- நஞ்சுண்ட சொற்கள் -
என்ன பேசுவது
எப்படிப் பேசுவது
என்பதெல்லாம்
எனக்குமே
எப்போதும் பிடிபடுவதில்லை
அறிவிற்கும் அகப்படுவதில்லை
எதையோ
பேசிவிடுகிறேன்
எதையாவது
சொல்லிவிடுகிறேன்.
சொன்ன வார்த்தைகள்
எல்லாம்
யார் யார் காதுக்கும் சென்று
யார் யார் வாய்க்கும் மென்று
வெவ்வேறு அர்த்தமாய்
வளர்ந்து நின்று
என்னைப் பார்த்து
சிரித்து பயம் காட்டுகின்றன
வளர்த்த கடா
மாரில் பாய்ந்த கணக்காய்
பார்த்துப்பார்த்து
நான் வார்த்த வார்த்தைகள்
என் மாரிலே
குத்தி கூர் பார்க்கின்றன
குதித்து வரும் இரத்தத்தையும்
குடித்தும் விடுகின்றன
வளர்ந்த கடா மட்டுமல்ல
இவர்கள் வளர்த்துவிடும்
வார்த்தைகளையும்
இனி
நம்புவதற்கில்லை
யார்யாரோ போட்ட தீனிக்கு
வளர்ந்து நிற்கும்
நம் வார்த்தைகள்
ரொம்பவும் ஆபத்தானவை
"நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை...!"
என்பதை
நாம்கூட நம்பாதபடிக்கு
வார்த்தைகள் நன்றி கெட்டவையாய்
நடப்பதில் ஆச்சர்யம்
இருப்பதில்லை
செஞ்சோற்றுக் கடனில் இருந்து
யாரால்தான் தப்பிக்க இயலும்...
0 comments:
கருத்துரையிடுக