ் கிரீமின் ருசி

இன்று

எவன் விற்கும்

ஐஸ் கிரீமிலும் இல்லை.....


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்