பொண்டாட்டி சாபம்
மெல்ல நினைவை இழந்துக் கொண்டிருந்தான். செல்வனுக்கு அந்த கடைசி நினைவுகள் மட்டுமே இப்போது இருந்தன. தலையில் பலத்த காயம். மருத்துவர்கள் இனி காப்பாற்றுவது கடினம் என சொல்லிவிட்டார்கள்.
அவளின் சாபம் இத்தனை வேகத்தில் பலிக்கும் என அவளும்தான் நினைக்கவில்லை. அவர்களின் காதல் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்து.
எந்த குறையும் இல்லை. ஆனால் ஏனோ செல்வனுக்கு சீதா மீது இருந்த காதல் கரைந்து கீதா மேல் ஈர்ப்பாக வளரத்தொடங்கியது.
அன்றுதான் அந்த சம்பவம் நடந்தது. கொஞ்ச கொஞ்சமாக இருந்து வந்த சண்டை அன்று அதன் எல்லையைத் தாண்டியது. இனி சீதா தனக்கு வேண்டாம். கீதாவுடன் தான் வாழப்போவதாக செல்வன் சொல்லிவிட்டான்.
சீதாவால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. சண்டை முற்றியது. செல்வன் அவன் கட்டிய தாலியை அவனே இழுத்து அறுத்தான். அன்று அவள் பார்த்தக் கணவன் வேறு யார் போலவோ இருந்தான்.
அவளால் தாங்க முடியவில்லை. ஒட்டுமொத்த சாபத்தையும் அவன் மீது வீசினாள். அவனை எதுவும் பாதிக்கவில்லை. வெளியேறினான்.
இனி தான், அர்த்தமின்றி வாழக் கூடாது என சீதா தீர்மானம் செய்தாள். வெறும் கழுத்தைத் தடவிக்கொண்டே பால்கனிக்கு வந்தாள். ஆறாவது மாடியில் இருந்து கீழே பார்த்தாள். அந்த பக்கம் ஒரு லாரி வேகமாக வந்துக் கொண்டிருந்தது. இந்த பக்கம் கையில் தாலியுடன் செல்வன் வெளியேறுகிறான்.
அவன் கண்முன்னே தற்கொலை செய்ய அரைநொடியில் முடிவெடுத்து அடுத்த நொடியில் பால்கனியில் இருந்து குதித்தாள்.
அவள் குதிக்கவும் லாரி வரவும் செல்வம் கடக்கவும் சரியாக இருந்தது. செல்வம் முன்னே லாரி எமெர்ஜென்சி பிரேக் போட்டு நிற்க, செல்வம் அதை பார்த்து அப்படியே நிற்க, அவன் தலையிலேயே சீதா விழுந்தாள்.
மருத்துவமனை படுக்கையில் செல்வம் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தான். சொர்ப்பக் காயங்களுடன் அவன் அருகில் சீதா நின்றுக்கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகை வரவில்லை. அவளின் வலது கை அவளின் வெறும் கழுத்தைத் தடவிக்கொண்டு இருந்தது.
- தயாஜி
2 comments:
அடுத்த நாள் செய்தி தாளில் :
மனைவியின் கள்ள காதலை அறிந்த கணவன் பட்ட பகலில் நட்ட நடுவில் கொலை! அவன் கட்டிய தாலியை அறுத்து அவனிடமே விட்டெறிந்து ஆறு அடுக்கு மாடியில் இருந்து அவன் தலை மேல் குதித்து கொலை செய்த துரோகி "மனைவி"!
அப்படியும் முடியலாம்தான்....
கருத்துரையிடுக