-'சிங்கியா மங்கியா' என்றொரு நாடு-
பலரும் நன்கு அறிந்த சிறு நாடு. பரப்பளவு எவ்வளவு இருந்தாலும் நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்த அரசாங்கம் அவசியம்தானே. அங்கும் ஓர் அரசாங்கம் அமைந்திருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்ற விசாரணையால் 'சிங்கியா மங்கியா' நாடு மிகவும் பிரபலமானது. அரசாங்கப் பணியில் இருக்கும் முக்கிய அதிகாரியும் அரசியல்வாதியுமானவர் செய்த பண மோசடி அம்பலத்திற்கு வந்தது. என்னதான் அரசாங்கத்தின் முக்கிய பணியில் உள்ளவரென்றாலும் பொது மக்களின் பணத்தை கையாடல் செய்தது அந்நாட்டில் பெருங்குற்றம்.
'சிங்கியா மங்கியா' நாட்டு அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். மக்களை எப்போதும் குழப்பத்தில் விடாத அரசாங்கம். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் அரசாங்கம்.
அந்த அரசாங்கம், இவ்வாறான குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்ற ஒற்றைக்குறிக்கோள் கொண்டவர்களின் கூடாரம்.
அதிகப்படியான விசாரணைகள் ஏதுமின்றி, உடனடி தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசாங்க அதிகாரியும் அரசியல்வாதியுமாகியவரின், அனுமதியின்றி அவர் செய்த பண மோசடிகளைக் கண்டறிந்த அவரின் பணியாளருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. என்ன இருந்தாலும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நன்மதிப்பு குலையக் காரணமான நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படதான் வேண்டும் என்றும் ஆளுக்கு ஆள் கூறிக்கொண்டார்கள்.
அதன் பின் எந்தக் குற்றமும் 'சிங்கியா மங்கியா'வில் பதிவாகவில்லை என்பது தனிவரலாறு.
அந்த தீர்ப்பிற்கு பிறகுதான் 'சிங்கியா மங்கியா' என்ற நாடு காலப்போக்கில் காணாமல் போனது. யாருக்கு தெரியும் அந்நாடு இப்போது வேறொரு பெயர் வைத்துக்கொண்டிருக்கலாம்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை
0 comments:
கருத்துரையிடுக