பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 1

   (ம.நவினை ஆசிரியராகக் கொண்ட 'வல்லினம்' அகப்பக்கத்தில் வந்துக் கோண்டிருக்கும் எனது தொடர் - பயணிப்பவனின் பக்கம் )


பயணிப்பவனின் பக்கம் 1


         யார் நான்...? தோட்டப்புற இளைஞன். குடும்பத்தில் இரண்டாவது மகன். ஒரு புறம் தம்பி மறுபுறம் அண்ணன். நண்பன். இனிக்க இனிக்க பேசி பெண்களை கவர்கின்றவன். செய்தத் தவறுகளையும் செய்துக் கொண்டிருக்கும் தப்புகளையும் நாசுக்காக மறைப்பவன். நம்பிப் பழகினாலும் சுயநலம் கொண்டவன். சிரித்த முகமாய் அனல் விடுபவன். கையில் கிடைத்ததை தூக்கி வீசும் கோபம் கொண்டவன். சொந்த அண்ணனைக் குத்த கத்தி எடுத்தவன். புத்தகங்களை நேசிப்பவன். பிடித்த வார்த்தைகளுக்கு அடிக்கோடிடுபவன். பிடிக்காத நபர்களுக்கு புள்ளி வைப்பவன். வானொலி அறிவிப்பாளன். பலகுரல் கலைஞன். ஏமாற்றுகாரன். சிடுமூஞ்சி. அப்பாவி. அடப்பாவி. சுஜாதா பிரியன். இந்திரா சௌந்தரராஜனின் வாசகன். Dr. ஜெயபாரதியில் ரசிகன். ஆவிகள் குறித்து வெட்டியாய் தகவல் சேகரிப்பவன். சில கடவுள்களுக்கு உறவானவன் சில கடவுள்களுக்கு முரணானவன். வளரும் எழுத்தாளன். திமிர் பிடித்தவன்.

       இப்படி பலராலும் பலவாறாகப் பார்க்கப்படுபவன் தான் இந்த ‘நான்’. பார்வை மீதும் தவறில்லை ஏனெனில் அது அவர்களின் பார்வைக்கு; நான் பிறருக்குத் தெரிவதை பொருத்தது. தெரிவது நான் தான் என்பதால் அவர்கள் சொல்வதில் 50 சதவிதம் உண்மை இருக்கின்றது. மீதி 50 சதவிதம் எங்கே என்ற கேள்வி எனக்குள் தொடங்கி பல நாட்கள் ஆகின்றது. அந்த கேள்விக்கான பதில்தான் ‘பயணம்’. நான் பேசும் புத்தகங்களும் என்னுடனான சிலரின் சந்திப்புகளும்தான் இந்தப் பயணத்திற்கான பயணச்சீட்டு.

      இங்குதான் செல்கின்றோம் என்ற தீர்கமான முடிவுடன் செல்பவர்கள் ஒரு வகை. இது நம் இலக்கில்லை என்று தெரிந்தும் செல்வது மறுவகை. இது நமக்கான இலக்காக இருக்குமோ என்று சந்தர்பங்களாலும் சந்தேகங்களாலும் செல்வது தனிவகை. மேற்சொன்ன எனது மீதி 50 சதவிதம் ‘நான்’ ஒருவேளை எழுத்தில் இருக்கலாம் என்ற தனிவகைப் பயணத்தைச் சார்ந்தது.

     ‘முத்து’ திரைப்படத்தில் முக்கிய ஒரு காட்சி வரும். ரங்கநாயகியை அரண்மனைக்கு அழைத்து வருகின்றார் முத்து. தன் காதலை ஏற்றுக்கொண்டுதான் அவள் வருகின்றாள் என நினைக்கின்றார் முத்துவின் நண்பன். ரங்கநாயகி வாசலை நோக்கிச் செல்கின்றாள். அவளுக்கு பின்னால்; வலது புறம் முத்துவும் இடது புறம் முத்துவின் நண்பனும் தெரிகின்றார்கள். அதே நேரத்தில் எங்கோ ஒரு தூரத்தில் இருக்கும் அந்த அரண்மனைக்கு உரிமையாளரான தற்போதைய சாமியாருக்கு சிரிப்பு வருகின்றது. இடைவேளை அங்குதான் ஆரம்பிக்கின்றது.

       முத்துவுக்கு ஒரு காரணம்; முத்துவின் நண்பனுக்கு ஒரு காரணம். அதை தொடர்ந்து வரும் காட்சிகளின் தங்களின் இருவேறு காரணங்களுக்காக இருவரும் செயல்படுகின்றனர். இரு செயல்களுக்கும் ஒரு காரணம்தான் இருக்கின்றது; ரங்கநாயகி. அந்த இரு காரணங்களில் ஒன்றுதான் நிறைவேறும். அதைக் கண்டு சிரிக்கும் அந்த மூன்றாம் நபர் ஆதி அந்தமில்லாத ஒன்றாக இருக்கட்டும். வல்லினத்திற்காக வந்திருக்கும் இந்த ‘பயணிப்பவனின் பக்கத்திற்கும்’ அப்படி ஏதாவது இருக்கலாம்.

      சமீபத்தில் பழைய புத்தக்கடைக்குச் சென்றிருந்தேன். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படிருக்கும் அடுக்குகளில் பல புத்தகங்கள் நிஜம் அற்ற நிறத்தில் இருந்தன. யோசிக்கையில் இதுதான் என முதல் அனுபவமாக இருக்கும். பழைய புத்தகங்களின் வாசனையில் இருக்கும் உன்னதத்தன்மையை வார்த்தையில் விளக்குவதை விட மூக்கால் தெரிந்து கொள்வதே சிறப்பு.

       ஒவ்வொரு புத்தக்கத்தையும் ரசித்தவாறு நகர்த்திக் கொண்டிருந்தேன். எம். எஸ். உதயமூர்த்தியின் புத்தகங்கள் குழந்தை வளர்ப்பு, கைத்தொழில், சமயக் கேள்வி பதிகள் குறித்த பல புத்தகங்கள் கைப்படுவார் யாருமின்றி பரிதாப நிலையில் இருந்தன. கரத்தில் பட்டால்தானே கருத்தில் பதியும். இன்றைய மலேசியத் தமிழர்கள் நிலைக்கு இதுவும் காரணம் என்றால் மறுப்பார்; நிச்சயம் இருப்பார். என் தந்தையி‎ன் அலமாரியிலும் பல புத்தக்கடைகளிலும் பார்த்துப் பழகி கவிஞர் ஒருவரின் புத்தகத்தை அந்த பழைய புத்தக இருப்பிடத்தில் பார்த்தேன்.

      இன்று பலரின் மறதிக்கு ஆளான கவிஞர் மூ. மேத்தாவின் ‘அவர்கள் வருகிறார்கள்’. மங்கிய ஏடுகள் கொண்ட புத்தகத்தை எடுத்துக் கடைக்காரரிடம் கொடுத்தேன். என்னையும் புத்தகத்தையும் பார்த்தக் கடைக்காரர் “ஒரு வெள்ளி கொடுங்க தம்பி போதும்” என்றார். ஐந்து வெள்ளி கொடுத்து மீதம் வேண்டாம் என்றேன். அவர் என்னை என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நானும் கேட்கவில்லை. அதனுடன் வார மாத இதழ்கள் சிலவற்றை வாங்கினேன்.

      அலுவலகம் வந்ததும்; என்னிடமிருந்த ‘அவர்கள் வருகிறார்கள்’ புத்தகத்தை தோழி ஒருத்தி இரவல் கேட்டாள். என்னை நான் வாங்கியிருக்கும் மற்ற புத்தகங்களை படிக்கும்படி கட்டளையிட்டாள். நான் படிக்காத புத்தகங்களை யாருக்கும் கொடுக்க மாட்டேன். அன்று அவளுக்கு நல்ல நேரம். எனக்கு...?

      இரண்டு நாள்கள் கழித்து, புத்தகத்தை திரும்ப கொடுத்தாள். வழக்கம் போல் அவளிடமும் அந்த புத்தகத்தில் பிடித்தது குறித்தும் அவள் ரசித்தது குறித்தும் விசாரித்தேன். கேட்காமலிருந்திருக்கலாம். மிகவும் நன்றாக ரசிக்கும்படி இருந்தது; அதிலும் சமுகப்பிரச்சனையை கையில் எடுத்திருப்பது நன்று என்றாள். சின்ன இடைவேளை விட்டு, ஆனால் ஒரு கவிதைதான் புரியவில்லை என்றாள். நானும் எல்லாம் தெரிந்த நினைவில் அந்தக் கவிதையைப் படிக்கச் சொன்னேன். தயாராக திறந்து வைத்திருந்த கவிதையைப் படிக்கத் தொடங்கினாள்.

நெடுஞ்சாண் கிடையாய்
நிலத்தில் விழுந்த
பக்தனின் முன்னே
பரமன் தோன்றினான்
பக்தன் –
என் மனதில் வந்து
இரு... இரு....
என்று
கதறித் துடித்துக்
கண்ணீர் வடித்தான்
பரமன் உடனே
பறந்தான்;
பக்தனின் செருப்புகள்
கிடந்த வாயிற்
படிக்கட்டை நோக்கி.....

     கவிதையை முடித்தாள். எனக்கும் பிடிபடவில்லை. நாளை சொல்வதாக சமாளித்தேன். தப்பித்தேன்.

     ‘என் மனதில் வந்து இரு என்கிறான் பக்தன்; கடவுளோ காலணி இருக்கும் இடத்தை நோக்கி செல்கிறார்’. தூக்கத்துக்கு பதில் இந்த வார்த்தைகள்தான் வந்துவந்து போனது. அதைத் தொடர்ந்து ஏதேதோ எண்ணங்களும் சந்திப்புகளும் வரத்தொடங்கின. தூக்கம் மட்டும் என் விலாசத்தை மறந்துவிட்டது.

     காலையில் என்னை வழி மறைத்து விளக்கம் கேட்டாள் தோழி. கவிதையை மீண்டும் சொல்லச் சொன்னேன். சொன்னாள். சட்டென மூளையில் ‘டிங்’ என்ற சத்தம். பதில் சொல்லத் தொடங்கினேன்.

      ‘கழட்டி வைத்த செருப்பு நினைவாக இருக்கின்றான் பக்தன். நினைவு இருக்கும் இடத்தில்தானே மனதும் இருக்கும். கடவுளைக் கண்ட பின்னும் தன் செருப்பின் மீது நினைவை வைத்திருக்கும் பக்தனின் மனதை நாடவேண்டியது கடவுளின் வேலைதானே. இப்படித்தான் நம்மில் பலர் இருக்கின்றார்கள். முன்னுக்கும் பின்னுக்கும் தொடர்பில்லாமல்... எனச் சொல்லி முடித்தேன்.

அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளால் மட்டுமா....?

இதழ் 25
ஜனவரி 2011

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்