- பசித்திருக்கும் பசி -
சர்க்கஸ் கோமாளியை
சிங்கம் கடித்து குதறுகிறது
மேடை முழுக்க
இரத்தம் தெறிக்கிறது
காணக்கிடைக்காத
முப்பரிணாம
ஓவியக் காட்சி போல
சட்டகத்தில் இருந்து
பல்வேறு நிலையிலான
சிவப்பு வண்ணங்கள் வழிந்து
பார்வையாளர்களின்
நாற்காலி கால்களை நனைக்க
அரங்கமே கைத்தட்டி
ஆர்ப்பறிக்கிறது
கோமாளியென்றால்
குறும்புகள் செய்து சிரிக்க வைப்பான்
என
காலம்காலமாகப் பார்த்து
பழகிய பொதுஜனத்திடம்
வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்
அவர்களுக்கு
சிங்கத்தின் பசியும்
ஒன்றுதான்
கோமாளியின் பசியும்
ஒன்றுதான்
இரண்டுமே அவர்களைச்
சிரிக்க வைக்கும் யுக்திகள்
அவ்வளவுதான்...
0 comments:
கருத்துரையிடுக