பொய் சொல்லிப் பழகுவோம்
பொய் சொல்ல
கற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே
அதுவொன்றும் பெரிய
குற்றமில்லை
யாருக்கும் தெரியப்போவதுமில்லை
சொல்லப்போனால்
இந்தப் பொய்கள் மீது
மற்றவர்களுக்கு பொறாமைதான்
வருமே தவிர
கோவமெல்லாம் வராது
அப்படியே வந்தாலும்
அதுவும் அவர்கள் மீதுதான்
வரும்
நமக்கு எந்தச் சிக்கலுமில்லை
ஆனால்
இந்தப் பொய்களை
நாம் மனதார சொல்லவேண்டும்
அடுத்தவர் நம்புவதற்கு முன்
நாமே நம்மையும்
நாம் சொல்லும் பொய்யையும்
நம்பவேண்டும்
ஆழமாக
ரொம்பவும் ஆழமாக
தோண்டிய பின்
நாமே மேலேறி வர முடியாதபடிக்கு
ஆழமாக
அதை நாம்
நம்ப வேண்டும்
கண்டிஷனாக
காலை மூன்று வேளை
இரவு மூன்று வேளை
சொல்லியே தீரனும்
மதியத்தில் சொல்வதும்
சொல்லாததும்
அவரவர் பாடு
தனியாக அமர்ந்து கொள்ளுங்கள்
மூச்சை நன்றாக
மேலுக்கு ஒருமுறை
கீழுக்கு ஒருமுறை
என
முறையாக
மூன்று மேலும்
மூன்று கீழும்
விடவும்
ஒரேடியாக விட்டுவிடாதீர்கள்
கவனம்
கண்கள் இரண்டும்
புருவ மத்தியை
நோக்க வேண்டும்
காதுகளுக்கு இம்சை கொடுக்காத
எந்தப் பின்னணி இசையையும் வைத்து கொள்ளலாம்
இப்போது
நீங்கள்
பொய் சொல்ல
தயாராகிவிட்டீர்கள்
ஆரம்பிக்கலாம்
சொல்லுங்கள்
மனதார சொல்லுங்கள்
சந்தேகங்களின்றி சொல்லுங்கள்
முழுமையாக ஒவ்வொரு சொல்லையும் உணர்ந்து சொல்லுங்கள்
"நான் நன்றாக இருக்கிறேன்.."
"நான் நன்றாக இருக்கிறேன்.."
"நான் நன்றாக இருக்கிறேன்.."
0 comments:
கருத்துரையிடுக