பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 12, 2020

கேள்வி பிறந்தது அன்று…?


12.4.2020 - 'ஞாயிறு தமிழ்மலர்'

      ஆங்கிலத்தில் w-Questions என சொல்லப்படுவதை கேள்விப்படிருப்பீர்கள். பொதுவாக மாணவர்களுக்கு கட்டுரை கதை போன்றவற்றை எழுதுவதற்கு மிகவும் பயனாக இருக்கும். 
Who ? Where ? When ? Why ? போன்ற நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்வது மூலமாகவே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பையொட்டிய கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடிக்கலாம்.  இந்த w-Questions-ஐ பற்றி கொஞ்சம் பேசாவேண்டியுள்ளது. ஆக, இதனை கொஞ்சம் நமக்கு ஏற்றார் போல தமிழ்ப்படுத்திக்கொள்ளலாமா.?

எவர் ?எங்கே ?எப்போது ?ஏன் ?.

      கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் மட்டுமல்ல. நமது இயல்பு வாழ்க்கைக்கும் பெருந்துணையாக இக்கேள்விகள் அமையும். அமைத்துக்கொள்ளலாம். நம் வாழ்வில் நமக்காக நாம் செய்துக்கொண்டதைவிடவும் இன்னொருவருக்காக நாம் செய்துக் கொடுத்ததுதான் சிந்திக்கையில் சதவிதத்தில் அதிகமாக வந்துவிடுகிறது.

      தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறுவேறுதான் என சொல்லி வைத்த நம் முன்னோர்கள் ஒன்றும்மூடகள் அல்ல..!

       ஆகச்சிறந்த இலக்கிய முன்னெடுப்பு முகநூலில் லைக் போடுவதும் அன்பிரண்ட செய்வதும் என ஆக்கிகொண்ட சூழலில் நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டுக்கொள்ளதான் வேண்டும்.  பதில் கிடைக்குமா என்கிற ஐயம் உங்களுக்கு. கேள்வியில் கொஞ்சமாவது நேர்மை இருக்குமா என்கிற ஐயம் எனக்கு.

      ‘கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்கிற பழையப்பாடலை கேட்டிருப்போம். என்றோ ஒரு நாள் கேட்கப்பட்ட கேள்வியாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அதற்கான பதில் கிடைத்துதான் செய்யும். நம் பங்கிற்கு கேள்விகளை முன்வைத்தோமா என்பதுதான் கேள்வி.
       
     இப்போது நமக்கான எ-வரிசைக் கேள்விகளுக்கு வரலாம். சமீபத்திய நம் செயல்களை நினைவுப்படுத்திக் கொள்வோம். மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கக்கூடிய காரியம் ஒன்றை நினையுங்கள். அந்த நினைவுகளுக்கு அருகில்  எவர் ? எங்கே ?எப்போது ? ஏன்?. என்ற கேள்வியை அடுக்கிக்கொள்ளுங்கள். நியாயமான முறையில் அதற்கான பதில்களைச் சொல்லுங்கள். யாருக்காக செய்தீர்கள், எங்கே செய்தீர்கள், எப்போது செய்தீர்கள், ஏன் செய்தீர்கள்?
    
     உதாரணமாக திரைப்படம் பார்ப்பதற்கு நண்பர் உங்களை அழைத்திருக்கிறார். நீங்களும் சென்று திரைப்படம் பார்-த்துவிட்டு இரவில் வீட்டீற்கு வந்துவிட்டீர்கள். இதிலென்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்கள் தானே. இப்படி இதிலென்ன இருக்கிறது  என்ற ‘ஏனோதானோ’ எண்ணங்கள்தான் நம்மை ஏமாளியாக்கிவிடுகின்றன. யாருக்காக சென்றீர்கள் என்று கேளுங்கள். அழைத்த நண்பர் அத்தனை முக்கியமானவரா. அழைப்பை மறுத்துவிட்டால் நம் உறவை அன்றோடு முறித்துக் கொள்வாரா. எங்கே சென்றீர்கள். உங்களுக்கு அருகிலா அல்லது தூரமாகவா. அவர் அழைத்துக் கொண்டாரா இல்லை நீங்கள அவரை அழைத்துக் கொண்டீர்களா. எப்போது சென்றீர்கள். உங்களுக்கு அதைவிட செய்வதற்கு வேலை இருந்ததா. கடைசியாக ஏன் சென்றீர்கள். 
    
     இம்மாதிரி கேள்விகளை முதன் முதலில் சிந்திக்கியில் இதெல்லாம் ஒரு வேலையா என்றிருக்கும். ஆனால்; இவ்வாறு உங்களைக் கேட்டு பழகிக் கொண்டீர்கள் என்றால் உங்களின் பொன்னான நேரம் யாருக்கெல்லாம் பயனாகவும் பயனில்லாமலும் செலவாகிக் கொண்டிருப்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

      எல்லோருக்கும் இருப்பது ஒரே அளவிளான நேரம்தான், அதனை எதற்கு பயன்படுத்துகின்றோம் என்பதுதான் நாம் நம்மை நோக்கிக் கேட்டுக்கொள்ளக்கூடிய கேள்வி.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்