பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 14, 2020

சீ.முத்துசாமியின் 'மண்புழுக்கள்'

சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் (மலேசிய) நாவல் குறித்து..



வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை அறிய முடியும். அதற்கான காரணம் வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படைப்பாளி இயங்குவதாகவும் இருக்கலாம். ஒருபடைப்பு அதன் அசல் தன்மை குன்றாமல் இருக்க அதனை எழுதுகின்ற படைப்பாளியிடம் அவர் மண் சார்ந்த அனுபவம் இருக்க வேண்டும் எனதான் தோன்றுகிறது. அது அனுபவமாகவும் இருக்கலாம்; மண் மீதான பிடிப்பாகவும் இருக்கலாம். அந்த பிரியம் படைப்பாளியின் மொழியின் ஊடே தன்னை காட்டிக்கொள்ள தவறுவதில்லை. அதனால்தான் நூல்கள் மூலம் மட்டுமே இலக்கியம் கற்று அதை எழுதுகின்ற படைப்பாளிகளின் ஆக்கங்கள் பாடநூல்களை ஒத்து திட்டமிடப்பட்ட கட்டுச்செட்டான படைப்புகளாக தங்கிவிடுகின்றன. வாழ்விலிருந்து உருவி இலக்கியமாக எழுதப்பட்ட படைப்புகள்தான் தனித்துவமான இடங்களைத் தொடுகின்றன.

மண்புழுக்கள், சீ.முத்துசாமியின் தன் மண் மீதான பிரியத்துடன், தோட்ட வாழ் மக்கள் மீதான அக்கறையுடன், அவர்களின் எதிர்காலம் குறித்த ஐயப்பாடுகளுடன்  மண்ணுள் நுழைந்து அலையும் ஒரு மண்புழுவைப்போலவே தோட்டத்தில் அலைந்து திரிந்த பச்சை மணம் மாறாமல் எழுதியுள்ளார்.

கோழிகளை கே.எஃ.சியிலும், மீன்களை சீன சாப்பாட்டு கடைகளிலும் பார்த்துத் தெரிந்து கொள்கின்ற நவநாகரீக சமூகத்தினராக நாம் ஆகிவிட்ட நிலையில், ஒன்று – இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் சென்று பார்த்து, நாம் வாழ்ந்த வாழ்வை தெரிந்துக்கொள்ள இப்படைப்பு ஒரு ஆவணம். மலேசிய தோட்டத்தின் பாட்டாளிகளின் கதைகள் அவர்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் மொழி அவர்களின் நம்பிக்கை அவர்களின் மனித நேயம், அவர்கள் மிருக குணம் என ஒரு முழுமையான படைப்பாக மண்புழுக்கள் நாவல் தன்னை வெளிக்காட்டுகிறது.

ஆட்டுக்காரன் வீட்டில் ஆட்டோடு ஆடுகளாக வளரும் ஒரு ஆட்டுக்குப் பெயர் சாமி கெடா. ஆடுகள் வழக்கமாக இலை தழைகளைச் சாப்பிடும். இந்த சாமி கெடா  தோட்டத்தில் திறந்திருக்கும்  வீடுகளில் நுழைகிறது. சமையல் அறைவரை சென்று அங்கிருக்கும் உணவுகள் அத்தனையையும் தின்றுவிட்டு ஏப்பாம் விடாத குறையாக மிடுக்காக உலா வருகிறது. அதனை விரட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் மறக்காமல் வீட்டை பூட்டிவிட்டு அங்குள்ளவர்கள் தத்தம் வேலைகளைச் செய்கிறார்கள். இவ்வாறு தோட்ட மக்களின் இயல்பான வாழ்வியலை விலங்குகளின் வழியும் இந்நாவல் விளக்கிச் செல்கிறது.

இந்நாவலில் தனித்து தெரிவது சீ.முத்துசாமியின் மொழி. மண்ணின் மணம் கொண்ட மொழி அது.  அந்தந்த கதாப்பாத்திரங்கள் போலியற்ற உணர்ச்சிகளால் தங்கள் மொழியைப் பேசிச்செல்கின்றார்கள். அவை தமிழ்தான் என்றாலும் அந்த வகை தோட்ட மொழியில் இருந்து  நாம் நம்மை  எவ்வளவு தூரம் துண்டிந்துக்கொண்டு வந்துவிட்டோம் என நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் தமிழ், திருநெல்வெலி தமிழ், மெட்ராஸ் மொழி என்று பேச முடிகின்ற- அப்படி பேசினாலும் புரிந்துகொள்கிற- நாம்தான் நம் முன்னோர்கள் பேசிய தோட்ட மொழியில் உருவான ‘மண்புழுக்களை’ சிக்கலான மொழிநடை என்கிறோம்.  நாம் நமது வட்டார மொழியில் இருந்து அந்நியமாகிவிடவில்லை; நமது வேரில் இருந்தே நம்மை துண்டித்துக்கொண்டு எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறோம். மூச்சுவாங்க நின்று பார்க்கும் போது கடந்துவிட்ட தூரத்திலும் நமக்கு ஒன்றும் தெரியாது; கடந்துப்போக வேண்டிய தூரமும் கண்ணுக்குத் தெரியாது அந்தரத்தில் அந்நியனாக நிற்கிறோம். இந்நாவல் நாம் இழந்துவிட்ட மொழியினூடாக இறந்தகாலத்தில் பயணிக்க கொஞ்ச நேரத்தில் நம்மையும் உள்ளே இழுத்துவிடுகிறது. மூதாதையரின் உயிரணுக்களின் வேலை போல அது. நாவல் வாசிக்கையில் சாத்தியமாகிவிடுகிறது. இன்னும் சில காலம் கழித்து தோட்ட மொழிகள் குறித்து யாராவது தெரிந்துக் கொள்ள முயன்றால் மண்புழுக்கள் முதன்மையாக தரவாக இருக்கும். உதாரணமாக தீம்பார், பாசா, ஆம்பர், வங்குசா, தாசா கத்தி, குசினி, மணக்கட்டை, தக்கர், ச்சின்னாங்கு, ஜின்னு என அடுக்கிக்கொண்டு செல்லலாம்.  இவை  தமிழும் ஆங்கிலமும் மலாயும் கலந்துவிட்ட புதிவித வட்டார மொழியாக நாவல் முழுக்க பின்னிக்கிடக்கின்றன. இவை அசல் தோட்ட மக்கள் பயன்படுத்தி அவர்களின் வாழ்வியல் மொழி.

ஆட்டுக்காரன் சின்னக்கருப்பன் குறித்த அறிமுகத்தோடு நாவல் தொடங்குகின்றது. நாவலில் நிறைவு அத்தியாயத்தில் ஆட்டுக்காரன் தற்கொலை செய்துக்கொள்கிறான். ஆனால் நாவலில் கதாநாயகன் அவனில்லை; வேறு எவரைச் சொல்வதென்றும் தெரியவில்லை. ஆட்டுக்காரனில் தொடங்கி ஒவ்வொரு கிளையாக நாவல் தன்னை வளர்த்துக்கொண்டே போகிறது. ஒருமுறை நாவலில் வந்தவர்கள் மீண்டும் வருவது அறிதாகவே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் யாரென்றும் எப்படியானவர்கள் என்றும் அவர்களின் வாழ்வையும் நாவலாசிரியர் சொல்லிவிடுகின்றார்.

அதில் ஒருவர் சாலபலத்தார். வெற்றிலை கொள்ளை வைத்திருப்பவர். இன்றும் கூட வெற்றிலை கொடி வைப்பதற்கு கைராசிக்காரராக இருக்க வேண்டும் என சொல்வது உண்டு. ஒருபடி மேலே போய், ஒத்துக்கொள்ளாதவர்கள் யாரும் வெற்றிலை கொடி நட்டால் அது அவர்களுக்கே பாதகமாக அமைந்துவிடும் என்ற அதீத கற்பனை கதைகளும் தோட்டங்களில் உண்டு. தோட்டங்களில் முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும் இதுபோன்ற வெற்றிலைக்காரர்கள் வழி சீ.முத்துசாமி நாவலை உயிர்ப்பாக்குகிறார். அதேபோல முனியனின் மனைவி.

பாகவதர் திரைப்படத்தை லயித்து ரசித்து பார்க்கக்கூடியவள். வேறெந்த தேவையும் எதிர்ப்பார்ப்பும் அவளிடம் இல்லை. ஒரு முறை எரிச்சல் கொண்ட கணவன் இப்படி பைத்தியமாக பாகவதர் படம் பார்க்கிறயே, அதில் என்னதான் இருக்கு என கேட்க, “ஆமாண்டா  நா அவர புருஷனாதான் நெனக்கறேன்… நீ குடிச்சிட்டு வந்து அடிச்சி தொவச்சி நாயா உளுந்து பொரள்ரப்ப நா அவரதான்டா நெனைச்சி படுத்து கெடக்கறேன்… ஏன்டா அதுல என்ன குத்தம் ? பொம்பளங்க மேல அவருக்கு எத்தன மதுப்பு. அன்னக்கு பார்த்தயே படம்.. கட்டன பொண்டாட்டிய கண்ணு கலங்காம பார்த்துக்க எத்தன கஷ்டப்பட்டாரு அதில…நீ செய்வியாடா..?” என மனதில் பேசி முடிக்கின்றார். இந்நாவலில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வாறு உள்ளத்தில் உள்ளதை பேசியிருப்பது இவ்விடத்தில் மட்டும்தான் . ஒருவகையில் இந்தக் கதாபாத்திரம் தோட்டத்தின் பல பெண்களின் கூட்டு மனமாக வருகிறாள்.

மூன்றாவது பாத்திரம் புட்டுக்காரன். தமிழகத்தில் இருந்து சஞ்சிக்கூலியாக வந்த கதையை தொப்புளானிடம் பேசுவது நமக்கு எளிய வரலாற்றுச்சித்திரத்தைக் கொடுக்கிறது. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்த நிலமையும் அதன் பின் நாட்டை கைப்பற்றவிருக்கும் ஜப்பான்காரர்களின் அராஜாகம் வரைக்கும் அவர் சொல்லிச்செல்கிறார். இவ்வாறு தோட்ட மக்களின் பிரதிநிதிகளாக அறிமுகமாக இவர்களுக்கு நாவலின் மையத்தில் முக்கிய இடம் இல்லாவிட்டாலும் தோட்டம் எனும் நிலத்தின் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு.

தோட்டத்தில் வாழ்தவர்களுக்கென்றே பிரித்தியேகமான ஆமானுஷ்ய அனுபவங்கள் இருக்கும். செழிப்பாக இருந்து, பின் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களாலும் ஜப்பானியர்களாலும் தன் சொந்த இனத்தாலும் கொல்லப்பட்ட மனிதர்களின் ஆன்மா அவ்வளவு சீக்கிரத்தில் அம்மண்ணை விட்டு விலகிடாது எனும் நம்பிக்கை ஆழமானது. சமயங்களில் தோட்டத்தில் ஏற்பட்ட அமானுஷ்யமோ அல்லது பேய் பற்றிய அனுபவத்தையோ இப்போது பகிர்ந்தால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இவ்வனுபவங்கள்தான் தோட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பச்சையம். ஆட்டுக்காரனின் தங்கை அஞ்சலை தற்கொலை செய்துக்கொள்கிறாள். அவளே பேயாக வருவதாக நாவலில் வருகிறது. சமயத்தில் இருளாண்டி மனைவிக்குப் பேய் பிடிக்க, பூசாரியை அழைக்க ஓடுகிறார்கள். ஆனால் பூசாரியையும் பேய்கள் விட்டுவைப்பதில்லை. இருட்டில் யாருக்கோ காத்துக்கொண்டிருக்க வேப்பில்லையை ஒடிக்கச்சென்ற வயித்தன் வருவதாக புசாரி குரல் கொடுத்திருக்கிறார். சலனமின்றி அரிக்கேன் விளக்கை யாரோ தூக்கிகொண்டு பூசாரியை நோக்கி வருகிறார்கள். சற்று அருகில் வந்ததும் தன் கையில் பிடித்திருந்த அரிக்கேன் விளக்கில் தனது முகத்துக்கு அருகில் வைத்து கண்களை சுருக்கிப் பார்க்கிறார்கள். பூசாரி யாரோ தூக்கிக்கொண்டு வந்தது போல தெரிந்த அரிக்கோன் விளக்கு அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அந்தரத்தில் இருந்த அரிக்கேன் விளக்கு சற்று நேரத்தில் அப்படியே தீப்பந்தம் போல மரத்தின் உயரத்தின் எரியத்தொடங்குகிறது. மயங்கி விழுகிறார் பூசாரி. தோட்ட பின் புலத்தில் உள்ளவர்களால் இந்த மாதிரியான அரிக்கேன் விளக்குகள் மாதிரியான சம்பவங்களை உள்வாங்கிவிட முடியும். உச்சி நேரத்தில் தன்னந்தனியாக தீம்பாருக்கு போகின்ற சமயத்தில் கடவுள் பெயரை சொல்வார்களோ இல்லையோ எப்போதொ இறந்து அங்கு ஆவியாக நடமாடுவதாக சொல்லப்படும் காத்துகருப்புகளிடம் “தோ பாரு நான் பாட்டுக்கு இப்படியா வேலையா போறேன்.. நீ பாட்டுக்கு நீ இரு… நான் உன்னை தொந்தரவு செய்யல நீயும் என்னை தொந்தரவு செய்யாத” என பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

தோட்டத்து கோவிலில் எதையோ பாறிகொடுத்தது போல புதியவர் ஒருவர் அமர்ந்திருக்கின்றார்.  யாரென்றே அறிமுகம் இல்லாதவர். பிரம்மை பிடித்தவர் போல இருக்கிறவர். ஆனாலும் ஆட்டுகாரனின் கண்களில் பட்டதும் அவரை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். பத்து நாட்களாக ஏதும் பேசாமல் அந்த புதியவரும் ஆட்டுக்காரன் கொடுப்பதைச் சாப்பிட்டு வாசலிலேயே கிடக்கிறார். ஒரு நாள் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்க்கிறார்கள். கடைசியில் மாட்டு கொட்டகையில் மாடுகளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். மாடுகளும் புதியவர் என்று முரண்டு பிடிக்காமல் சகஜமாகவே இருக்கின்றன.

ஆட்டுக்காரனின் மூத்த மகள், மனிதர்களை விட பிற உயிர்கள் மீது பாசமிகுதியாய் இருக்கிறாள். அவள் இருக்கும் சமயத்தில் மட்டும் வந்து போகின்ற பசி எடுத்த கோழிகள், அவள் மீது அன்பை காட்டும் ஆடு மாடுகள் என அவளைச்சுற்றிலும் அன்பு மயத்தை ஏற்படுத்திக்கொள்கின்றாள். அறுந்துவிட்ட செருப்புடன் காடுகளுக்கு ஆடு மேய்க்க செல்வதும் முகத்தில் எப்போதும் சிரிப்பை சுமந்தவளாகவும் இருக்கிறாள். நாவலாசிரியர் அவள் குறித்து சொல்லும் போதெல்லாம் தோட்டத்தில் நமது தோழி ஒருத்தியை நம்மால் நினைவுக்கூராமல் இருக்க முடியாது. அப்படியானவள் ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக ஆடுகளுடன் வீடு திரும்பவில்லை. வீடும் தோட்டமும் கலவரமடைகிறது.
ஆட்டுக்காரனின் மகள் பிணமாக கண்டெடுக்கப்படுகிறாள். வன்புணர்வு செய்யப்பட்டு கித்தப்பாலை சேமிக்கும் குவளையால் தலையில் அடிக்கப்பட்டு மண்டை உடைந்து கண்டெடுக்கப்படுகிறாள். கொஞ்ச நேரத்தில் அந்த மிருகச்செயலை செய்தவன் கசியடி முனியன் என சந்தேகத்தின் பேரில் கைதாகிறான். ஆட்டுக்காரன் மீதிருந்த கோவத்தை அவனை பழிவாங்குவதற்காகவே இவ்வாறு செய்திருப்பதாக அவனுக்குள்ளாகவே அவன் பேசிக்கொள்கிறான். முதலில் கசியடி முனியன் மீது நமக்கு கோவம் வருகிறது. அந்த மிருகத்தை தண்டிக்க வேண்டும் என நினைக்கின்றோம். பாதிக்கப்பட்டவர் குரலாக மட்டும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தியவரின் குரலாகவும் நாவலாசிரியர் பேசுகிறார். மான்குட்டியின் நியாயம் அதற்கு என்றால், ஓநாயின் நியாயம் அதற்கு என்பதாக இன்னொரு தரப்பில் இருந்து, கசியடி முனியன் தரப்பில் இருந்து கதை சொல்லப்படுகிறது. இங்குதான் முத்துசாமி அசல் கலைஞராகிறார். இங்குதான் மண்புழுக்கள் நவீன இலக்கியத்தரத்தை அடைகிறது. அது கறுப்பு வெள்ளை, நல்லது கெட்டது எனும் நீதிகளை முன்வைத்து எழுதப்பட்ட இலக்கியமாக இல்லாமல் நம் முன் வாழ்வின் அந்தரங்கமான தருணங்களை சீண்டிவிடுகிறது. அதன் உச்சமாக  கொலைகாரனாக தெரிந்த கசியடி முனியன் கம்யூனிஸ்டுகளுடன் சேர்வதும் தோட்டத்தில் யார் கண்ணிலும் பட்டுவிடாத தெய்வத்திற்கு நிகராக பேசப்படும் ராஜ நாகமாக மாறுவதும் இந்நாவல் தொடும் உச்சங்களில் சில.

ஆட்டுக்காரனுக்கு காலில் காயம்பட்டு காலை எடுக்கும்படி ஆகிறது. காலை எடுத்தது ஒரே வரியில் சொல்லப்பட்டாலும் அதன் பிறகு ஆட்டுக்காரன் வாழ்வு ஆட்டம் காண்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஏற்கனவே மகள் இறந்ததற்கு கணவன் தான் காரணம் என பழி சுமத்திய மனைவி இப்போது கால் இன்றி கையாலாகாதவனாக ஆகிவிட்ட ஆட்டுக்காரனை மொத்தமாகவே ஒதுக்கு வார்த்தைகள் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறாள். ஆட்டுக்காரனின் இளைய மகள் மட்டுமே தந்தைக்கு உணவு தருவதும் பேசுவதுமாக இருக்கின்றாள். ஆட்டுக்காரன் தன் நிலை அறிந்து தினம் வேதனையில் தூக்கம் இன்றி தவிக்கின்றான். சமயங்களில் வாழ்வு நமக்கு துரோகம் செய்துவிடும். நம் மீதே நமக்கு வெறுப்பு வரும்படி சதி செய்துவிடும். நம்மை சுற்றியிருந்த நமக்கானவர்கள் என நம்பிக்கொண்டிருந்த எல்லாரையும் நமக்கு எதிராக திருப்பி விடும். வாழ்வின் மீது நம்பிக்கையற்ற ஒரு முடிவைத்தான் நாவலில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனாலும் இப்படியெல்லாம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என சொல்லிவிடுவதும் படைப்பாளியின் வேலை.ஒரு தோட்டப்பாட்டாளியின் எழுச்சியும் அவனது வாழ்வின் வீழ்ச்சியும்தான் இந்நாவல். இதன் ஊடே அசலான தோட்டத்தையும் அம்மக்களின் வாழ்வையும் கண்முன்னே எந்த பாசாங்கும் இன்றி காட்டியுள்ளார் நாவலாசிரியர்.

நிறைவாக இந்நாவல் நல்ல நாவல் என சொல்வதற்கு இந்நாவல் இவர் நல்லவர் என்றும் இவர் கெட்டவர் என்றும் தீர்பினை சொல்லாமல் இருப்பதுதான் காரணம்.மனிதர்களுடன் அவர்கள் வாழும் நிலத்தினையும் நம் கண்முன்னே காட்டி ஒரு வாழ்வை அதன் போக்கில் பாசாங்கு இன்றி சொல்கிறது.

அடுத்ததாக, இந்நாவலில் இருக்கும் வட்டார மொழி ஒவ்வொன்றும் தோட்டத்தை மீட்டுணர வைக்கிறது.மீண்டும் அவ்வாழ்விடம் நோக்கி நாம் செல்லவோ வாழவோ முடியாது ஆனால் அதன் பதிவுகளை அதன் வரலாற்றை நிதர்சனமாக மீண்டும் அடுத்த தலைமுறை தெரிந்துக்கொள்ளமுடியும்.

இறுதியாக சீ.முத்துசாமியின் இந்நாவல் சில இடங்களில் சொல்லும் யூ.பி தோட்டத்தில் பிறந்தவன் நான். இருபத்தியோரு வயதுவரை அங்கு வாழந்தவன். மண்புழுக்கள் நாவலில் சொல்லிய நிலமும் , மனிதர்களும் நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவந்தன. பால் மரங்கள் எல்லாம் அகற்றப்பட்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. பால் சீவ அதிகாலை சேவல் கூவி எழுந்தவர்கள் தற்போது அலாரம் அடிக்க எழுத்து தொழிற்சாலை செல்கிறார்கள். நான்கு சுவர் தடுப்பில் இயந்திரங்களுடன் இயந்திரமாக மாறிவிட்டார்கள்.கோவில் திருவிழாக்கள், ஒன்று கூடும் தோட்டப்பாட்டாளிகள்  இப்போது இல்லை, மஞ்சள் நீர் விளையாட்டில் யார் யார் மீதோ மஞ்சள் நீரை ஊற்றி விளையாடும் வெகுளித்தனம் இப்போது இல்லை, ஒன்றாக அமர்ந்து கதை பேசி இரவு உணவு சாப்பிட்ட உறவுகள் இல்லை.

எல்லார் வீடுகளிலும் வாசலைத்தாண்டி சாலை வரை வேலி போடப்பட்டு கட்டாயம் பூட்டு பூட்டப்பட்டது.காலை முதல் மாலை வரையும் இரவு வரையும் தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்கள் வேலை முடிந்ததும் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் வீடியோ கேசட்டுகளில் ஐக்கியமானார்கள். ஞாயிறு விடுமுறை நாளில் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்த்து கொஞ்சமாக புன்னகைக்க முடிந்தது.

என் வாழ்வில் ஏற்படும் அனுபவத்திற்கு ஏற்றார்போல வாழ்வு மீது எனக்கு  இருக்கும் நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது.என் வாழ்வின் அனுபவத்தின் ஒரு பகுதி வாசிப்பின் ஊடாகவும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. மண்புழுக்கள் நாவல்  மனிதர்கள் மீது ஈரம் கொண்ட என் மூதாதையரின் உயிரணுக்கள் என்னுள்ளும் இருப்பதை நினைவுப்படுத்துகிறது.

- தயாஜி



4 comments:

Unknown சொன்னது…

நாவலை இன்னும் படிக்கவில்லை. இருந்தும் தங்கள் அலசலை படிக்கும் பொழுது, நாவல் முழுக்க தோட்டத்து மணம் எதிர் பார்க்கலாம் போலும்!
நம் நாட்டில் பல தோட்டங்கள். பொதுவாக அனத்திலுமே ஏறக்குறைய ஒத்த வகையான வாழ்க்கை முறை தான். ஆயினும் நிச்சயம் கதாபாத்திரங்கள் வித்தியாம் இருக்கும். அவற்றை தறுவதில் ஆசிரியர் முத்துசாமி எப்படி வழங்கியுள்ளார் என்பதை அறியவாவது நாவலை படிக்க வேண்டும்.
உங்கள் இந்த கட்டுரை ஒரு டிரையல் பார்த்த மாதிரி.
நன்று. தொடர்ந்து பயணியுங்கள்.

Unknown சொன்னது…

நன்று

தயாஜி சொன்னது…

நன்றி...

தயாஜி சொன்னது…

நன்றி...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்