BMW-வும் Viva காரும்
காலையிலேயே கடனைக் கட்டச் சொல்லி குறுஞ்செய்தி வந்திருந்தது. வரிசையாக நான்கு நாட்களாக வந்துக் கொண்டிருப்பதுதான். அதற்காகவே தயாரானவன் போல வேகமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
கேசவனுக்கு ஊரைச் சுற்றி கடன். இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இல்லை. என்ன செய்வது என்றே பிடிபடவில்லை. யோசித்துக் கொண்டே தனது வீவா காருக்குச் சென்றான். காருக்கு ஊற்றிய பத்து வெள்ளி எண்ணையில் கடந்த நான்கு நாட்களாக ஒவ்வொரு இடமாக காரை மாற்றி மாற்றி நிறுத்தி வருகிறான்.
எப்போது வேண்டுமானாலும் தவணை கட்டாத தனது காரை யாராவது இழுத்துக் கொண்டுப்போக வாய்ப்புள்ளது. அதற்காகவே தினம் தினம் காரை வெவ்வேறு இடமாக நிறுத்திக் கொண்டிருக்கிறான். யார் கண்ணுக்கும் சட்டென தெரியாத இடத்தைதான் கேசவன் தேர்ந்தெடுப்பான்.
வீட்டு வாடகை, மளிகை சாமான் கடன், வாகன தவணை என சில மாதங்களாக 'நாளைக்கு..' 'நாளைக்கு..' என்றே நான்கு மாதங்களை கடத்திவிட்டான்.
போதாததிற்கு நண்பர்களிடம் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறான். நிலமை எப்படியும் சரியாகும் என அவனது மனைவி சொல்வது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் இல்லாமலில்லை.
எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டே தனது வீவா காரை மறைவான இடத்தில் நிறுத்திவிட்டான். காரை விட்டு இறங்கினான். இப்போதுதான் கவனித்தான். அவனது காருக்கு பக்கத்தில் வெள்ளை நிற பி.எம்.டபள்யு. அத்தனை அழகு. அதன் வடிவம் அதன் வளைவு அதன் அந்தஸ்த்து என நின்றவாக்கிலேயே ஆசையாசையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் வீவா-வை அங்கு நிறுத்துவது அவனுக்கு அவமானமாக இருந்தது. காரின் கறுப்பு கண்ணாடியில் உள்ளே இருப்பது எதுவும் தெரியவில்லை.
கேசவனின் முகத்தையே கண்ணாடி பிரதிபலித்தது. கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த அசிங்கமான கடன்கார முகத்தை அவனால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.
தன்னால் எப்போதும் வாங்க முடியாத கார் அது. அதன் அருகில் கூட தன்னால் நிற்க முடியாது என நினைத்தான். கோவப்பட்டான். ஏதாவது செய்ய வேண்டும் என அவனது கைகள் அரித்தது.
கீழே கிடந்த கல்லொன்றை எடுத்து பி.எம்.டபள்யூ-வில் ஒரு கோடு கிழித்தான். யாரும் பார்ப்பதற்குள் விறுவிறுவென நடக்கலானான்.
தூரத்தில் நடந்துக் கொண்டிருக்கும் கேசசனை அந்த பி.எம்.டபள்யூ காருக்குள்ளே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்களில் எந்த சலனமும் இல்லை. அவனது உடம்பில் எந்த அசைவும் இல்லை. கடன் தொல்லையால் தன் காரிலேயே விஷம் குடித்து அவன் தற்கொலை செய்து இன்றோடு மூன்றாவது நாள் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக