பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 26, 2026

வாசிப்பில்


////சுற்றி எதுவும் மாறாமல் வாழ்ந்து கொண்டிருப்பதென்பது ஒருவனுக்கு மிகுந்த வலியும் தாங்கமுடியாத துயரத்தையும் கொடுப்பதாகும். அது அவனது ஆன்மாவை முழுமையாகக் கொல்லாமல் இருக்கும் போது, அவன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ அவ்வளவிற்கு நீளும் அந்த வேதனையான சலிப்பு////
- நாவலிலிருந்து..

******************

நண்பரிடம் வேலை கேட்டு பேசியிருந்தேன். இன்று காலை சந்தித்து பேசலாம் கவலைப்பட வேண்டாம் என்றார்.

காலையுணவை விடவும் இப்போதைக்கு வேலை முக்கியம் என்பதால் சொன்ன நேரத்திற்கு முன்னமே சென்று காத்திருந்தேன். 

அலாரம் போல அழைத்து, நான் வந்துவிட்டேன் என்றேன். அவரும் இன்றா பார்ப்பதாக சொன்னோம் என கேட்டுவிட்டு அவரே ஆமாம் ஆமாம், இதோ வந்துவிடுகிறேன் என்றார்.

காலை உணவு விற்று முடிந்து மதிய உணவுகளையே விற்க தொடங்கிவிட்டார்கள். நண்பர் இன்னுமே வந்து கொண்டிருந்தார்.

காலி வயிற்றில் வழக்கம் போல ஒரு இஞ்சி டீயை ஆடர் கொடுத்தேன். எப்போதும் சில புத்தகங்கள் என்னுடன் இருக்கும் அதிலிருந்து ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 

கடைசிவரை நண்பர் வரவில்லை. வாசித்த புத்தகத்தின் கடைசி பக்கம்தான் வந்தது. அது தந்த கேள்விகளோடும் இன்று கற்ற பாடத்தோடும் வீட்டிற்கு நடக்கலானேன்.

இதனைப் பகிர்வதற்கு காரணம், வராத நண்பருக்காகவோ வேலை தேடுவதற்காகவோ அல்ல. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் ஒருவனால் புத்தகம் வாசிக்க முடிகிறதே என்பதற்காக.

ஆனால் சிலருக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இன்னும் சொல்லப்போனால் கேலியாக கூட இருக்கலாம்தான். நாள் சம்பளக்காரனுக்கும் மாத சம்பளக்காரனுக்கும் சம்பளமாக எதையும் வாங்காதவர்களுக்கும்
இருக்கும் வித்தியாசங்கள் எல்லோருக்குமா தெரிந்துவிடப் போகிறது.

"எப்படி புத்தகங்களை வாசிக்கறீங்க...?" என கேட்கும் நண்பர்களுக்கு "இதோ இப்படித்தான் புத்தகங்களோடு வாழ்ந்து கொண்டும் வாசித்து கொண்டும் இருக்கிறேன் என சொல்வதற்குத்தான் இந்தப் பகிர்வு.

******************
வாசிப்பில் 'இருபத்தாறு ஆண்களும் ஓர் இளம்பெண்ணும்'. எழுத்து மாக்சிம் கார்க்கி. தமிழாக்கம் ஜான்ஸி ராணி. வெளியீடு தமிழ்வெளி.

இதிகாசம் தொடங்கி இன்றுவரை பெண்களைச் சர்வ சாதாரணமாக பணயம் வைத்து விடுகின்றோம் எல்லா பழியையும் பெண்கள் மீதே செலுத்தியும் விடுகின்றோம், என்கிற சிந்தனையோடு இந்த நாவலை வாசித்து முடித்தேன்.

இந்த வாழ்வில் இன்னொருவர் நம்மை பணயம் வைத்து அவர் விருப்பப்படி விளையாடுவதைவிட நம்மை நாமே பணயம் வைத்து விளையாடும் இந்த வாழ்வின் சூதாட்டத்தில் வெற்றியோ தோல்வியோ எந்த நிர்பந்தமும் இல்லாமல் நாமே விளையாடினோம் என்கிற சிறு திருப்தி கிடைத்தாலும் போதும் என்றுதான் தோன்றுகிறது.

குறைந்தபட்சம் நம்மிடம் பணயம் வைக்க நாமாவது இருக்கின்றோம். ஒரு முறை விளையாடிதான் பார்க்கலாமே....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்