பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 29, 2025

- கவிதைகளே இவர்களுக்கு மன்னியும் -


சொல்ல முடியாத
சோகத்தைச் சுமந்தபடி
பாரம் தாங்காது

என்
விரல்கள் அழும்
கண்ணீர்த்துளிகளின் ஈரம்
ஒருபோதும்
காகிதத்தை நனைக்காமல்

கவிதைகளாய்ப்
பிறந்து அழுவதை
ஒரு தகப்பனாய்ப்
பார்த்து பூரிக்கின்றேன்

அந்த ஆராதனைகளுக்கே
எப்போதும்
அழுது கொண்டிருக்கிறேன்
சிலுவைகளுக்கும்
என்னை
முன்மொழிந்தபடி

கவிதைகளே
எங்களுக்கு தாயின் மடி


நவம்பர் 23, 2025

- அவரவர் அழும் நேரம் -


சிவப்பு விளக்கில்
மோட்டாரை நிறுத்தி
தலைக்கவசத்தைக் கழட்டி
அந்த உச்சி வெய்யில்
நேரத்தில்
சாலையோரத்தில்
தன்னைத்தானே தலையில்
அடித்துக் கொண்டான்
மூன்று முறை கன்னத்தில்
அரைந்து கொண்டான்
யார் பார்த்தால் எனக்கென்ன
என்றவாறு
காது கிழியும் சத்தத்துடன் கத்தினான்.

மஞ்சள் விளக்கில்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்
தலைக்கவசத்தை
மீண்டும் அணிந்து கொண்டான்
தொண்டையை செருமிக்கொண்டான்.

பச்சை விளக்கில்
அவன் பயணம் தொடர்ந்தது
தன் துயரை அனுபவிக்க
அவனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்
முடிந்தது

அடுத்த நிறுத்தத்தில்
மீண்டும் நிற்கும்வரை
அழுவதற்கு
நேரம் இருக்கப்போவதில்லை.  

நவம்பர் 20, 2025

- சுதந்திரமாய் ஓர் இரகசியன் -


நம்மிடம்
ஓர் இரகசியம்
இருக்க வேண்டும்
என எதிர்ப்பாக்கிறார்கள்

உண்மையிலேயே
நாம்
திறந்த புத்தகமாய்
இருந்தாலும்

அட்டை மடிப்புகளில்
எழுத்துகளின் இடைவெளிகளில்
பின்னட்டை விலை பட்டியலில்
முன்னட்டை ஓவிய குறிப்பில்
தேடிப்பார்க்கிறார்கள்

நம்மை அப்படியே தூக்கி
உதறவும் செய்கிறார்கள்

சூரிய வெளிச்சம்
காட்டிக்கொடுக்கும் தூசுகளை
முகர்ந்து
ஏதும் தகவல் உண்டா
என
மூச்சிழுத்து விடுகிறார்கள்

"சீ...
உன்னிடம் எந்தவொரு
இரகசியமும் இல்லை
நீ லாய்க்கற்றவன்"

என்று திட்டியபடி
விலகுகிறார்கள்

இப்போதெல்லாம்
இரகசியத்திற்கு கூட
இரகசியமாய் வாழ
சுதந்திரம்
இருப்பதில்லை...




நவம்பர் 18, 2025

- குற்றமே தண்டனை -


இன்று
கவிதைகளை திருடுவது
அவ்வளவு பெரிய குற்றமில்லை
என்றாலும்

எது கவிதையென்று
தெரியாமல் திருடுகிறவர்களை
எப்படித்தான்
மன்னிப்பது

அவர்கள் எழுதிய
கவிதைகளை
அவர்களையே
காலை மூன்று முறை
மதியம் இரண்டு முறை
இரவில் நான்கு முறை 
என
சாப்பாட்டிற்கு முன்
வாசிக்கச் சொல்லலாம்...

நவம்பர் 17, 2025

துணையாய் வரும் சொற்கள்

துணையாய் வரும் சொற்கள் -

‘தனித்த சொற்கள்’ எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உலக இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 22 கட்டுரைகள் கொண்டது. 2023-ம் ஆண்டு வெளிவந்தப் புத்தகம். தேசாந்திரி பதிப்பகம் வெளியீடு செய்திருந்தார்கள்.

என்னுடைய தனிப்பட்ட வாசிப்பின் மாற்றங்களுக்கு மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை மட்டுமே தன் வாசகர்கள் வாசிக்க வேண்டும் என எழுதுகின்றவர்கள் ஒரு பக்கம். என்னை வாசிக்கின்றவர்கள் இன்னொன்றையும் வாசிக்கத் தவறக்கூடாது என நினைத்து எழுதுகிறவர்கள் இன்னொரு பக்கம். எஸ்.ராமகிருஷ்ணன் இரண்டாம் வகை எழுத்தாளர்களின் முதன்மையானவர் என சொல்லலாம்.

அவருடைய புத்தகங்களில் அவர் அறிமுகம் செய்திருக்கும் படைப்புகள் ஏராளம். தான் வாசித்ததை இன்னொரு வாசகனும் வாசிக்க வேண்டும்  என மிகுந்த சிரத்தையுடன் அவற்றை அறிமுகம் செய்திருப்பார். என்னுடைய பல நண்பர்களுக்கு அவரது புத்தகங்களை நான் பரிசாகக் கொடுப்பதற்கு அதுதான் முதன்மையான காரணம்.  வேற்று மொழியோ நம்மால் வாங்கி வாசிக்க முடியாத புத்தகமோ என எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம் அதன் உள்ளடக்கத்தையும் அது ஏன் முக்கியமானது எனவும் நம்மால் இதன்வழி தெரிந்து கொள்ளமுடியும். தான் தெரிந்த கொண்ட குறைந்தபட்சத்தில் இருந்து தேங்கி நிற்பதும் அதனை அதிகப்படுத்துவதும் அவரவர் பாடு.

எஸ்.ராவின் ‘தனித்த சொற்கள்’ கட்டுரைத் தொகுப்பில்; ஆலன் பேடன், யுவான் ருல்ஃபோ, போஹுமில் ஹரபால், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெஸ்ஸே போன்ற உலக இலக்கியத்தில் முக்கியமாக கருதப்படும் படைப்பாளிகள் குறித்து எழுதியிருக்கின்றார்.  சமகால வாழ்வின் நெருக்கடிகளையும் அரசியல் சமூகப் பிரச்சனைகளையும் இலக்கியம் எப்படி பிரதிபலிக்கின்றது; அதன எவ்வாறு படைப்புகளாக மாற்றியுள்ளார்கள் என இந்தக் கட்டுரைகள் சொல்கின்றன.

‘கோமாலாவில் என்ன நடக்கிறது’ என்கிற கட்டுரையில்  மெக்சிகன் எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் ‘பெட்ரோ பராமோ’ என்னும் நாவல் குறித்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். நாவலை வாசிக்கும் முன் இந்தக் கட்டுரையை வாசிப்பது அந்நாவலை நமக்கு மேலும் நெருக்கமாக்கும்.

            ‘மார்க்வெஸின் கடைசி நாட்கள்’ கட்டுரையில் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைவிற்கு பின் அவரது அந்தக் கடைசி நாட்களைப் பற்றியும் தன் குடும்பம் எப்படி எதிர்கொண்டது எனவும் அவரது மகள் புத்தகம் எழுதியுள்ளதை சொல்கிறார். எவ்வளவோ எழுத்தாளர்கள் வருகிறார்கள் போகிறார்கள் ஒரு சிலர்தான் தன் உதிரத்தையும் தன்னைப்போல எழுத வைக்கிறார்கள் அல்லது தன்னைப் பற்றி எழுத வைக்கிறார்கள். ஒருவேளை அது அவரவர் பாக்கியமாக இருக்கலாம். இந்தக் கட்டுரையின் கடைசி பத்தியில் நம்மையும் ஒருகணம் கலங்க வைக்கின்றார். மார்க்வெஸின் மகள், அவரது அஸ்தியை விமானத்தில் கொண்டு செல்லும் போது அவரின் அருகில் ஒரு பெண் மார்க்வெஸ் எழுதிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தாராம். எழுத்தாளனின் அஸ்தியும் அவன் எழுதிய படைப்பும் சந்தித்துக் கொள்ளும் இத்தருணத்தை எப்படி நாம் வகைப்படுத்துவது.

            இலக்கியம் மீது ஆர்வம் இருப்பவர்களுக்கு ‘சித்தார்த்தா’ நாவல் பரிட்சயம். ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவலை நானும் நண்பர்களுக்கு பரிந்துரைத்துள்ளேன். ஆனால் ஹெர்மன் ஹெஸ்ஸே தனது இலக்கில்லாத நடைப்பயணங்களை குறித்து ஒரு புத்தகம் எழுதியிருப்பதை ‘அலைந்து திரிபவனின் உலகம்’ கட்டுரை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அந்தப் புத்தகத்தில் ஹெஸ்ஸேவின் கோட்டோவியங்களும் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றதாம். இந்தப் புத்தகத்தில் நடை பயணத்தை விரும்பும் ஜென் கவிஞர்களுக்கும் ஹெஸ்ஸேவுக்குமான பார்வை வித்தியாசங்களையும் தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார் கட்டுரையாசிரியர்.

            ‘கதாப்பாத்திரங்களைத் தேடுகின்றார் டிக்கன்ஸ்’ கட்டுரையில் டிக்கன்ஸ் எழுத்துகள் குறித்து பேசுகின்றார். அவரே வெளியிட்ட அவரது நாவலின் சுவாரஸ்யமான பின்னணியைப் பதிவு செய்கின்றார்.

            இப்படி உலக இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் குறித்து அவர்களது படைப்புகள் குறித்தும் பல்வேறு தகவல்களையும் அறிமுகங்களையும் ‘தனித்த சொற்கள்’ என்னும் இந்தப் புத்தகத்தில் நாம் வாசிக்கலாம்.

            அடுத்த நாம் வாசிக்க வேண்டிய ஏதோ ஒரு படைப்பாளியையோ புத்தகத்தையோ இந்தப் புத்தகம் நமக்கு எடுத்துக் கொடுக்கின்றது. அதை நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.


நவம்பர் 16, 2025

- ஜாலி,கூலி,காலி -


- ஜாலி, கூலி, காலி -

கைப்பேசியில் தமிழ் தட்டச்சு வந்த காலகட்டத்தில், தனக்கு தெரிந்த பொன்மொழிகள் பழமொழிகள் சினிமா பாடல் வரிகளை  எழுதி அதற்கு கீழ் காலை வணக்கம் மதிய வணக்கம் இரவு வணக்கம் என எழுதி பகிர்வார்கள். 

பிறகு அதையே பூக்கள், இயற்கை காட்சிகள், அழகான பெண்களின்  பின்னணி கொண்ட ஓவியங்களிலும் புகைப்படங்களிலும் எழுதி படங்களாக பகிர்ந்தார்கள்.

இப்போது கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் அதே மாதிரி அல்லது அதையே கவிதைகள் என்று நம்பிக்கொண்டு புத்தகங்களாக அச்சடித்துக் கொள்கிறார்கள். 

அப்படியும் அவர்களின் கவிதைகளின் கீழ், 'காலை வணக்கம்', 'மதிய, 'இரவு வணக்கம்' என்பதை போட்டுக்கொள்ளும் தைரியம் இன்னும் வரவில்லை.  

அதுவரைக்குமாவது அவர்களைப் பாராட்டலாம். 

***********

எழுதினவன் ஜாலி
அச்சடிச்சவனுக்கு கூலி
வாசிக்கிறவன் காலி...!
காலை/மாலை/மதிய/இரவு
வணக்கம் நண்பர்களே.....

#தயாஜி

வழி தப்பிய பறவைகள்


தீபத்திற்காய்ச்
சுடருக்கு நன்றி சொல்வாய்.
தீபம் கையேந்தித்
திரை மறைவில் பொறை வடிவாய்
தாங்கி நிற்பான்,
நினைந்திரு...
- ரவீந்திரநாத தாகூர்.

வாசிப்பில் 'வழி தப்பிய பறவைகள்'.
நவீந்திரநாத தாகூர் குறுங்கவிதைகள்.
பட்டு எம்.பூபதி தமிழாக்கம் செய்திருக்கிறார். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.
1998-ல் வெளியீடு கண்ட முதல் பிரதி.

பல ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு பழைய புத்தகக்கடையில் வாங்கி வைத்ததாய் நினைவு. சில நாட்களாக புத்தக அலமாரியை சுத்தம் செய்யும் போது கண்ணில் பட்டது.

சில வீடுகள் மாறியும் பல அட்டைபெட்டிகளில் ஏறி இறங்கியும்  தப்பி பிழைத்து இன்னமும் எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் தனக்கென ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தது.

இனியும் தாமதிக்கக் கூடாது என்று, உடனே வாசிக்க தொடங்கிவிட்டேன்.
வாசிக்க வாசிக்க தன்னுள் நம்மை ஈர்க்கின்றன கவிதைகள். சிலவற்றை மீண்டும் மீண்டும் வாசிக்கின்றேன்... 

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

நவம்பர் 15, 2025

- கடவுளும் கவிதைகளும் -


கடவுளை விடவும்
கவிதைகள் 
நம்பும்படி எழுகின்றன..

நீயும் நானும்
தனியல்ல எனும்
ஆதிநம்பிக்கையை
அவ்வளவு சீக்கிரத்தில்
கடவுளாலும் கொடுக்க முடிவதில்லை

கண்களை மூடி
நாம் பிரார்த்திப்பதைவிடவும்
இன்னொருவன் நமக்காக
பிரார்த்தித்திருக்கும் கவிதைகளை
வாசிப்பது

திறந்த கண்களுள் நுழைந்து
தீராத பக்கங்களை
உள்ளுக்குள் புரட்டும்
ஆண்டவனுக்கே வாய்க்காத
பேறு

கடவுளே
கொஞ்சம் பொறு

உன்னுடைய பக்தனுக்காக
நானும் ஒரு கவிதையை
எழுதிவிட்டு வருகிறேன்

அப்போதுதான்
அவனும் உன்னை
நேசிக்க ஆரம்பிப்பான்

அதற்கு முன் அவன்
தன்னையே நேசித்திருப்பான்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்