பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 07, 2020

பின் தொடரும் பிசாசு...



   மூன்று முறை குளித்தாள். இருந்தும் அந்த மையை அவளால் அழிக்க முடியவில்லை. நேற்று இரவு. இரண்டு மணி இருக்கும். அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. விழித்துக் கொண்டாள். அவளின் கட்டிலுக்கு அருகில் ஒரு கருப்பு உருவம். 

   அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் வாயில் இருந்து எச்சில் வழிகிறது. அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. கத்துகிறாள். அந்த அசைவுகளில் எந்த ஓசையும் எழவில்லை. 

   மெல்ல மெல்ல அது அவளருகில் வரத்தொடங்கியது. நல்ல வேளையாக அலாரம் அடித்தது. சட்டென அந்த கருப்பு உருவம் காணாமல் போகிறது.

   பயத்துடன் எழுந்தவள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். குளிக்கும் போதும் , ஆடை மாற்றும் போதும் அவள் தனியாக இல்லை என்பதை அவள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

   யாரோ அவளை சில நாட்களாகப் பின் தொடர்ந்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். யாரிடம் சொல்வதென தெரியவில்லை. சொல்ல நினைக்கும் போதெல்லாம் அவள் உடலில் ஏதோ ஒன்று பரவுகிறது.

   காலை மணி 6.45. மாணவர்கள் ஒவ்வொருவராக மினி பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். வேண்டுமென்றே அவள் கடைசியாக நின்றுக் கொண்டாள். அவள் நடக்க நடக்க அந்த கருப்பு உருவம் அவளைத் தொடர்கிறது. அவள் கழுத்தில் கை வைத்து வருடுகிறது. அதன் மூச்சுக் காற்று அவளின் காதுகளை உஷ்ணப்படுத்தியது. அவளின் கண்கள் கலங்கின. தன் உடல் முழுக்க கருப்பு மை படர்வதை உணர்ந்தாள். 

    அவளிடம் உள்ள மாற்றத்தை கவனித்த டிரைவர் அவளை அழைக்க, பயத்தில் அவளும் அங்கு சென்றாள். 

அந்த டிரைவர் அவள் மீது.....

"படார்...!!"

    அவளின் எதிர்ப்பாராத அறையில் அந்த டிரைவர் கலங்கிவிட்டான். அதுவரையில் அவளுக்காக மறைந்திருந்த அவளது சக தோழிகள் பலமாய் கைத்தட்டினார்கள்.

  பாதிக்கப்பட்ட மாணவிகள் செய்த புகாரில் அந்த டிரைவர் கைது செய்யப்பட்டான். 

   அன்றிலிருந்து எந்த கருப்பு உருவமும் அந்த மாணவிகளை பின் தொடர்வதில்லை.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்