பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 7


‘வரலாற்றை மீட்டுணர்தல்’





கடந்த மாதம் வல்லினத்தின் மூன்றாம் ஆண்டு விழா ‘வரலாற்றை மீட்டுணர்தல்’ என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. முதல் வல்லினக் கலை இலக்கிய விழாவில் ஓவியம் மற்றும் நிழல் படக் கண்காட்சி இடம்பெற்றது. இரண்டாம் விழாவில் மலேசிய சிங்கை இலக்கியவாதிகளை இளையவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் புத்தகம் தொகுத்து வெளியிடப்பட்டது. மூன்றாம் ஆண்டில் இந்த ‘வரலாற்றை மீட்டுணர்தல்’. இதில் எழுத்தாளர் அ. ரெங்கசாமி, எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி மற்றும் மலேசிய தமிழர்களின் இக்கட்டான நிலை என்ற நூலின் ஆசிரியர் ஜானகி ராமன் ஆகிய மூவரும் முக்கிய பிரமுகர்களாக அழைக்கப்பட்டு அவர்களின் வரலாற்றுப் பார்வை குறித்தும் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ளும் களமாக அமைந்தது.

இதைச் சொல்ல காரணம் உண்டு. வல்லினம் போன்ற இளம் படைப்பாளிகளால் நடத்தப்படும் இதழ் சார்ந்தவர்கள் மரபுகளைப் படிப்பதில்லை மூத்த இலக்கியவாதிகளையும் மதிப்பதில்லை எனப் பலரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். குற்றம் சொல்பவர் யாரும் இதில் வந்து கலந்துகொள்ளவில்லை. வரலாற்று பிரக்ஞை ஏதுமின்றி ‘மரபும் மரபு சார்ந்த உறவும்’ என வேறு வேலையாகச் சென்றிருக்கலாம். (அப்படி சொன்னவர்களின் ஒருவரை அந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தது என் சாமர்த்தியம்...)

மேற்சொன்னதில் என் மீதும் கோவம் கூட வரலாம்...? எனக்கும் கோவம் வந்தது...! வாய்க்கிழிய பேசி தமிழ்தான் தாய் என சொன்னவர்கள் கண்ணில் மதிக்கத்தக தமிழர் வரலாற்றினைப் பதிவு செய்திருக்கும் அ. ரெங்கசாமியும் முத்தம்மாள் பழனிசாமியும் தெரியாததை வேறு எப்படி சொல்வது...?

இந்நிகழ்வின் நோக்கம் குறித்து வல்லின ஆசிரியர் ம. நவீன் பேசியதை வாய்ப்பிருப்பின் விடியோவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு நிகழ்வையும்; சந்திப்புகளையும் பதிவு செய்யும் சிவா பெரியண்ணனின் செயல் நிச்சயம் கவனிக்கத்தக்கது.

“அப்போ அப்படி ஒருத்தர் இருந்தாரு தெரியுமா...?”

இப்படிச் சில ‘பெரிசுகள்’ பேசுவதை கேட்டிருக்கின்றீர்கள்தானே. இது போன்ற பதிவுகளால் இளம் தலைமுறையினருக்குச் சம்பந்தப்பட்டவரின் குரல் முதல் கொண்டு அவரை அறிமுகம் செய்ய இந்தப் பதிவுகள் அவசியம். இதனை செய்பவர்களும் இளையத் தலைமுறைகள்தான்.

இன்னும் சொல்லப்போனால் நாங்கள் (இளம் தலைமுறை) மு.வ-வைப் படித்திருக்கின்றோம், புதுமைப் பித்தனைப் படித்திருக்கின்றோம், சுஜாதாவைப் படிக்கின்றோம், எஸ். ரா-வை படிக்கின்றோம், சாரு-வை படிக்கின்றோம். ஆனால் நீங்கள் ஏன் மு.வ-வைத் தாண்டி வரமாட்டேன் என்கின்றீர்கள் எனக் கேட்டால் அவ்வளவுதான். நமக்கு தமிழ் துரோகி என பட்டம் கொடுத்திடுவார்கள்.

வல்லின நிகழ்வில் அ. ரெங்கசாமி, தான் எழுத்தில் பிற மொழி சொற்கள் கலப்பில்லாமல்தான் தான் எழுதிவருவதாகவும் எழுதப் போவதாகவும் சொன்னதற்கு கூட்டத்தில் ஒருவரிடம் இருந்து பலத்த கைத்தட்டல் வந்தது. இது மொழி பற்றா... மொழி வெறியா... என புரிய எனக்கு சில காலம் ஆகலாம். ஆனால் ஏன் இவர் மலேசிய இலக்கியவாதிகளால் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை..? கைத் தட்டியவரிடம் இதனைக் கேட்கலாம்தாம். பதில் வராது என தெரிந்த பிறகும் கேட்பது எனக்கு ஒரு மாதிரியாக இருக்குமே...

அதே கூட்டத்தில் ஒருவர் வந்திருந்தார். வார இதழ் ஒன்றிற்கு தொடர் எழுதிவருகின்றார். அதே இதழில் தொடர்ந்து என் படைப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. மலேசிய இலக்கியவாதிகளில் மிக முக்கியமானவர் அவர். அவருடன் எனக்கு ஏற்பட்ட உரையாடல்;

“அப்பறம்; உங்க படைப்புகள் தொடர்ந்து வந்துகிட்டு இருக்கே...?”

“ஆமாம்... (சிரித்தேன்)”

“என்னோட தொடர் வருதே படிகிறிங்கதானே...?”

“படிச்சிருக்கேன்... சில இதழ்களை தவற விட்டுட்டேன்...”

“ஐ... படிச்சா மட்டும் போதுமா... உங்க கருத்தை எழுதி அனுப்ப வேண்டாமா...?”

“ம்... (சிரித்தேன் வேற என்ன செய்ய)”

நல்ல வேலையாக நவீன் என்னை அழைக்க, தப்பித்தேன். என்னையும் மதித்து அவரின் தொடர் குறித்து கருத்து சொல்ல சொன்னது மனதுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்னமும் அடுத்தவர் தன் படைப்பிற்கு கருத்து சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம். அதிலும் நீங்கள் எந்த இளைய படைப்பாளிக்கும் கருத்தோ ஊக்கமோ தெரிவிக்காத போது...?

எனது கோவம் அவசியமா என என்னை நானே கேட்டேன். என்னிடம் கேட்டால் மூத்த எழுத்தாளர்கள் பெயரில் பத்து பெயரையாவது சொல்ல முடியும், அவர் போன்றோரால் ஐந்து இளம் படைப்பாளர்களின் பெயரையாது சொல்ல முடியுமா என யோசித்தேன். என் கோவம் அவசியம்தான் என புரிந்தது.

நன்றி
இதழ் 31
ஜுலை 2011

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்