பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 02, 2020

#கதைவாசிப்பு_2020_1 'அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது'


#கதைவாசிப்பு_2020_1

கதை – அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
புத்தகம் – அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது




     புத்தகத்தின் தலைப்பிலானது இக்கதை. சிறுகதை என்பதையும் தாண்டி நாவலை படித்துவிட்டதாய் எண்ணத் தோன்றியது. புதிய உலகத்தை புதிய பழக்க வழக்கங்களை, நமக்கு இதுவரை புலப்படாத மக்களை இக்கதையில் பார்க்க முடிகிறது.

     திரிசடை என்னும் தீவு. முத்து குளிப்பதற்கு பிரசித்தி பெற்றது. அங்கு விளையும் முத்துகள் வழக்கமான முத்துகளைவிட பிரசித்தி பெற்றது. ஆனால் வெளி மக்கள் கைகளில் அம்முத்துகள் கிடைப்பது அத்தனை எளிதல்ல.

     விக்டோரிய மகராணிக்கு எப்படியோ அந்த முத்தின் மீது காதல் வந்துவிடுகிறது. ஒன்று கிடைத்தாலும்கூட போது என்கிற மனநிலைக்கு வந்திருந்தார். உடனே இரு குழுக்கள் அந்த திரிசடை தீவுக்கு புறப்படுகிறார்கள். ஓராண்டு காலம் ஆகியும் யாரும் திரும்பவில்லை.

     அவர்களை அடுத்ததாத மேலும் முப்பது வீரர்களை அனுப்புகிறார்கள். ஆனால் அந்த முப்பது வீரர்களின் உடல்களும் விஷம் பாரித்த நிலையில் கடலில் சில வணிகர்களால் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.

அந்த தீவு குறித்த பல விசித்திர செய்திகள் தெரியவருகின்றன.

     டக்ளஸ் பிராங் என்னும் வீரன் தன்னை உயர்த்திக்காட்டுவதற்கு  அரசாங்கத்தால் சில உதவியாளர்களுடன் அந்த தீவிற்கு புறப்படுகிறான். அந்த வீரன் எப்படிபட்டவன், அரசருக்கு அவன் மீது நம்பிக்கை எப்படி வந்தது என சொல்லுவது சுவாரஷ்யமாக இருந்தது.

     தான் நினைத்தது போலவே அந்த தீவை அடைந்தும் விடுகிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்கள் அவர்கள் கண்களில் இவன் காணும் புறக்கணிப்பு எல்லாமே அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

     அந்த விசித்திர மக்கள் இயற்கையோடு ஒன்றி இருக்கிறார்கள். மழைக்கும் வெயிலுக்கும் கூட அவர்களை மிகவும் பிடித்திருக்கிறது. வீரனுடன் சென்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக பைத்தியமாகிறார்கள். இறக்கிறார்கள்.

     காலம் கடந்துக்கொண்டே போகிறது. வீரன் மிகவும் சோர்ந்துவிட்டான். அப்போதுதான் அவன் பக்கம் அதிஷ்ட காற்று வீசுகிறது. அந்த திரிடை தீவு மக்கள் அந்த வீரனை என்ன செய்தார்கள். முத்து கிடைத்ததா இல்லையா என்பது வாசகர்களின் வாழ்வில் வைக்க வேண்டிய கேள்வியாக அமைந்துவிடுகிறது.

     உண்மையில் நாம் வாழ்வது நமக்காகத்தானா? நாம் இழப்பதும் நமக்காகதான என்கிற கேள்விகளை கதை வாசித்து முடித்தப்பின் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வைக்கிறது.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்