- கிணறு தாண்டிய வசைகள் -
'போடா நாயே...!'
கையடக்கத்திரையைத்
தட்டித்தடவி வார்த்தைகளைச்
சேர்க்கும் போதே
மனமும் சேர்ந்து அதிர்கிறது
துணுக்குறுகிறது
ஏறக்குறைய இதுவும் கூட
பாதி கிணறு தாண்டிய
வசை சொல்தான்
அந்தரத்தில் தன் சுயம்
தெரியாது
மிதந்து மிதந்து
தப்பித்துக்கொள்கிறது
அம்மா சொன்னால்
ஒருமாதிரி கேட்கும்
அப்பா சொன்னால்
ஒருமாதிரி கேட்கும்
காதலி சொன்னால்
ஒரு மாதிரி கேட்கும்
அண்ணன் சொன்னால்
அக்கா சொன்னால்
தம்பி சொன்னால்
தங்கை சொன்னால்
நண்பன் சொன்னால்
நண்பி சொன்னால்
ஆசிரியர் சொன்னால்
அரசியல்வாதி சொன்னால்
என
ஆளுக்கு ஆள் சொல்லத்தான்
செய்கிறார்கள்
ஆனால் கோவம் மட்டும்
இன்னொரு சாமியை
கூம்பிடுபவன் சொன்னால்
சொன்னால் என்ன சொன்னால்
சொல்வான் என்று தெரிந்தாலோ
அவன்
சொல்ல முயன்றாலே
பொத்துக்கொண்டு வருகிறது
மொத்த கோவமும்
அதுவொரு வரலாற்று
பெருமிதம்
முதலில் அவனை
வெட்டி
வீசிவிட்டுதான்
உங்களோடு அளவலாவிக் கொண்டிருக்கிறேன்
இப்போது இந்த வார்த்தை
முழு கிணறையும் தாண்டிவிட்டது
நிச்சயமாய்ச் சொல்கிறேன்
இது 100 சதவிதம்
வசைதான்
0 comments:
கருத்துரையிடுக