பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 17, 2025

துணையாய் வரும் சொற்கள்

துணையாய் வரும் சொற்கள் -

‘தனித்த சொற்கள்’ எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உலக இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 22 கட்டுரைகள் கொண்டது. 2023-ம் ஆண்டு வெளிவந்தப் புத்தகம். தேசாந்திரி பதிப்பகம் வெளியீடு செய்திருந்தார்கள்.

என்னுடைய தனிப்பட்ட வாசிப்பின் மாற்றங்களுக்கு மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை மட்டுமே தன் வாசகர்கள் வாசிக்க வேண்டும் என எழுதுகின்றவர்கள் ஒரு பக்கம். என்னை வாசிக்கின்றவர்கள் இன்னொன்றையும் வாசிக்கத் தவறக்கூடாது என நினைத்து எழுதுகிறவர்கள் இன்னொரு பக்கம். எஸ்.ராமகிருஷ்ணன் இரண்டாம் வகை எழுத்தாளர்களின் முதன்மையானவர் என சொல்லலாம்.

அவருடைய புத்தகங்களில் அவர் அறிமுகம் செய்திருக்கும் படைப்புகள் ஏராளம். தான் வாசித்ததை இன்னொரு வாசகனும் வாசிக்க வேண்டும்  என மிகுந்த சிரத்தையுடன் அவற்றை அறிமுகம் செய்திருப்பார். என்னுடைய பல நண்பர்களுக்கு அவரது புத்தகங்களை நான் பரிசாகக் கொடுப்பதற்கு அதுதான் முதன்மையான காரணம்.  வேற்று மொழியோ நம்மால் வாங்கி வாசிக்க முடியாத புத்தகமோ என எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம் அதன் உள்ளடக்கத்தையும் அது ஏன் முக்கியமானது எனவும் நம்மால் இதன்வழி தெரிந்து கொள்ளமுடியும். தான் தெரிந்த கொண்ட குறைந்தபட்சத்தில் இருந்து தேங்கி நிற்பதும் அதனை அதிகப்படுத்துவதும் அவரவர் பாடு.

எஸ்.ராவின் ‘தனித்த சொற்கள்’ கட்டுரைத் தொகுப்பில்; ஆலன் பேடன், யுவான் ருல்ஃபோ, போஹுமில் ஹரபால், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெஸ்ஸே போன்ற உலக இலக்கியத்தில் முக்கியமாக கருதப்படும் படைப்பாளிகள் குறித்து எழுதியிருக்கின்றார்.  சமகால வாழ்வின் நெருக்கடிகளையும் அரசியல் சமூகப் பிரச்சனைகளையும் இலக்கியம் எப்படி பிரதிபலிக்கின்றது; அதன எவ்வாறு படைப்புகளாக மாற்றியுள்ளார்கள் என இந்தக் கட்டுரைகள் சொல்கின்றன.

‘கோமாலாவில் என்ன நடக்கிறது’ என்கிற கட்டுரையில்  மெக்சிகன் எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் ‘பெட்ரோ பராமோ’ என்னும் நாவல் குறித்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். நாவலை வாசிக்கும் முன் இந்தக் கட்டுரையை வாசிப்பது அந்நாவலை நமக்கு மேலும் நெருக்கமாக்கும்.

            ‘மார்க்வெஸின் கடைசி நாட்கள்’ கட்டுரையில் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைவிற்கு பின் அவரது அந்தக் கடைசி நாட்களைப் பற்றியும் தன் குடும்பம் எப்படி எதிர்கொண்டது எனவும் அவரது மகள் புத்தகம் எழுதியுள்ளதை சொல்கிறார். எவ்வளவோ எழுத்தாளர்கள் வருகிறார்கள் போகிறார்கள் ஒரு சிலர்தான் தன் உதிரத்தையும் தன்னைப்போல எழுத வைக்கிறார்கள் அல்லது தன்னைப் பற்றி எழுத வைக்கிறார்கள். ஒருவேளை அது அவரவர் பாக்கியமாக இருக்கலாம். இந்தக் கட்டுரையின் கடைசி பத்தியில் நம்மையும் ஒருகணம் கலங்க வைக்கின்றார். மார்க்வெஸின் மகள், அவரது அஸ்தியை விமானத்தில் கொண்டு செல்லும் போது அவரின் அருகில் ஒரு பெண் மார்க்வெஸ் எழுதிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தாராம். எழுத்தாளனின் அஸ்தியும் அவன் எழுதிய படைப்பும் சந்தித்துக் கொள்ளும் இத்தருணத்தை எப்படி நாம் வகைப்படுத்துவது.

            இலக்கியம் மீது ஆர்வம் இருப்பவர்களுக்கு ‘சித்தார்த்தா’ நாவல் பரிட்சயம். ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவலை நானும் நண்பர்களுக்கு பரிந்துரைத்துள்ளேன். ஆனால் ஹெர்மன் ஹெஸ்ஸே தனது இலக்கில்லாத நடைப்பயணங்களை குறித்து ஒரு புத்தகம் எழுதியிருப்பதை ‘அலைந்து திரிபவனின் உலகம்’ கட்டுரை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அந்தப் புத்தகத்தில் ஹெஸ்ஸேவின் கோட்டோவியங்களும் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றதாம். இந்தப் புத்தகத்தில் நடை பயணத்தை விரும்பும் ஜென் கவிஞர்களுக்கும் ஹெஸ்ஸேவுக்குமான பார்வை வித்தியாசங்களையும் தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார் கட்டுரையாசிரியர்.

            ‘கதாப்பாத்திரங்களைத் தேடுகின்றார் டிக்கன்ஸ்’ கட்டுரையில் டிக்கன்ஸ் எழுத்துகள் குறித்து பேசுகின்றார். அவரே வெளியிட்ட அவரது நாவலின் சுவாரஸ்யமான பின்னணியைப் பதிவு செய்கின்றார்.

            இப்படி உலக இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் குறித்து அவர்களது படைப்புகள் குறித்தும் பல்வேறு தகவல்களையும் அறிமுகங்களையும் ‘தனித்த சொற்கள்’ என்னும் இந்தப் புத்தகத்தில் நாம் வாசிக்கலாம்.

            அடுத்த நாம் வாசிக்க வேண்டிய ஏதோ ஒரு படைப்பாளியையோ புத்தகத்தையோ இந்தப் புத்தகம் நமக்கு எடுத்துக் கொடுக்கின்றது. அதை நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்