பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 05, 2020

#கதைவாசிப்பு_2020_3 'வயதின் கனவுகள்'

#கதைவாசிப்பு_2020_3
கதை – வயதின் கனவுகள்
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
புத்தகம் – அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது


    இயல்பாகவே எஸ்.ராவின் கதைகளின் சிறுவர்கள் வந்தால் அத்தனை ஆர்வம் வருமெனக்கு. சிறுகதையோ நாவலோ கட்டுரையில் கூட நான் ஏமாற்றம் அடைந்ததில்லை. அதில் அந்த சிறுவர்களின் உரையாடல்கள், அவர்களின் வெகுளி, அவர்களின் சந்தேகங்கள் என எல்லாமே நேர்த்தியாக வாசிப்பவர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும்.

    ஆனந்த விகடனுக்கு அவர் எழுதியிருந்த தொடரில் ஓர் அத்தியாத்தில் சிறுமி வருவாள். இன்றும் அந்த முகமறியா சிறுமு என்னை அலைக்கழித்துகொண்டே இருக்கிறாள். ஏதாவது ஒரு தருணத்தில் எனக்கு அந்த சிறுமியின் நினைவு வந்துவிடுகிறது.

   ஓர் ஏழ்மையான குடும்பம். அப்பா அடிக்கடி மகளை கடன் வாங்க அனுப்புகிறார். பண கடன் முதல் மளிகைக் கடையில் கடன் நண்பர்களிடம் கடன் என ஊர் முழுக்க கடனாகிப்போனது. ஒவ்வொரு முறையும் அச்சிறுமி கடன் வாங்கச்செல்லும் போது பலர் உதாசினம் செய்வார்கள். அவள் முன்னமே ஏதேதோ பேசுவார்கள். நிச்சயம் கடனைக் கொடுத்துவிடுவோம் என அச்சிறுமி கெஞ்சியும் கடன் வாங்கியது உண்டு.

   ஏதோ காரணத்தால் ஒரு நாள் இரவோடு இரவாக அவர்கள் குடும்பமாக ஊரைக் காலி செய்கிறார்கள்.

   மறுநாள் செய்தி அறிந்து கடன் கொடுத்தவர்கள் அந்த வீட்டை திறந்துப் பார்க்கிறார்கள். கடனை கழித்துவிடுவது போல அங்கிருந்து எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை.

   ஆனால், அங்கு சுவர் முழுக்க யார்யாரிடம் எவ்வளவு எப்போது கடன் வாங்கினாள் என்று அச்சிறுமி எழுதி வைத்திருக்கிறாள். 

   ஓடிப்போகிறவர்கள் ஏன் அப்படி செய்தார்கள். அச்சிறுமி எதற்காக எந்த நம்பிக்கையில் அப்படி சுவர் முழுக்க எழுதினாள் என்ற மனப்பதட்டம் இன்னும் கூட எனக்கு தீர்ந்துவிடுவதில்லை. இன்றும் கூட அப்பா சொன்னார் அம்மா சொன்னார் என கடன் கேட்டு வரும் சிறுவர்களிடமும் மளிகைக்கடையில் '555' எனும் கையடக்க குறிப்பு புத்தகத்தைக் கடன் வாங்கும் சிறுவர்களை பார்க்கையில் இது அவர்கள் மீதான உளவியல் வன்முறை இல்லையா என் கேட்டுக்கொள்கிறேன்.

   எஸ்.ராவின் 'வயதின் கனவுகள்' சிறுகதையில் ஒரு சிறுவன் வருகிறான். கையில் வைத்துப்பாத்க்கும் வட்டக்கண்ணாடியை அவனது அப்பா கொடுக்கிறார். ஊரில் கண்ணாடி வைத்திருப்பவர்களே குறைவுதான். அச்சிறுவன் தான் கண்ட உலகத்தை கண்ணாடிக்கு காட்ட நினைக்கிறான். இதுவரை தன்னை மட்டும் பார்த்த உலகம் கண்ணாடி வழி தன்னைத்தானே பார்க்கின்ற வாய்ப்பைக் கொடுத்து மகிழ்கிறான். மரம் வயல் வானம் கிணறு ஓணான் என எல்லாவற்றுமே தன்னை கண்ணாடியில் பார்க்க வைக்கிறான். கிணற்றில் இருந்து ஒட்டிவந்ததாய் தோன்றிய தவளைக்குஞ்சி கண்ணாடியில் பார்த்து அதை உடைக்கிறான். அதுவெல்லான் கனவுதானா என்கிற குழப்பம் வேறு வந்துவிடுகிறது.

   களிமண் செய்ய கற்றுக்கொண்டதும் அதன் நினைவுகளையு. அடுத்ததாக சொல்கிறான். தான் செய்திருந்த களிமண் மீனை ஆற்றில் விட அது நீந்தவும் செய்கிறது.

   கீழே  வெற்றிலைக் கறை மடிந்த காசு கிடைக்கிறது. அடுத்து பால் ஐஸ் வாங்கித்தின்கிறான். நண்பன் மூலம் அக்காசு திருஷ்டி களிப்பு செய்து சுற்றிப்போடும் காசு. அதை பயன்படுத்தினால் இரத்த வாந்தி எடுத்து சாவார்கள் என்று கூறி அவனது வீட்டார்க்குச் சொல்ல ஓடுகிறான். அதன் பின் நடப்பதையெல்லாம் மெல்லிய சிரிப்பில்லாமல் கடக்க இயலவில்லை. வீட்டில் இவனுக்கு பரிகாரம் செய்த்கிறார்கள்.
அவனுக்கு அந்த காசை வாங்கிய ஐஸ்வண்டிக்காரர் நினைவு வருகிறது.
அவரும் விபரம் அறிந்து சிறுவன் வீட்டில் வந்து பிரச்சனை செய்கிறான்.

    எல்லாம் போக தனக்காக செய்த பரிகாரத்தில் வீசியெறித்த இன்னொரு காசை குறித்து சிறுவன் சிந்திக்கிறான். நிச்சயம் அதனை இன்னோர் சிறுவன் எடுத்திருக்கக்கூடும் அது யாராக இருக்கும் என ஆழ்ந்து யோசிக்கலானன் சிறுவன்.

    வேடிக்கைகள் நிறைந்த இக்கதை மீண்டும் நம் பால்ய நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது. ஆனால் இன்றைய புது தலைமுறைகளுக்கு அப்படியான பசுமை பால்ய அனுபவங்கள் கிடைக்காமல் இருப்பது மனதுக்கு வருத்தத்தைக் கொடுக்காமலில்லை.



#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்