முகத்தைத் தேடி
ஆமாம். அது முகம் தான். பார்த்தீர்களா? நீங்களும் பார்க்கவில்லையா. ஓ மை காட். காலையில் இருந்து தேடிக் கொண்டிருக்கிறேன். விசாரித்துக் கொண்டும் வருகிறேன். யாருமே பார்க்கவில்லையாம். உண்மையைத்தான் சொல்கிறார்களா இல்லை. அவர்களும் பயப்படுகின்றார்களா தெரியவில்லை.
ஏன் பயப்பட வேண்டும். நம் முகத்தை நம் விருப்பப்படி வைக்கும் உரிமை கூட இல்லையா நமக்கு. என் நெற்றியில் இவர்கள் செதுக்கி வைத்த எண் எனக்கு வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் அந்த எண் மீது பயமும் மரியாதையும் இருக்கலாம். எனக்கு இல்லை. இருக்கவும் போவதில்லை.
நன்றாகவே நினைவில் இருக்கிறது. எப்போதோ எனக்கு ஒரு பெயர் இருந்தது. உங்களுக்கும்தான். நாம் பெயரால்தான் அறியப்பட்டோம். எண்களால் அல்ல.
ஆட்சி என்ற பெயரிலும் அதிகாரம் இருக்கும் கைகளாலும் இவர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். இனிமேலும் விடக்கூடாது.
முதல் எண்ணிலிந்து இவர்கள் கொடுக்க ஆரம்பிக்கும் எதுவும் கடைசிவரை வருவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் நாசம் செய்கிறார்கள். நாம் எல்லாவற்றுக்காகவும் அடித்துக்கொண்டு சாகிறோம்.
இப்போதாவது கேளுங்கள். நம் முகத்தில் எண்கள் போடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நம் சுதந்திரத்தை பறிக்கிறார்கள். இன்னமும் நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்கள். ஏன் திரும்பத்திரும்ப எண்களை புதுப்பிப்பதிலேயே கவனம் கொள்கிறீர்கள்.
தயவு செய்து கேளுங்கள். ஓ... எண்கள் இல்லாத எந்த முகத்தின் பேச்சையும் கேட்கமாட்டீர்களா?
இது அவர்களின் சூழ்ச்சிதான். எப்படியோ என் முகத்தை திருடிவிட்டார்கள். அவர்களுக்கு தேவை எண்களின் வரிசைதான். அவர்களின் பலமும் நமது பலவீனமும் அவர்கள் செதுக்கும் எண்கள்தான்.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக