நன்றாக இருங்கள்
யாஹூ என்னும் மின்னஞ்சல் முகவரி உங்கள் யாரிடமும் இருக்கிறதா. அதன் நினைவாவது உள்ளதா ?. என்னிடமும் இல்லை. நேற்றுவரை.
எனது பழைய நண்பன் ஒருவனை சந்தித்திருந்தேன். உரையாடலின் முடிவில் ‘யாஹு இ-மெயிலை நீயாவது வச்சிருக்கயா இல்ல மறந்துட்டயா?’ என மீண்டும் ஆரம்பித்தான். அப்படியே எங்கே எப்போது எனத் தொடர்ந்தவன் மதியத்தில் முடித்தான். வீடு வந்த நான், கணினியில் அவன் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தேன்.
கடவுச்சொல் நினைவில் இல்லை. ஆனாலும் இன்னமும் அதே எண் கொண்ட கைபேசிதான் உபயோகத்தில் இருந்ததால் அதன் மூலம் சில விப்ரங்களைப்பெற்று பழைய மின்னஞ்சலில் புதிய காதலியில் பெயரில் நுழைந்தேன். நான்காயிரம் மின்னஞ்சல்கள் வரை திறக்காமல் இருந்தன.
பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். இவற்றையெல்லாம் அப்போதே செய்திருந்தால் எத்தனை வசதியாக இருந்திருக்கும் . நேற்று கூட புதிதாக ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. ஆச்சர்யம்தான்.
அதைவிடவும் ஆச்சர்யம் என்னவெனில், ஒரே மின்னஞ்சலில் இருந்து சமீபமாக தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்துகொண்டே இருந்திருக்கின்றன. ஆர்வமானது. அந்நபர் அனுப்பிய முதல் மின்னஞ்சலுக்குச் சென்றேன். நான்காண்டுகளாக அது வந்திருந்தது.
‘வணக்கம் ஐயா, இன்று உங்கள் நிகழ்ச்சியில் காலை மணி 10 மணிக்கு 26 நிமிடத்தில் 13 வது வினாடியில் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தீர்கள். வழக்கம் போல என்னால் அந்த பாடலை கேட்க முடியவில்லை. ஏதோ எனக்குள் இசைக்கத் தொடங்கிவிட்டது. அதன் வரிகள் எனக்கே எனக்காக மட்டுமே எழுதப்பட்ட பாடல் போல இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் நான் அழுதேவிட்டேன். பாதியில் இருந்து கேட்ட பாடல் என்பதாலும் மெய்மறந்து எங்கோ சென்றுவிட்டதாலும் என்னால் அப்பாடல் குறித்த எந்த விபரங்களையும் அறிய முடியவில்லை… தயவு செய்து அந்தப் பாடலை எனக்கு சீடியில் போட முடியுமா.. மின்னஞ்சல் அனுப்ப முடியுமா.. என்ன பாடல், என்ன திரைப்படம் என சொல்ல முடியுமா..? அதற்கு பணம் தேவையென்றாலும் சொல்லுங்கள்.. தயவு செய்து உதவுங்கள்…’ உடன் அந்நபரின் கைபேசி எண்ணும் இருந்தது.
வானொலி பணியைவிட்டு வலகி ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும். உந்துதலில் பேரில் அதில் இருந்த கைபேசிக்கு அழைத்தேன். அந்த எண் இப்போது பயன்பாட்டில் இல்லை என்று வந்தது.
அந்நபர் நேற்று அனுப்பிய கடைசி மின்னஞ்சலைத் திறந்தேன்.
‘வணக்கம் ஐயா உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்துவிடாதுதான்.. என்னிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை… நன்றாக இருங்கள்…நன்றி ’
மீண்டும் மீண்டும் இந்த மின்னஞ்சலைப் படிக்கிறேன். அவர் எழுதியிருக்கும் ‘நன்றாக இருங்கள்’ என்ற வார்த்தையில் என்னமோ இருப்பதாகவே மனம் நடுங்க ஆரம்பித்தது.
-தயாஜி
0 comments:
கருத்துரையிடுக