- இளம் எழுத்தாளர்களின் கொண்டாட்டம் -
-இளம் எழுத்தாளர்களின் கொண்டாட்டம்-
ஐபாட்டி அமைப்பின் புத்தக வெளியீட்டு விழா & மரபு நாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்கள்.
இவ்விழா ஜூன் ஆறாம் நாள் பிரிக்பீல்ட்ஸ் கந்தையா மண்டபத்தில் நடைபெற்றது. மூன்று முக்கிய அம்சங்கங்களை இவ்விழா கொண்டிருந்தது. முதலாவதாக சொற்கற்கள் போட்டி. அடுத்ததாக மண் பானை உருவாக்கம். மூன்றாவதாக இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீடு. நான் மூன்றாவது அங்கத்திற்கு சிறப்பு விழுந்தினராக சென்றிருந்தேன்.
காலை எட்டு மணி தொடங்கி மதியம் 2மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை சங்கீதா சந்திரகுமாரன் இந்நிகழ்ச்சியின் இயக்குனராகவும், திரு.மனோஷ் இராமா (ஐபாட்டி இயக்குனர்) துணை இயக்குனராகவும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களோடு ஐபாட்டி அமைப்பினரும் நண்பர்களும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு பலமூட்டினார்கள்.
மலேசியாவில் தமிழில் முதன் முறையாக தேசிய அளவிலான ‘சொற்கற்கள்’ போட்டியை இவர்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஐப்பாட்டி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களில் எட்டு இடைநிலைப்பள்ளி மாணவர்களின் கதை புத்தகங்கள் வெளியீடு கண்டன.
அந்த எட்டு மாணவர்களின் கதை புத்தகங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து நற்சான்றிதழ்களை வழங்கினேன். பின்னர் சிறப்புரையாற்றினேன்.
எட்டு கதை புத்தகங்களையும் முன்னமே வாசித்திருந்ததால் என்னுடைய உரையில் அந்த எட்டு கதைகளிலும் இருக்கக்கூடிய முக்கியமானவற்றை பகிர்ந்து கொண்டதோடு இளம் எழுத்தாளர்களுக்கு இம்மாதிரி அமைப்புகள் கொடுக்கும் உற்சாகத்தையும் பெற்றோர்களிடம் இருந்து ஆதரவும் அவசியம் என்பதையும் பேசினேன்.
ஐபாட்டி அமைப்பினர் முதன் முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்த ‘இளம் எழுத்தாளர் புத்தக வெளியீட்டு விழா & மரபு நாள்’ கொண்டாட்டத்தில் நானுமே ஓர் எழுத்தாளராக கலந்து கொண்டதிலும் இளம் எழுத்தாளர்களைச் சந்தித்து பேசியதிலும் மகிழ்ச்சி. இம்மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒரு விழா போல கொண்டாடப்படவேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.
இளம் தலைமுறையினரை வாசிக்க வைக்கவும் எழுத வைக்கவும் நம்மால் இயன்றதை செய்வது நமது கடமைகளின் ஒன்றுதானே.
எட்டு கதைகளைக் குறித்து சொல்லாமல் போனால் எப்படி?
1. நான் உயர்ந்தவன், என்ற கதையை லாவண்யா சதிஷ் குமார் எழுதியிருந்தார். எப்படியாவது முன்னேறி தன் குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் மாணவனின் கதை. கல்வியும் தொழிலும் நிச்சயம் உதவும் என சொல்லும் கதை.
2. பெண்களின் வெற்றி, என்ற கதையை மோனிகா ரவி எழுதியிருந்தார். வீனை வாசிக்க ஆசைப்படும் நாயகி நண்பர்களால் கேலி செய்யப்படுகின்றாள். மனம் உடைந்த மாணவி தனது விடாமுயற்சியால் எப்படி சாதனை பெண்ணாக மாறுகின்றாள் என்பதுதான் கதை.
3. ரோபோட் உலகம், என்ற கதையை மீனாள் முத்தையா எழுதியிருந்தார். நான் இரசித்த கதைகளில் இதுவும் ஒன்று. நமக்காக வேலை செய்து கொண்டிருந்த இயந்திரங்கள் ஒரு மனிதர்களை வேலை வாங்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற கதை மாணவனின் பார்வையில் இருந்து சொல்லப்பட்டிருக்கும்.
4. இருட்டில் ஒரு நட்சத்திரம், யாஷினி ஏண் டிக்சன் என்பவர் எழுதியிருந்தார். விரக்தியில் இருக்கும் மின்மினி மூச்சி தவளையைக் காப்பாற்றி தனது விரக்தியை விரட்டும் கதை.
5. ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கைக் கதை, என்ற கதையை பரமேஸ்வரி மோகன் எழுதியிருந்தார். தந்தையின் மரணத்தில் மனம் சோர்ந்த மாணவி தனது ஆசிரியை மூலமும் பாட்டி மூலமும் தேர்வில் வெற்றி பெறும் கதை.
6. சிங்கமும் தந்திர நரியும், என்ற கதையை நர்மதா லிங்கமுத்து எழுதியிருந்தான். சிறு வயதில் நாம் வாசித்த சிங்கத்தை ஏமாற்று காட்டுக்கு இராஜாவாக மாறும் நரியின் கதைதான். இதன் சுவாரஸ்யமே அந்தச் சிங்கத்திற்கு ஒரு தம்பி இருப்பதும் அதனால் அடுத்து நடப்பதும்தான்.
7. புகழனின் இணைப்பிரபஞ்சம், என்ற கதையை மோவ்பானி ஶ்ரீ சௌமங்கலி என்பவர் எழுதியிருந்தார். என்னை ஆச்சர்யப்படுத்திய கதை இது. பூமியில் இருந்து இன்னொரு பிரபஞ்சத்தில் சிக்கி கொள்ளும் மாணவனின் கதை. சில பக்கங்கள்தான் என்றாலும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும். இதனையே வளர்தெடுத்து சிறுகதையாகவும் மாற்றலாம்.
8. மர்மமான இரவு, என்ற கதையை யாளினி ஏண்ணா டிக்சன் எழுதியிருந்தார். இதுவும் எனக்கு பிடித்தமான கதைதான். இக்கதை நமக்கு பழக்கமான கதைதான். இறந்தவரே வீட்டுக்கு வந்து தான் இறந்த செய்தியைச் சொல்கிறார். அதன் பின் நடந்தது என்ன என்பதை பயம் காட்டும்படி எழுதியிருப்பார்.
இளம் எழுத்தாளர்கள் குறிப்பாக இவர்கள் அனைவருமே மாணவர்கள் என்பதால் அவர்களின் இந்த முதல் முயற்சிக்கு உற்சாகம் கொடுக்கும்படியும் அவர்களுள் இருக்கும் எழுத்தாளர்களை அவர்கள் தீவிரமாக தேட வேண்டும் என்பதற்காகவும் இவ்வொரு கதையில் இருந்து விமர்சனமாக அள்ளாமல் என் வாசிப்பை மட்டுமே எழுதியுள்ளேன்.
இந்த முதல் எழுத்து அவர்களில் யார்யாரின் எழுத்து வாழ்விற்கு பிள்ளையார் சுழியாக அமைந்திருக்கின்றது என்பதை நாமும் காலத்தோடு இணைந்து பொறுமையாய்க் காத்திருந்து பார்க்கலாம்.
ஐபாட்டி அமைப்பினர்க்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் இதுவரை வாசித்த அனைவருக்குமான எனது அன்பு.
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக