- தீக்குள் விரலை வைத்தால்.... -
புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் பேசுவார். அவர் பேசுகின்றார் என்றாலே கூட்டம் சேர்ந்துவிடும். அவரின் சிறப்புகளில் ஒன்று கர்த்தரைப்பற்றியும் பேசுவார் கந்தனைப் பற்றியும் பேசுவார் நபிகள் நாயகம் பற்றியும் பேசுவார். எது பேசினாலும் யாரை உதாரணமாகச் சொன்னாலும் அதனால் மனித சமூகத்திற்கு ஏதும் நன்மை உண்டா எனதான் அவர் யோசிக்கிறவராக இருப்பார்.
நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாது சென்றுவிடுவேன். ஆனால் எனக்குள் ஏதோ ஒரு குறை இருந்தது. முழுமையற்ற குழப்பம் என்னைத் தொல்லைப்படுத்தி கொண்டே இருந்தது.
இன்று அவர் மகாகவி பாரதியின் கவிதைகளில் சிலவற்றை உதாரணம் கூறினார். "தீக்குள் விரலை வைத்தால்....." என்று பாடிக்கொண்டே மேடையில் இருந்த குத்திவிளக்கின் தீபத்தில் தன் கைவிரலை வைத்துவிட்டார். அவர் கைவிரல் சுடவில்லை. கவிதையை வாசித்து முடிக்கும்வரை கைவிரல் தீபத்திலேயே இருந்தது.
நான் உட்பட அரங்கமே கைத்தட்டியது. எங்கள் கண்கள் கலங்கின. எப்படியான மனோசக்தியை அவர் கைவரப் பெற்றிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தத் தீ எப்படி இவர் விரலை சுடவில்லை என சட்டென கேட்டுவிட்டேன். அவர் என் கண்களை ஆழமாகப் பார்க்கலானார். என்னை அருகில் அழைத்தார்.
"என் விரலை நல்லா பார்த்தீங்களா ?" என்றார்.
"சார் நான் உங்க விரலை மட்டும்தான் பார்த்தேன்.. எப்படி நெருப்பு சுடவில்லை...?"
"இந்தப் பக்கத்தில் என் விரலை மட்டுமல்ல.. அந்தப்பக்கம் இருந்த தீபத்தையும் நீங்கள் கவனித்திருக்கனும்'
"ஏன் சார்...?"
"ஏன்னா.. அது தீ உள்ள தீபம் அல்ல. மின்சார விளக்கு பொருத்திய குத்துவிளக்கு...."
சொல்லிவிட்டு சிரித்தபடி விடைபெற்றார். அவரின் அந்த பதில் தரிசனமாக மாறி என் வாழ்வை மாற்றியது. இப்போதெல்லாம் என் மனம் தேவையில்லாமல் குழம்புவதில்லை.
நந்தலாலா...நந்தலாலா......
0 comments:
கருத்துரையிடுக