- நண்பர்களுக்கு இன்று விடுமுறை -
முதல் நாள் வேலை அதிகமாக இருந்ததால், மீண்டும் இடுப்பில் வலி வந்துவிட்டது. இரவு உறக்கமின்றி ரொம்பவும் சிரமப்பட வேண்டியதாய்ப் போயிற்று. பொருட்களை டெலிவரி செய்யும் போது சில சமயங்களில் அந்தந்தப் பொருட்களை நாமே தூக்கி கொண்டு படியேறும்படியும் குறிப்பிட இடம் வரை கையில் தூக்கிக் கொண்டே நடக்கும் படியும் ஆகிவிடும்.
பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இது தெரியும். பொருட்களை இப்படி தூக்கி வரும்படி இருந்தாலும் மாடிக்கு கொண்டு வரவேண்டும் என்பதாக இருந்தாலும் கூடுதலாக பணம் செலுத்துவார்கள். ஏறக்குறை இரண்டு வெள்ளியில் இருந்து மூன்று வெள்ளி வரை கூடுதலாக நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சில வாடிக்கையாளர்களுக்கு இது தெரிந்திருந்தாலும் அவர்களின் ஒரு வெள்ளி இரண்டு வெள்ளியை மிச்சப்படுத்தி டெலிவரியில் எதையும் குறிப்பிட மாட்டார்கள். பொருட்களை அவர்கள் தரும் முகவரிக்கு கொண்டு சென்றதும்தான் நம்மிடம் பொருளை தூக்கி கொண்டு வரும் வேலையையோ படியேறுவதையோ சொல்லுவார்கள்.
அப்படி சொல்லும் போது, அதற்கு அவர்கள் டெலிவரி அப்லிகேஷனில் சொல்லியிருக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் அப்படி கொண்டு வரமுடியும். ஏனெனில் இவர்கள் கொடுக்கும் கட்டணத்தில் இப்படி பொருட்களை தூக்கி கொண்டு மாடிக்கு ஏறி வருவதெல்லாம் சேர்க்கவில்லை என குறிப்பிடுவோம்.
சிலர் தங்களின் தவறுகளை புரிந்து கொள்வார்கள் இன்னும் சிலர் அப்போது கையில் இரண்டு வெள்ளியைத் திணிப்பார்கள். இன்னும் இலர் இருக்கின்றார்கள், தங்களின் தவறை மறைக்கவோ தங்களின் சாமார்த்தியத்தை காட்டுவதாகவோ நாங்கள் வழங்கிய சேவைக்கு கொடுக்க வேண்டிய 5 ஸ்டார்களுக்கு பதிலாக ஒரு ஸ்டாரையும் கொடுத்து எங்களின் வேலை சரியாக இல்லை என்கிற குறையையும் அப்லிகேஷனின் எழுதிவிடுவார்கள். அப்படி எழுதிவிட்டால் எங்களுக்கு அடுத்தடுத்த வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் எங்களுக்கு பாதிநாள் வரை வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் அள்ளாடுவோம்.
எதற்கு இந்த வம்பு என்று, சொன்னதை செய்துவிடுவோம். வேறேன்ன செய்ய முடியும் எங்களால். வாடிக்கையாளர்களாக நீங்கள் வரும்போது உங்களால் முடிந்த எதையாவது எங்களுக்கு செய்யுங்கள்.
நேற்றைய டெலிவரியிலும் அப்படியான அனுபவம் எனக்கு கிடைத்தது. அதுபற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்.
சில பாரமான பெட்டிகளை டெலிவரி செய்யும் வேலை வந்தது. தூக்கியும் இறக்கியும் செய்த வேலை போதாதென்று மழையும் வந்திருந்தது. ஈரமான தரையில் பாரமான பெட்டியுடன் நடக்கும் போது வலது கால் முன்னே இழுத்து தடுமாற்றம் ஏற்பட்டது. சட்டென என்னையறியாமலேயே என் உடல் இயந்திரத்தனாம பாதுகாப்பு கவசமாக ஏதேதோ அசைவுகளைச் செய்தது. என்னைப் பாதுகாப்பதாக நினைத்து ஏற்கனவே கொஞ்சமாய் இருந்த இடுப்பு வலியை இரட்டிப்பாக்கிவிட்டது.
வலி தாங்காமல் வீட்டிற்கு செல்லலாம் என்றால் முடியாது. இன்றைய சம்பாத்தியம் போதவில்லை. குறைந்தது மூன்று டெலிவரிகளையாவது செய்ய வேண்டும் அப்போதுதான் பட்ஜெட் போட்டபடி சமாளிக்க முடியும். அதோடு இரண்டு நாளில் அடகு கடை நகைக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.
உடனே ஒரு ஆடர் வந்தது. காருக்கு தேவையான உதிரி பாகங்களைக் கொண்டு போக வேண்டும். 21 கிலோமீட்டர்தான் ஆனால் மழையாக இருப்பதால் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் வரை காட்டியது கைப்பேசி. அது டோல் இருக்கும் பாதை. இரண்டு வெள்ளி கட்ட வேண்டும். கஸ்டமரை அழைத்து டோல் குறித்து பேசினேன். சரி என்றார்கள். பொருளை எடுத்துக் கொண்டு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்தேன்.
தமிழரின் கார் பழுது பார்க்கும் கடை. நடுத்தர வயதில் ஒருவர் காரை பழுது பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பொருட்களைக் கொடுத்தேன். “வழியில் ரொம்ப மழையா என்றார்..?” ஆமாம் என்று டெலிவரி கட்டணத்தில் டோல் பணத்தையும் சேர்த்து கொள்ளும்படியும் சொன்னேன். ஆம் என்றவர், தூரத்தில் இருக்கும் மகனை அழைத்து எனக்கான பணத்தைக் கொடுக்கச் சொன்னார்.
அங்கிருந்த மகன் வந்தார். நேரடியாக என் வங்கியில் பணம் செலுத்துவதாகச் சொல்லி எவ்வளவு என்றார். நானும் அந்த நடுத்தர வயதுக்காரரிடம் சொன்னது போலவே கட்டணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு வெள்ளியையும் கேட்டேன்.
அவரின் முகம் மாறிவிட்டது. “என்னது! என்ன ரெண்டு வெள்ளி கூடுதலா கேட்கறீங்க என் போன்ல அப்படி காட்டலயே..?”
“அதில் இருக்காது…” என சொல்ல வாயெடுத்தேன்.
“அப்லிகேஷன்ல இல்லாம காசு கேட்டா எப்படி கொடுக்கறது. இதுக்கும் சேர்த்துதானே காசு கொடுக்கறோம்.. கூட கேட்ட எப்படி… எல்லாம் புதுசாதான் இருக்கு….”
“அதில் இருக்காது… ஆனா ‘டோல்’ இருந்தா கஷ்டமர்கிட்ட நாம கேட்கலாம். அந்த அண்ணகிட்ட கேட்டுட்டுதான் அந்தப் பாதையில வந்தேன்” என்றேன்.
“அதுக்கு….”
“டொல் காசு கொடுக்கறதும் கொடுக்காததும் கஸ்டமரோட விருப்பம். ஆனால் பொருளை எடுக்கும் போதே நாங்க கஸ்டமரை கூப்டு கேட்போம். டோல் காசு கொடுக்கறதா சொன்னாலும் இல்லைன்னு சொன்னாலும் அதுக்கு ஏத்த மாதிரி பாதையில் வருவோம். அந்த அண்ணகிட்ட கேட்டேன் அவர் கொடுக்கறேன்னு சொன்னாரு அதான் அந்தப் பாதையில் வந்தேன்…”
எங்களது உரையாடல் உள்ளே இருப்பவருக்கு கேட்டிருக்க வேண்டும். “டேய்… நான் தான் கொடுக்கறேன்னு சொன்னேன்.. காசு கொடுத்து அவரை அனுப்பு.. மழையா இருக்குல்ல.. அவரு மத்த இடத்துக்கு போகனும்ல….” என்றார்.
எதிரில் இருந்தவருக்கு கோவம் வந்திருக்க வேண்டும். வங்கியில் பணம் செலுத்துவதாக சொன்னவர். அவரது பாக்கெட்டில் இருந்து டெலிவரிக்கான பணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு வெள்ளியையும் கொடுத்துவிட்டு ஏதோ பேசியபடி அவர் வந்த இடத்துக்கே சென்றார்.
எனக்கு அந்த இரண்டு வெள்ளியைப் பார்க்கவும் அவமானமாக இருந்தது. டெலிவரி பணத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டு, அந்த இரண்டு வெள்ளியை கையில் வைத்து இறுக்கமாக மூடியபடி வெளியேறினேன்.
அவர்களின் கடை வாசலில் மதுரைவீரன் சாமி வைத்திருந்தார்கள். சின்னதாய்ச் சிவப்பு வண்ணத்தில் கூடாரம் போல அமைத்திருந்தார்கள். கையில் இருந்து அந்த இரண்டு வெள்ளியை மதுரை வீரனிடம் கொடுத்துவிட்டு காருக்கு சென்றேன். ஏனோ கைகள் நடுங்கியபடி இருந்தது.
வீட்டுக்கு போகலாமா என்ற் எண்ணமே எழுந்தது. ஆனாலும் இன்னும் இரண்டு டெலிவரிகளைப் பார்க்க வேண்டுமே.
அடுத்ததாய் ஒரு டெலிவரி கிடைத்தது. மோட்டார் வண்டியின் சக்கரத்தை கொண்டு போக வேண்டும். கடைக்கு சென்றேன். கடையில் ஒருவர் கையில் வண்டி சக்கரத்துடன் காத்திருந்தார். அதனை வண்டியில் ஏற்றிவிட்டு கட்டணத்தை எனது வங்கியில் செலுத்துவதாகச் சொல்லி வங்கி எண்ணின் கியூ.ஆரைக் கேட்டார்.
அதனைக் கொடுப்பதற்கு முன் பொருளை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தை கைப்பேசியில் பார்த்தேன். ஒரே ஒரு டோல் சாவடி இருந்தது. ஒரு வெள்ளி கட்டணத்தை காட்டியது. அவரிடம் சொன்னேன். “ஓ அப்படியா…?” என்றவர் கூடுதலாக ஐந்துவெள்ளியைச் செலுத்தினார். எனக்கு ஆச்சயமாக இருந்தது. நன்றி சொல்லிவிட்டு டெலிவரிக்கு கிளம்பினேன்.
20 நிமிடத்தில் அந்த முகவரியை அடைந்தேன். வீட்டில் இருந்து ஒருவர் வந்தார், அவரேதான் அது. அவர்தான் பொருளைக் கொடுத்து பணத்தையும் கொடுத்து அனுப்பினார். சிரித்தபடி பொருளை வாங்கி கொண்டார். அவரது வீட்டு வாசலில் மூன்று டெலிவரி வேலைகான மோட்டார் சைக்கில்கள் இருந்தது.
இங்கும் எங்களின் நண்பர்கள் இருக்கிறார்களா என்று கெட்டேன். “ஆமாம்.. நாங்களும் பகுதி நேரமா டெலிவரிதான் செய்றோம்… உங்க நண்பர்களுக்கு இன்னிக்கு விடுமுறை…” என்று சிரித்தார்.
எனக்குமே சிரிப்பு வந்தது. மழையும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்தது. கணக்கு செய்து பார்த்ததில் இன்றைக்கு தேவையான பணம் இருந்தது. அதோடு மணி ஐந்தை நெருங்கியது. வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்று நேராக வீட்டிற்கு புறப்பட்டேன்.
மறுநாள் நண்பரும் எழுத்தாளருமான ஶ்ரீகாந்தனைச் சந்தித்தேன். அதைப் பற்றிதான் எழுத தொடங்கினேன். ஆனால் எது எதையோ எழுதிவிட்டேன் பாருங்கள். அந்தச் சந்திப்பு பற்றி பிறகு எழுதுகிறேன்….
0 comments:
கருத்துரையிடுக