கடவுளே...!
எத்தனை கொடுமையான வாழ்க்கை இது!. அழுவதா சாவதா என்று தெரியவில்லை. கூடாது.. சாகக்கூடாது.. சாகடிக்க வேண்டும்...
என்பதுதான் அவனை இப்போது வழி நடத்திக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று ஒரு கொலை உறுதி. சொல்ல முடியாது. இரண்டு கொலைகளாகவும் இருக்கலாம். ஆனால் அந்த குழந்தையைக் கொல்வதற்கு மனது வருமா என தெரியவில்லை. வரலாம். அவளில் துரோகத்திற்கான சம்பளம் அதுவாகத்தான் இருக்கும்.
கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து அழைத்திருந்தார்கள். சமீபத்திய உடல் பரிசோதனைக்கான விபரங்களை கேட்டிருந்தான். சில காரணங்களால் எல்லாவற்றையும் பரிசோதித்திருந்தார்கள். பலரை அழைக்கவேண்டியுள்ளதால் அவசரமாக விசயத்தை சொல்ல முயன்றுக் கொண்டிருந்தார்.
நர்ஸ் சொல்வதை முழுமையாகக்கூட அவனால் கேட்க முடியவில்லை. அதற்குள் கண்கள் இருட்டிவிட்டன. காதுகள் அடைத்துக் கொண்டன. தொலைபேசியை பாதியிலேயே துண்டித்தான்.
மனைவியின் முகமும் தன் குழந்தையின் முகமும் கண் முன் வந்துப்போனது. இல்லை இனி அது அவனது குழந்தை இல்லை. அதைத்தான் நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதை விடவும் தனக்கு ஒரு குழந்தை இருப்பதுதான் அவனை மெல்ல மெல்ல மிருகமாக்கிக் கொண்டிருக்கிறது.
மனிதனாக வெளியேறியவன் மிருகமாக வீட்டிற்குள் நுழைந்தான். நேராக சமையல் அறைக்குச் சென்றான். அங்குள்ள கத்தியை எடுத்தான். அந்த கத்தி அவனது கைக்கு நேர்த்தியாகப் பொருந்தியது. அது கத்தியல்ல அவனது வலது கையாக மாறிவிட்டது.
படுக்கையறைக்குச் சென்றான். குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அருகில் சென்றான். கட்டிக்கொண்டு ஏமாற்றியவளையா ? அல்லது பிறந்து இருக்கும் இந்த ஏமாற்றத்தையா ? யாரை முதலில் கொல்வது என முடிவெடுக்கத் தயாரானான்.
அறைக்குள் அப்போது நுழைந்த மனைவி, "ஏங்க நர்ஸ் கூப்டிருந்தாங்க.. உங்க போன் பாதியிலேயே கட் ஆச்சாம்.. கூப்டும் கிடைக்கலையாம்... ஏதோ ரிப்போட் மாறிப்போச்சாம்... சோரி சொன்னாங்க.. நாளை ஆஸ்பிட்டல் வந்து ரிப்போர்ட் எடுத்துக்கச் சொன்னாங்க...."
அவனது கண்களில் இருந்த இருள் மறைந்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டான். கத்தியை மெல்ல மறைத்தான். அப்படியே கண்களை மூடி கடவுளே...! என்றான்.
அப்போது அவளும் கண்களை மூடி, கடவுளே..! என்கிறாள்.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக